அன்பின் பெரும் அதிசயமான திவ்விய நற்கருணை நிந்திக்கப்படுகிறது 07-03-1923

என் இருதயம் அனுபவிக்கும் வேதனையைப்பற்றி இன்று எழுது. என் இருதயத்தில் பற்றி எரிந்த தீயினால் தூண்டப்பட்டு, நேசத்தின் பெரும் அதிசயமான திவ்விய நற்கருணையை நான் உண்டாக்கினேன். இந்த வானக மன்னாவை உண்ணும் ஆத்துமங்களை நான் பார்த்த பொழுது, எனக்கு வசீகரம் செய்யப்பட்டவர்களும், குருக்களும் தங்களுடைய தளர்ச்சியினால் இந்த திருவருட்சாதனத்தில் என்னைக் காயப்படுத்துவதையும் நோக்கினேன். வழக்கத்தினாலும், சலிப்பினாலும் நாளடைவில் குளிர்ச்சியையும் அசட்டைத்தனத்தையும் கொள்ளும் பல ஆத்துமங்களை நான் பார்த்தேன்.

எனினும் இன்னும் நான் அந்த ஆத்துமத்துக்காக திவ்விய நற்கருணைப் பேழையில் காத்திருக்கிறேன். அந்த ஆத்துமம் என்னிடம் வரும். ஒரு மனைவி தன் கணவனிடம் அன்போடு உரையாடுவது போல் அது என்னிடம் உரையாடும். ஆலோசனையும், வரப்பிரசாதமும் என்னிடம் கேட்கும் என எதிர்பார்த்து நிற்கிறேன்.

"வா! தாராளமாய் நாம் எல்லாவற்றையும் பற்றிப் பேசுவோம். பாவிகளைப் பற்றி நீ அக்கறை காண்பிப்பாயாக. அவர்களுக்காக நிந்தை பரிகாரம் செய்ய உன்னை ஒப்புக் கொடு. இன்றாவது நீ என்னை விட்டுச் செல்லமாட்டாய் என உறுதி கூறு. பின், என் இருதயம் அதைத் தேற்றும்படி உன்னிடம் ஏதாவது அதிகம் கேட்கிறதா என யோசித்துப் பார்" என நான் அந்த ஆத்துமத்திடம் சொல்கிறேன்.

அந்த ஆத்துமத்திடமிருந்தும் மற்ற பல ஆத்துமங்களிடமிருந்தும் நான் அதிகம் எதிர்பார்க்கிறேன். அப்படியிருந்தும் திவ்விய நற்கருணை வழியாக அது என்னை உட்கொண்டதும் அது என் வருகையை முதலாய் பெரிதாக எண்ணாமல் வேறு காரியங்களைப் பற்றியே நினைக்கிறது, அல்லது சலிப்பா - யிருக்கிறது. தன் பணிகள், குடும்பக் கவலைகள், உடல் நலம் இவைப்பற்றியே அது நினைத்துக் கொண்டிருக்கிறது. நேரம் போக மாட்டேனென்கிறதே என அது நினைக்கிறது. நீண்ட இரவு முழுவதும் உனக்காக ஆவலுடன் காத்திருந்த என்னை , ஓ ஆத்துமமே, நீ எவ்விதம் வரவேற்கிறாய்!

நான் அதன் கவலைகளில் பங்கு பெறலாமென்றும் .... அதற்கென வைத்திருக்கும் புது வரப்பிரசாதங்களைக் கொடுக்கும்படியாகவும் நான் அதன் வருகைக்காகக் காத்திருந்தேன். ஆனால் அது அவற்றைப்பற்றி கவலை கொள்வதில்லை. அவைகளை விரும்புவதில்லை, என்னிடமிருந்து ஒன்றும் கேட்பதில்லை, என்னிடம் ஒன்றும் பேசாது ஏதோ முணுமுணுத்து விட்டுப் போகிறது. அப்படியானால் அது என்னிடம் ஏன் வந்தது? வழக்கத்தினால் வந்ததா? அல்லது தன்னிடம் சாவான பாவம் இல்லை என்றா? நேசத்தினால் தூண்டப்பட்டு அல்லது என்னுடன் ஒன்றிக்கப்பட வேண்டும் என்னும் எண்ணத்துடன் அது என்னிடம் வரவில்லை. ஐயோ! நான் எதிர்பார்த்திருந்தவை கிடைக்கவில்லை.

