திவ்விய நற்கருணையும் கடவுளின் சேவைக்கு கையளிக்கப்பட்ட ஆத்துமங்களும் 06-03-1923

ஜோசபா, தங்களை எனக்கு வசீகரம் செய்திருக்கும் ஆத்துமங்களைப் பற்றி இன்று நான் சொல்லப் போகிறேன்.

நான் திவ்விய நற்கருணையை ஏற்படுத்த விருந்த வேளையில், என்னுடைய உடலாலும், இரத்தத்தாலும் பாதுகாக்கப்பட்டு, தங்களுடைய குற்றங்களுக்கு ஒரு மருந்தினையும், குறைகளைச் சுட்டெரித்து தங்கள் நேசத்தை பற்றியெரியச் செய்யக்கூடிய நெருப்பையும் இந்த திவ்விய நற்கருணையில் கண்டடையும் பாக்கியவான்களின் கூட்டத்தையும் பார்த்தேன்.

நன்கு சுற்றி பாதுகாக்கப்பட்டுள்ள ஒரு தோட்டத்தினுள் இருப்பதுபோல் அவர்கள் என்னைச் சுற்றியிருப்பதையும், அவர்களில் ஒவ்வொருவரும், தன் மலர்களாலும் மணத்தாலும் என்னை மகிழ்விப்பதையும் கண்டேன். உயிரளிக்கும் சூரியனே போல் என் தூய உடல் அவர்களுக்கு உயிரளித்து, குளிர்ந்து போயிருந்த இருதயங்களை சூடாக்கியது. ஆறுதல் தேடி சிலரிடம் சென்றேன். சிலரிடம் பாதுகாப்பிடம் தேடிப் போனேன். மற்றவர்களிடம் இளைப்பாற்றியை விரும்பிச் சென்றேன். அவர்களுடைய கடவுளாகிய எனக்கு எவ்வளவு தெளிவாக ஆறுதலளித்து, பாதுகாத்து, இளைப்பாற்றி தரலாமென்று இந்த நேச ஆத்துமங்கள் அறியுமானால் எவ்வளவோ நலமாயிருக்கும்.

அளவற்ற நேசமுள்ள இந்த கடவுளே உன்னை அழைத்து, தம் ஆனந்தம் என்னும் பாதுகாக்கப்பட்ட தோட்டத்தினுள் உன்னை ஆச்சரியத்துக்குரிய விதமாய் சேர்த்திருக்கிறார். உன் இரட்சகராகிய கடவுள் உன்னை தம் மணவாட்டியாய் ஆக்கியிருக்கிறார்.

அவர் தம் பரிசுத்த உடலால் உங்களுக்கு உணவளிக்கிறார். தம் இரத்தத்தால் உன் தாகத்தைத் தணிக்கிறார். நித்தியத்துக்கும் உன் இளைப்பாற்றியும், மகிழ்ச்சியுமாய் இருப்பார்.

என்னுடைய சிறப்பான வரப்பிரசாதங்களை நிரம்பப் பெற்ற பலர் இப்பொழுது என் திரு இருதயத்துக்கு வேதனை கொடுக்கிறார்கள்? நான் எப்போதும் அதே இயேசுதானே? நான் மாறிவிட்டேனா? இல்லை , எனது நேசம் மாறாது. உலக முடிவு வரை அதே அன்பும் கனிவும் கொண்டதாயிருக்கும்.

நீ தகுதியற்றவள் என்பதை நான் நன்கு அறிவேன். அதற்காக நான் உன்னை விட்டு விலகுவதில்லை . அதற்கு மாறாக, உன் துன்பங்களைத் தீர்த்து, உனக்கு பற்பல உதவிகள் செய்யும்படி நான் உன் வருகையை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறேன்.

உன்னிடமிருந்து நான் அன்பைக் கேட்டால் அதைக் கொடுக்க மறுக்காதே. அன்பை அன்பு செய்வது வெகு எளிது.

உன்னால் இயலாதவற்றை நான் கேட்பேனானால், எனது வரப்பிரசாதமும், உன்னை வெல்ல உனக்கு அவசியமான பலமும் ஒருபோதும் உனக்குக் குறைவுபடாது என அறிவாயாக.

உன்னில் நான் ஆறுதல் பெறுவேன் என எதிர்பார்க்கிறேன். ஆதலால் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். உன் ஆத்துமத்தை முழுவதும் எனக்குத் திறந்து காண்பி. அதில் குற்றங்கள் உண்டு என நீ உணர்வாயானால் "ஆண்டவரே, என் தோட்டத்திலுள்ள மலர்களையும் கனிகளையும் நீர் அறிவீர். நீரே வந்து உமக்கு பிரியமாயிருப்பதை வளர்க்கும் விதத்தை எனக்குக் கற்பியும்" என்று சொல்.

