கெத்சமேனி தோட்டம் 12-03-1923

ஜோசபா, என்னுடன் கெத்சமேனிக்கு வா; என் ஆத்துமத்துடன் உன்னுடைய ஆத்துமமும் துயரப்படட்டும். திரளான மக்களுக்குப் போதித்து, நோயாளிகளைக் குணப்படுத்தி, பார்வையற்றவர்களுக்குப் பார்வையளித்து, இறந்தவர்களை உயிர்ப்பித்தபின்... மூன்று ஆண்டுகளாக நான் அப்போஸ்தலர்களுடன் இருந்து என் போதனைகளை அவர்களுக்குக் கற்பித்து அவைகளை அவர்களிடம் ஒப்படைத்த பின் ... கடைசியாக எவ்விதம் ஒருவர் மற்றவரை நேசித்து ஊழியம் செய்ய வேண்டுமென என் மாதிரியினால் அவர்களுக்குக் கற்பிக்கத் தீர்மானித்தேன். அவர்களுடைய பாதங்களைக் கழுவியும் என்னை அவர்களுடைய உணவாகக் கொடுத்தும் இதைக் கற்பித்தேன்.

மனுக்குலத்தின் இரட்சகரும், மனுமகனுமான தேவகுமாரன் உலகத்துக்காக தம் இரத்தத்தைச் சிந்தி உயிரைக் கொடுக்க வேண்டிய நேரம் வந்தது. என்னை உடனே தந்தையின் திருச்சித்தத்துக்கு கையளிக்கும்படி, நான் செபத்துக்கு என்னைக் கையளித்தேன்.

மிகவும் பிரியமான ஆத்துமங்களே, வாருங்கள்; என் குரலுக்கு செவி கொடுங்கள். எவ்வித எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் கடவுளுடைய சித்தத்துக்கு கையளிப்பதே முக்கியமான ஒரு காரியம்.

முக்கியமான காரியங்கள் செய்யும் முன் நான் வழிகாட்டியபடி செபிக்க வேண்டும். ஏனெனில் வாழ்க்கையின் துன்பங்களில் செபத்தினாலேயே ஒருவன் பலம் பெற முடியும். கடவுளுடைய செயலை ஒருவன் உணராதிருந்தபோதிலும் செபத்திலேயே கடவுள் தம்மை வெளிப்படுத்துகிறார், ஆலோசனை கூறி நல்ல ஏவுதல் கொடுக்கிறார்.

கெத்சமேனித் தோட்டத்துக்குள், அதாவது தனிமைக்குள் நான் நுழைந்தேன். பராக்கும் சத்தமும் உள்ள இடத்துக்கு தூரத்திலேயே கடவுளைத் தனக்குள் தேடவேண்டும். ஒருவரின் இயல்பு வரப்பிரசாதத்தால் அமைதி கொள்ள வேண்டுமானால் மௌனம் வேண்டும். சுயநலமும், சிற்றின்பப் பிரியமும் ஒருவனை கடவுளுடன் ஒன்றிக்கத் தடையாய் இருக்கின்றன.

அன்பர்களே, உங்களுக்கு ஒரு துர்மாதிரியாயிருக்கும்படி மூன்று சீடர்களை நான் என்னுடன் அழைத்துச் சென்றேன். செபிக்கையில் ஆத்துமத்தின் மூன்று தத்துவங்களும் உடனிருந்து செபிக்க உதவி செய்ய வேண்டுமென்று இதிலிருந்து அறிந்து கொள்ளுங்கள்.

கடவுள் செய்துள்ள உதவிகளையும் அவருடைய வல்லமை, நன்மைத்தனம், நேசம், இரக்கம் முதலிய குணங்களையும் மனம் நினைவுக்கு கொண்டு வரட்டும். அவர் உன்னைச் சுற்றிலும் வைத்திருக்கும் அதிசயங்களுக்கு பதில் காண்பிக்கும் விதத்தை புத்தியானது கண்டு பிடிக்கட்டும். கடவுளுக்காக இன்னும் அதிகம் செய்யும்படி மனது தீர்மானிக்கட்டும். சீடத்துவ பணிகளில் அல்லது மெளனமாய் தாழ்ந்த கடினமான வேலை செய்து பாவிகளுக்காக உழைக்கும்படி உன்னை ஒப்புக் கொடு. படைப்புக்கு ஏற்றபடி மிகுந்த தாழ்ச்சியுடன் படைத்தவரை ஆராதி. உன் விஷயத்தில் அவருடைய சித்தத்தை முழுவதும் நீ ஏற்றுக் கொண்டு அவருடைய சித்தத்துக்கு அமைந்து நடப்பாயாக.

உலக இரட்சிப்புக்கு இவ்விதமே நான் என்னைக் கையளிக்கிறேன்.

பாடுகளின் கொடிய துன்பங்கள், நிந்தை, அவமானங்கள், கற்றூணில் கட்டுண்டு அடிபடுதல், தாகம், சிலுவை என் கண்முன் தோன்றுகையில் எவ்வளவோ பயங்கரமாயிருந்தது! இவைகள் யாவும் என் கண்முன் ஒன்றாய்த் தோன்றி, என் இருதயத்தை ஆழ அழுத்தின. உலக முடிவுவரை கட்டிக் கொள்ளப்படும் பாவங்களும் தவறுகளும், அக்கிரமங்களும் ஒரே நேரத்தில் என் கண்முன் தோன்றின. நான் அவைகளை நோக்கினேன். நிந்தைகளின் சுமையால் அழுத்தப்பட்டு, எல்லாம் வல்லவரின் சமூகத்தில் நின்று இரக்கம் காண்பிக்கும்படி மன்றாடினேன். சினம் மூட்டப்பட்ட கடவுளுடைய கோபத்தின் தீவிரம் என்மேல் பாய்ந்தது. அவரது கோபத்தைத் தணிக்கும்படி பாவம் நிறைந்த மனிதனுக்குப் பிணையாக என்னைக் கையளித்தேன்.

நான் பட்ட துயரம் மிகப் பெரியது. பாவத்தின் தாங்க முடியாத சுமையின் கீழ் நான் மரணத்துக்கு ஏதுவான துக்கத்துக்குள்ளானேன், இரத்தம் வியர்வையாக தரையில் விழுந்தது.

இவ்விதம் என்னைத் துன்புறுத்தும் பாவிகளே, இந்த இரத்தம் உங்களுடைய கெடுதலுக்காக இருக்குமா அல்லது இரட்சணியத்துக்காக இருக்குமா? இந்த வியர்வை, இந்தத் துயரம், இந்த மரணவேதனை பலருக்கும் பயன் தராமல் போகுமா?

ஜோசபா, இன்று இவ்வளவு போதும். என் இரத்தம் உன் சிறுமையை வளப்படுத்தி திடப்படுத்தும்படி கெத்சமேனியில் என் அருகில் தங்கியிரு.