குருக்களைப் பற்றி என்ன சொல்வது? நான் அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பவைகளை யார் விவரிக்க முடியும்? பாவங்களை மன்னிக்கும்படி அவர்கள் எனது அதிகாரத்தையே பெற்றிருக்கின்றனர். விண்ணகத்திலிருந்து பூமிக்கு வரும்படி அவர்கள் என்னை அழைக்கையில் நான் அவர்களுடைய சொல்லுக்குக் கீழ்ப்படிகிறேன். என்னை முழுதும் அவர்கள் கரங்களில் கையளித்து விடுகிறேன். என்னை அவர்கள் நற்கருணைப் பேழையில் வைக்கலாம் அல்லது விசுவாசி - களுக்குக் கொடுக்கலாம்.

அவர்கள் தங்கள் முன்மாதிரிகையான நன்னடத்தையினால் ஆத்துமங்களை புண்ணியப் பாதையில் நடத்தும்படி ஆத்துமங்களை அவர்களிடம் ஒப்படைத்திருக்கிறேன்.

அவர்கள் தரும் பதில் என்ன? தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நேசத்தின் பணிகளை மறந்து திரியும் குருக்கள் இல்லையா?

பீடத்தில் குரு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பவர் - களைப் பற்றி இன்று ஏதாவது சொல்வாரா? எனக்கு வருவிக்கப்படும் நிந்தைகளுக்கு ஏதாவது பரிகாரம் செய்வாரா? தன் திருத்தொண்டின் அலுவல்களை நிறைவேற்றுவதற்கு அவசியமான வரப்பிரசாதங்களை என்னிடம் கேட்டு மன்றாடுவாரா? ஆத்தும் இரட்சணியத்தில் ஆவலும், பிறரன்பின் பொருட்டு தன்னை தியாகம் செய்வதில் தைரியமும் நேற்று இருந்ததை விட இன்று அதிகமாகக் காண்பிப்பாரா? தன் முழு நேசத்தையும் என்மீது வைப்பாரா? நம்பிக்கைக்கும் அன்புக்கும் தகுதியான சீடனைப்போல் அவர்மீது நான் முழு நம்பிக்கை வைக்கலாமா?

"உலகமானது என் கைகளிலும் பாதங்களிலும் காயப்படுத்தி என் முகத்தை கோரப்படுத்துகிறது. என்னுடைய தெரிந்தெடுக்கப்பட்ட துறவிகளும் குருக்களுமோ என் இருதயத்தை நொறுக்குகிறார்கள்" என நான் சொல்ல நேரிடும்போது என் உள்ளம் உடைவது போலிருக்கிறது,

கடைசி இராவுணவின்போது பன்னிருவரின் நடுவே யூதாசை பார்த்தபோது நான் எவ்வளவு துயரப்பட்டிருப்பேன் என நீ இப்பொழுது அறிகிறாய். அவன் தான் முதல் துரோகி! அவனுக்குப் பின்னர் எத்தனையோ பேர்!

நேசத்தினால் தூண்டப்பட்டே நான் திவ்விய நற்கருணையை ஏற்படுத்தினேன். ஆத்துமங்களுக்கு அது உயிர், திடன், எல்லா குற்றங்களுக்கும் ஒரு மருந்து; நித்தியத்துக்குச் செல்லும் வழிப்பயணத்துக்கான உணவு.

அதில் பாவிகள் சமாதானம் அடைகிறார்கள். புத்துயிர் தரும் வெப்பத்தினை குளிர்ச்சியுள்ளவர்கள் பெறுகின்றனர். பக்தியுள்ள ஆத்துமங்கள் அமைதியும் தங்கள் ஆசைகள் நிறைவேறுவதையும் கண்டடைகின்றனர். புனிதமிக்க ஆத்துமங்கள் மென்மேலும் புனிதத்துவத்தை நோக்கிப் பறக்க உதவும் இறக்கைகள் பெறுகின்றன.

எனக்கு தங்களை வசீகரித்திருக்கும் ஆத்துமங்கள் ஓர் உறைவிடமும் ஆழ்ந்த அன்பும் உயிரும் அதில் காண்கின்றன. ஆதலால் தங்கள் விண்ணக மணவாளனுடன் தங்களை மிக நெருக்கமாகவும், பிரிக்கவியலாத விதமாகவும் ஒன்றிக்கும் இணைப்புக்களின் மாதிரியை அவர்கள் காண்பார்கள்.