திவ்விய நற்கருணையும் பாவிகளும் 02-03-1923

கடைசி இராவுணவு நேரத்தில் நான் பட்ட பெருந்துயரத்தைப் பற்றியும் நான் உனக்குச் சொல்ல வேண்டும். நான் யார் யாருக்கு நண்பனாகவும், விண்ணக உணவாகவும் இருப்பேனோ அவர்களையும், உலக முடிவுவரை என்னைச் சூழ்ந்து நின்று எனக்கு ஆராதனையும், நிந்தைப் பரிகாரமும், நேசமும் காண்பிப்பவர்களையும் நினைத்து நான் மகிழ்ந்தேன். எனினும் இந்த நினைவானது பலர் திவ்விய நற்கருணைப் பேழையில் என்னைத் தனியே விடுவார்கள், என் நற்கருணைப் பிரசன்னத்தை விசுவசிக்கமாட்டார்கள் என்ற நினைவால் ஏற்படும் துயரத்தைக் குறைக்கவில்லை.

பாவமுள்ள இருதயங்களிலும் நான் நுழைய வேண்டியிருக்கும். நுழையும்படி கட்டாயப்படுத்தப்படுவேன். பலர் இவ்விதம் என் உடலையும் இரத்தத்தையும் அவமதித்து தங்களை நித்திய கேட்டுக்கு உள்ளாக்கிக் கொள்வார்கள்.

எனக்கு எதிராகச் செய்யப்படும் தேவ துரோகங்களும், அவமரியாதைகளும், வாயால் கூறக்கூட முடியாத அவமானங்களும் என் கண் முன் தோன்றின. பகலிலும் இரவிலும் என்னை மனிதர்கள் மறந்து திரிவார்கள். என் இருதயக் குரலுக்கு செவிசாய்க்க மாட்டார்கள், இதையும் நான் அறிந்திருந்தேன்.

திவ்விய நற்கருணையில் நான் ஒரு அன்புக் கைதியல்லவா? எல்லோரும் அங்கு வந்து தங்களுக்குத் தேவையான உதவியை - மிகக் கனிவுள்ள இருதயத்தை, சிறந்த தந்தையை, மிக நம்பிக்கையுள்ள நண்பனை - பெற வேண்டுமென்றல்லவா நான் அங்கு இருக்கிறேன்?

எனினும் தங்களுக்காகப் பற்றியெரியும் அன்புக்கு, பதில் அன்பைக் காண்பிப்பவர்கள் வெகு சிலரே.

பாவிகளுக்கு நான் வாழ்வாகும்படி, அவர்களுக்கு மருத்துவராகும் படி , தீய நடத்தையால் ஏற்பட்ட நோயில் அவர்களுக்கு மருந்தாகும்படி அவர்களிடையே நான் வாழ்ந்தேன். அவர்களோ என்னைக் கைவிடுகின்றனர். என்னை அவமதித்து பழித்துரைக்கின்றனர்.

ஐயோ.. பாக்கியமற்ற பாவிகளே! என்னிடம் வாருங்கள்: நீங்கள் வருவீர்களென்று நான் இரவும் பகலுமாகக் காத்திருக்கிறேன். உங்களுடைய பாவங்களை உங்களுடைய முகத்தில் திரும்ப வீசி எறிய மாட்டேன். ஆனால் எனது இரத்தத்திலும் காயங்களிலும் அவைகளைக் கழுவுவேன்.

பயப்பட வேண்டாம், நீங்கள் வந்தால் போதும். நீங்கள் எவ்வளவு நேசிக்கப்படுகிறீர்கள் என உங்களுக்குத் தெரியும்.

நேச ஆத்துமங்களே, ஏன் இவ்வளவு சோர்வுடன் இருக்கிறீர்கள்? குடும்பக் கவலைகளும், வீட்டு வேலைகளும், கடமைகளும் ஓயாது உங்களை அழைக்கின்றன என்பது எனக்குத் தெரியாதா? ஆனால் உங்களது நேசத்தையும் நன்றியையும் எண்பிக்க சில நிமிடங்களையாவது நீங்கள் எனக்காக ஒதுக்கி வைக்கக்கூடாதா? பயனற்ற தீராத கவலைகளினால் அலைக்கழிக்கப்படும்படி நீங்கள் எளிதாக உங்களை விட்டு விடுகிறீர்கள். ஒரு கைதியின் மேலுள்ள அன்புக்காக சில நிமிடங்களாவது நீங்கள் போய் அவரைச் சந்திக்கக் கூடாதா?

நீங்கள் நோயாய் அல்லது பலவீனமாய் இருந்தால் மருத்துவரைப் பார்க்க உங்களுக்கு எப்படியாவது நேரம் கிடைக்கிறது. அப்படியானால் உங்களுடைய ஆத்துமத்துக்கு பலமும் நலமும் தரக்கூடியவரிடம் வாருங்கள். உங்களுக்காகக் காத்திருந்து, உங்களைத் தேடி வந்து, உங்களை தம் பக்கத்திலேயே காண ஆசைப்படும் தேவ பிச்சைக்காரனுக்கு உங்கள் ஆத்துமத்தைக் கொடுங்கள்.