தங்கள் போதகர்களைக் குறையாக எண்ணவொண்ணாதென்றும், தாங்கள் பெற்றுக்கொண்டவைகளைப்பற்றி மேன்மை பாராட்டவேண்டாமென்றும் சின்னப்பர் போதிக்கிறார்.
1. இப்படியாக எந்த மனுஷனும் எங்களைக் கிறீஸ்துநாதருடைய ஊழியக்காரர்களாகவும், சர்வேசுரனுடைய பரம இரகசியங்களைப் பகிர்ந்து கொடுக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளக்கடவான். (2 கொரி. 6:4; தீத்து. 1:7.)
2. இப்பொழுதோ, பரிமாறுகிறவர்களுக்குள்ளே பிரமாணிக்கமுள்ளவனாகக் காணப்படுகிறவன் யாரென்று விசாரிக்கப்படுகிறது. (மத். 24:25.)
* 1-2. திருச்சபையின் மேற்றிராணிமார்களும், குருமார்களும் கிறீஸ்துநாத ருடைய ஊழியக்காரருமாய்ச் சர்வேசுரனுடைய தேவதிரவிய அநுமானங்கள் முதலிய ஞான நன்மைகளை விசுவாசிகளுக்குப் பங்கிடுகிற கண்காணிப்பவர்களுமாய் இருக்கி றார்கள். அவர்களிடத்திலிருக்கவேண்டிய பிரதான இலட்சணம் பிரமாணிக்கந்தான். அதாவது: தங்கள் சொந்தப் பிரயோசனத்தையாவது மகிமையையாவது தேடாமல், சர்வேசுரனுடைய தோத்திரத்தையும் ஆத்துமங்களின் பிரயோசனத்தையுந் தேடி நடக்கக்கடவார்கள் என்றர்த்தமாம்.
3. ஆயினும் நான் உங்களாலேயாவது, மனிதருடைய நியாயநாளின் விசாரணையினாலாவது தீர்ப்பிடப்படுவது ஒரு பொருட்டல்ல. நானும் என்னைத் தீர்ப்பிட்டுக்கொள்ளுகிறதில்லை.
4. என் மனசார என்னிடத்திலே ஒரு குற்றத்தையுங் காணேன். ஆகிலும் இதனாலே நான் நீதிமானாவதில்லை. என்னை நடுத்தீர்க்கிறவர் ஆண்டவர் தான். (சங். 142:2; சர்வ. 7:5; பழ: 21:2)
5. ஆதலால் ஆண்டவர் வருவதற்குள்ளாக நீங்கள் காலத்திற்கு முந்தித் தீர்ப்பிடாதேயுங்கள். அவர் இருளில் மறைந்திருக்கிறவைகளைத் துலக்கி, இருதயச் சிந்தனைகளையும் வெளியாக்குவார். அப்பொழுது அவன வனுக்கு உரிய புகழ்ச்சி சர்வேசுர னாலே உண்டாகும். (1 கொரி. 3:13.)
6. சகோதரரே, நீங்கள் எழுதப்பட்டதற்குமேல் (போகாமலும்) இங்கே ஒருவன் நிமித்தம் ஒருவனொருவ னோடு வீம்பு பாராட்டாமலும் இருக்கும்படி நீங்கள் எங்களிடத்திலே கற்றுக்கொள்ளவேண்டுமென்று, உங்கள் நிமித்தம் என்னையும் அப் பொல்லோவையும் உருவகமாய்ச் சாட்டிப் பேசினேன். (உரோ. 12:3.)
