ஜனவரி 08

அர்ச். அப்போலினார் - மேற்றிராணியார் (கி.பி. 175).

ஆதியில் வேதக் கலாபனைக் கொடுமையாய் நடந்தேறி வந்தது. அப்போலினார் காலத்தில் அரசரும் பிரஜைகளும் சத்திய கிறீஸ்தவர்களை வேதத்தினிமித்தம் கொடூரமாய் வதைத்துக் கொன்றார்கள். 

அக்காலத்தில் உரோமை இராயனான மார்க்குஸ் அவ்ரேலியஸ் ஜெர்மன் தேசத்தின்மேல் படையெடுத்துப் போனான். அவனுடைய படைகள் தங்கியிருந்த இடம் மலைகளால் சூழப்பட்டு பின்னடைவதற்கு வசதியற்ற இடமாயிருந்தபடியால், அங்கிருந்து தப்பித்துக்கொள்ள சாத்தியப்படாமலிருந்ததுடன், தண்ணீர் பற்றாக் குறையினாலும் இராணுவம் வருந்தித் தவித்தது. 

அந்நேரத்தில் எதிரிகள் போரைத் தொடங்க, கிறிஸ்தவர்களாயிருந்த இவனுடைய சேனையின் ஓர் பகுதியார் முழந்தாளிலிருந்து சர்வேசுரனைப் பார்த்துப் பிரார்த்திக்கவே, இடி முழக்கத்துடன் ஒரு பெரும் மழை பெய்தது. மழைத் தண்ணீரால் உரோமையர் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொண்டு எதிரிகளை எதிர்த்துப் போரிட்டார்கள். 

இந்த மழையால் எதிரிகளுக்கு மிகுந்த சேதமுண்டாக, அவர்கள் புறங்காட்டி ஓட்டம் பிடித்தார்கள். இந்த அற்புதத்தைக் கண்ட உரோமை இராயன் அதிசயித்து அந்தக் கிறீஸ்தவ படைக்கு 'இடி முழக்கப் படை' என்று பெயர் கொடுத்தான். 

அர்ச். அப்போலினார் இராயனுக்கு ஒரு விண்ணப்பம் எழுதி, அதில் கிறீஸ்தவ வேதத்தின் படிப்பினையை விவரித்துக் காட்டினதுடன், கிறீஸ்தவ சேவகர்களுடைய வேண்டுதலால் அவனுடைய கண்ணுக்குமுன் நடந்த அற்புதத்தையும் எடுத்துக்காட்டி, வேத கலாபனையை நிறுத்தும்படி அவனைக் கேட்டுக்கொண்டார். 

இதனால் இராயனுடைய மனம் இளகி, வேதத்தினிமித்தம் எந்த கிறிஸ்தவர்களையும் கொலை செய்யக்கூடாதென்று ஓரு சட்டத்தை வெளியிட்டான். அர்ச். அப்போலினார் பல நூல்களைப் பிரசுரஞ் செய்து அர்ச்சியசிஷ்டவராக மரித்தார்.

யோசனை 

சத்திய வேதத்தைப்பற்றிப் பேச நமக்கு சமயம் வாய்க்கும்போது, விமரிசையுடன் பேசுவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். செவெரினுஸ், ம. 
அர்ச். பெகா, க. 
அர்ச். வுல்சின், மே. 
அர்ச். குதுலா, க.