இவ்விதம் சொல்லி, அன்பு காண்பிக்க உண்மையாகவே விரும்புகிறவர்களைப் பார்த்து, நான் சொல்வதாவது: "அன்பனே, உன் ஆசை இதுவானால் உனக்காக நான் அவற்றை வளர்க்கும்படி விட்டுவிடு. உன் தோட்டத்தை நானே தோண்ட விடு. நானே நிலத்தை பண்படுத்தி, இடையூறாயிருக்கும் பலமுள்ள வேர்களை அகற்ற விடு. அவைகளை அகற்ற உனக்கு பலம் பற்றாது. உன் சில வழக்கங்களை விட்டுவிடும்படி அல்லது கோப் குணத்தை அடக்க நான் உன்னைக் கேட்கலாம். பிறர் சிநேக செயல்கள் ஏதாவது செய் அல்லது பொறுமையாய் இரு, சுயமான தியாகக் காரியங்கள் ஏதாவது செய்; ஆத்தும் இரட்சணிய ஆவலால், கீழ்ப்படிதலால், அல்லது ஒறுத்தலால் உன் நேசத்தைக் வெளிப்படுத்து. இவ்வித செயல்கள் உன் ஆத்துமமாகிய நிலம் பலன் தரக் கூடியதாக்குகின்றன. அப்படியானால் அது நான் எதிர்பார்க்கும் மலர்களும் கனிகளும் தரும் - நான் உன்னிடம் காண மிக விரும்புவது என்ன என்று நீ அறிவாயா? உன் பிறரன்பு தியாகத்தால் ஒரு பாவி ஞான ஒளியைப் பெற்றிருக்கிறான். உன் பொறுமையானது அவன் என்னில் உண்டாக்கிய காயங்களை ஆற்றியிருக்கின்றது. அவனுடைய தவறுகளுக்காகவும் குற்றங்களுக்காகவும் பரிகாரம் செய்திருக்கிறது. நீ மகிழ்ச்சியுடனும், கோபப்படாமலும் ஏற்றுக் கொண்ட கண்டிப்பானது. ஆணவத்தால் குருடாயிருந்த ஒரு பாவிக்கு தன்னைத் தாழ்த்த தைரியம் பெற்றுக் கொடுத்தது.

நீ எனக்கு வாய்ப்புக் கொடுப்பாயானால் இவையெல்லாம் உனக்குச் செய்வேன். அப்படியானால் உன் ஆத்துமம் ஏராளமான மலர்கள் தரும். என் இருதயம் விரும்பித் தேடும் ஆறுதலையும் நீ எனக்குத் தருவாய்.

"ஆண்டவரே, என்னை நீர் உம் விருப்பம் போல் நடக்கவிட நான் தயாராயிருக்கிறேன் என நீர் அறிவீர்... ஆனால் ஐயோ, நான் தவறி விழுந்து உம்மை மனம் நோக்கப் பண்ணியிருக்கிறேன். இன்னும் ஒருமுறை என்னை மன்னிப்பீரா? நான் சிறிதும் பாக்கியமற்றவள், நன்மை ஒன்றுமே செய்ய முடியாதவள்"

என் அன்புக்குரியவளே, இது உண்மையாக எனக்கு ஆறுதலாயிருக்கிறது. ஏனெனில் நீ தவறி விழாமலிருந்தால், ஒருவேளை நீ இவ்வித தாழ்ச்சி முயற்சியும், நேச முயற்சியும் செய்திருக்க மாட்டாய்.

நான் திவ்விய நற்கருணையை ஏற்படுத்தும்போது இவை யாவும் என் கண்முன் நின்றன. இவ்வித ஆத்துமங்களுக்கு நான் உணவாக வேண்டும் என்ற ஆசையினால் என் இருதயம் பற்றி எரிந்தது. ஏனெனில் நான் மனிதர் நடுவே வசிப்பது நீதிமான்களுக்காக மட்டுமல்ல, பலவீனரைத் தாங்கவும், தாழ்ந்தவர்களை திடப்படுத்தவுமே. நானே அவர்கள் வளர்ந்து திடம் பெறச் செய்வேன். அவர்களுடைய தாழ்ச்சியில் நான் இளைப்பாற்றி கண்டடைவேன். அவர்களுடைய நல்ல மனத் தீர்மானங்கள் எனக்கு ஆறுதலாய் இருக்கும்.

இந்த தெரிந்து கொள்ளப்பட்ட ஆத்துமங்களில் சில என்னை மனம் நோக்கப் பண்ணுகின்றன. இவர்கள் அனைவரும் கடைசிவரை நிலை நிற்பார்களா? இந்த துயரக் கூக்குரல் என் உள்ளத்திலிருந்து வெளிக் கிளம்புகிறது. இந்த துயரப் புலம்பல் அவர்கள் செவிகளில் ஏற வேண்டும்.

ஜோசபா, இன்று இவ்வளவு போதும், போய் வா. நீ உன்னை முழுவதும் என் கையில் ஒப்படைக்கையில் எனக்கு ஆறுதல் கொடுக்கிறாய்... ஒவ்வொரு நாளும் நான் ஆத்துமங்களுடன் உரையாட முடியாது. ஆகவே, அவர்களுக்காக என் இரகசியங்களை உன்னிடம் தெரிவிப்பேன். நீ இவ்வுலகில் இருக்கும்வரை உன்னைப் பயன்படுத்துவேன்.