கொரிந்தியருக்கு எழுதிய முதல் நிருபம் - அதிகாரம் 05

பிரசித்தமான காமாதுரனை அவர்கள் விலக்காமலிருந்ததை முன்னிட்டு அவர்களைக் கண்டித்ததும், அப்படிப்பட்டவர்களோடு புழங்காதிருக்கக் கற்பித்ததும்.

1. உங்களுக்குள்ளே விபசாரமுண்டென்று பிரசித்தமாய்க் கேள்வியாகிறதே. அதுவும் அஞ்ஞானிகளுக்குள் ளே முதலாய்க் கேள்விப்படாத விபசார மாயிருக்கின்றது. அதாவது: ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்திருக் கிறானாமே. (லேவி. 18:7, 8; உபா. 22:30.)

2. இப்படிப்பட்ட கிரியையைச் செய்தவனை உங்களை விட்டகற்றி, நீங்கள் துக்கப்படுவதற்குப் பதிலாய் வீம்பு பாராட்டுகிறீர்கள்.

3. நான் சரீரத்தால் தூர இருந்தாலும் என் மனது உங்களோடிருப்பதால், நான் உங்கள் நடுவிலிருந்தாற்போல இவ்விதக் கிரியையைச் செய்தவன்மேல் தீர்ப்புச் சொல்லியிருக்கிறேன். (கொலோ. 2:5.)

4. நீங்களும் என் மனதும் நமது ஆண்டவராகிய சேசுநாதருடைய வல்லமையோடு ஒன்றாய்க் கூடியிருக்க நான் நமது ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்து நாதருடைய பேரால், (மத். 16:19; 18:18.)

5. இவ்வித மனிதனுடைய ஆத்துமம் நமது ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்து நாதருடைய நாளிலே இரட்சணியம் அடையும்படி, அவனுடைய மாம்சத்துக்குக் கேடாக அவனைச் சாத்தானுக்குக் கையளிக்கத் தீர்மானித்தேன்.

* 5. மூர்க்கரான பெரும் பாவிகளைச் சபிக்கும் முறை இதிலே காண்பிக்கப்படுகிறது. எப்படியெனில்: 

1-வது. அந்த முறை அப்போஸ்தலர்களாலே ஸ்தாபிக்கப்பட்டுத் திருச்சபையில் மேலான அதிகாரமுடையவர்களால் நடத்தப்படுகிறது. 

2-வது. அந்தச் சாபம் நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய நாமத்தினாலே இடப்படுகிறது. 

3-வது. கூடின திருச்சபையின் சமுகத்திலிடப்படுகிறது. 

4-வது. அழுகின அவயவத்தால் சரீரத்துக்குச் சேதமுண்டாகாதபடிக்கு அதை வெட்டியெறிந்து போடுகிறதுபோல, அப்படிப்பட்ட பாவி திருச்சபையினின்று விலக்கப்பட்டு சர்வேசுரனுடைய பிள்ளை என்கிற பட்டத்தையிழந்து சாத்தானுடையவனாய்ப் போகிறான். 

5-வது. அப்படிப்பட்ட கேட்டைக் கண்டு, அவன் புத்தி தெளிந்து மனந்திரும்பி அவன் ஆத்துமம் இரட்சிக்கப் படும்படியாகச் சபிக்கப்படுகிறானென்றறிக.

6. நீங்கள் மேன்மை பாராட்டுகிறது சரியல்ல. புளிப்பான கொஞ்சம் மாவு, பிசைந்த மாவு முழுமையையும் புளிப்பாக் குமென்று அறியீர்களோ? (கலாத். 5:9.)

7. நீங்கள் புளியாத மாவாயிருக்கக் கொள்ள, புதிதாய்ப் பிசைந்த மாவாயி ருக்கும்படிக்குப் பழைய புளித்த மாவைக் கழித்துத் தள்ளுங்கள். ஏனெனில் நம் முடைய பாஸ்காவாகிய கிறீஸ்துநாதர் பலியிடப்பட்டிருக்கிறார். (இசை. 53:7.)

8. ஆகையால் புளித்த மாவையுமல்ல, துர்க்குணம், அக்கிரமமென்கிற புளித்த மாவையுமல்ல; நேர்மையும் சத்தியமுமாகிய புளியாத அப்பத்தைப் புசித்துவிருந்தாடுவோமாக.

* 8. யூதர்கள் பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடுகிற நாளிலே புளியாத அப்பத்தைச் சாப்பிடவேண்டியதாயிருந்தது. அந்த அப்பம் அவர்கள் பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் புசிக்கிறதற்கு யோக்கியமான பரிசுத்தர்களாய் இருக்கிறார்களென்பதற்கு அடையாளமாயிருந்தது. அர்ச். சின்னப்பர் அந்தச் சடங்கை உவமையாக எடுத்துக்காட்டி: நம்முடைய பாஸ்கா ஆட்டுக்குட்டியாகிய கிறீஸ்துநாதர் உங்களுக்காகப் பலியிடப் பட்டிருக்கிறார்; நீங்களோ ஞானஸ்நானத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டுப் புளிப்பற்ற அப்பத்துக்கு ஒப்பாயிருக்கிறீர்கள்; அப்படியே எப்போதும் நீங்கள் புளிப்பற்ற புதிய அப்பத் துக்கு ஒப்பாயிருக்கும்பொருட்டும், புளியாத அப்பத்தின் குணங்களுக்குள்ளே பலியிடப் படுகிற சேசுக்கிறீஸ்துநாதரை உட்கொள்ள எப்போதும் பாத்திரவான்களாயிருக்கும் பொருட்டும் பாவமென்கிற பழைய புளித்தமாவு உங்களைக் கெடுத்துப்போடாதபடிக்கு அதை உங்கள் நடுவிலிருக்கவொட்டாமல் தூர எறிந்துபோடுங்களென்று கற்பிக்கிறார்.

9. விபசாரக்காரரோடு புழங்கக்கூடாதென்று ஒரு நிருபத்தில் உங்ளுக்கு எழுதினேன். (2 தெச. 3:14.)

10. ஆகிலும் நான் எழுதினது இவ்வுலகத்தாராகிய விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரக ஆராதனைக்காரர்களாகிய இவர்களைக் குறித்தல்ல; இல்லாவிட்டால் நீங்கள் இவ்வுலகத்தைவிட்டு அப்பால் போய்விடவேண்டியதாயிருக்குமே.

11. ஆனால் சகோதரன் எனப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரக ஆராதனைக்காரனாயாவது, உதாசினப் பேச்சுக்காரனாயாவது, குடிவெறிய னாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருப்பானாகில், அப்படிக்கொத்தவ னோடு புழங்கப்படாதென்றும், போஜன முதலாய்ப் பண்ணப்படாதென்றும் உங்களுக்கு எழுதினேன். (மத். 18:17; 2 அரு. 10:1; 2 தெச. 3:6.)

12. புறம்பாயிருக்கிறவர்களைப் பற்றித் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்கள் மேலல்லோ நீங்கள் தீர்ப்பிடுகிறீர்கள்.

13. புறம்பே இருக்கிறவர்கள்மேல் சர்வேசுரனே தீர்ப்பிடுவார். நீங்களோ, உங்களைவிட்டு அந்தப் பொல்லாதவ னை நீக்கிப்போடுங்கள். (உபாக. 22:24.)