* 6. நான் நட்டேன், அப்பொல்லோ நீர் பாய்ச்சினான். சின்னனப்பன் யார்? அப்பொல்லோ யார்? கிறீஸ்துநாதருடைய ஊழியரல்லாமல் வேறல்லவென்று நான் எழுதியிருந்தாலும், சகோதரரே, எங்கள் இருவரைக்குறித்து மாத்திரம் நான் பேசுகிறே னென்று நீங்கள் நினைக்கவேண்டாம். உங்களுக்குள்ளே உண்டான சண்டை சச்சரவுகளுக்குக் காரணமாயிருக்கிற உங்களிடத்திலுள்ள மற்றப் போதகரைக் குறித்துஞ் சொல்லியிருக்கிறேன். உங்களுக்குக் துன்பம் வராதிருக்கும்படியாகவே, இதிலே அவர்களைப் பெயர் பெயராகக் குறிக்கவில்லை. ஆனால் எங்கள் இருவரையுங் குறித்துச் சொன்னதை அவர்களைக் குறித்துஞ் சொன்னதாகப் பாவித்துக்கொண்டு, அவர்களும் சேசுநாதருடைய ஊழியக்காரரொழிய வேறொன்றுமல்லவென்று நீங்கள் அறிந்து அவர்களைப்பற்றி உங்களுக்குள்ளே உண்டாயிருக்கிற சச்சரவுகளை விட்டுவிடுங்களென்று அர்த்தமாம்.
7. ஏனெனில் உன்னை விசேஷமாக்கினவர் யார்? நீ பெற்றுக்கொள்ளாத ஏதேனும் உன்னிடத்தில் உண்டோ? நீ பெற்றுக்கொண்டவனாகில், பெற்றுக்கொள்ளாதவனைப் போல நீ மேன்மை பாராட்டுகிறதென்ன?
8. இதோ, நீங்கள் திருப்தியடைந்திருக்கிறீர்கள். இதோ, ஐசுவரியர்களாயிருக்கிறீர்கள். எங்களையல்லாமல் அரசாளுகிறீர்களே. நாங்களும் உங்களோடுகூட ஆளும்படியான விதமாய் நீங்கள் அரசாள்வதல்லோ நன்று. (காட்சி. 3:17, 21.)
9. ஏனெனில் அப்போஸ்தலர்க ளாகிய எங்களைச் சர்வேசுரன் மரணத்தீர்ப்புக்குக் குறிக்கப்பட்டவர்களைப் போல எல்லாரிலும் கடையராகக் காண்பித்தாரென்று எண்ணுகிறேன். இதோ, நாங்கள் உலகத்துக்கும் சம்மனசுக்களுக்கும் மனிதருக்கும் வேடிக் கையானோம். (உரோ. 8:36; எபி. 10:33.)
10. நாங்கள் கிறீஸ்துநாதரைப்பற்றிப் பைத்தியகாரரானோம். நீங்களோ கிறீஸ்துநாதரிடத்தில் விவேகிகளா னீர்கள்; நாங்கள் பலவீனர், நீங்கள் பலவான்கள்; நீங்கள் மேலானவர்கள், நாங்கள் கீழானவர்கள். (2 கொரி. 13:9.)
11. இந்நேரம் வரைக்கும் பசியும் தாகமும் அநுபவிக்கிறோம். நிர்வாணிகளாகவும், குட்டுப்பட்டவர்களாகவும், இல்லிடமற்றவர்களாகவும் இருக்கிறோம். (2 கொரி. 11:23-27.)
12. எங்கள் கைகளினாலே உழைத்துப் பாடுபடுகிறோம். எங்களைத் திட்டுகிறார்கள், நாங்கள் ஆசீர்வதிக்கிறோம். எங்களைத் துன்பப்படுத்துகிறார்கள், நாங்கள் சகித்துக்கொள்ளுகிறோம். (மத். 5:44; அப். 18:3; அப். 20:34; 1 தெச. 2:9.)
13. எங்களைத் தூஷணிக்கிறார்கள். நாங்கள் பிரார்த்திக்கிறோம். இந்நாள் வரையிலும் நாங்கள் இவ்வுலகத் தின் குப்பைபோலவும், கழிவுபோலவுமானோம்.
* 13. 7-ம் வசனமுதல் 13-ம் வசனம் வரைக்கும் அர்ச். சின்னப்பர் கொரிந்தியர் சபை நடுவில் தங்களை மேன்மை பாராட்டி அவரை இகழ்ச்சியாய்ப் பேசிவந்த சில போதகர்களை நோக்கி அவர்களைப் பரிகாசமாகப் புகழ்ந்து தம்மைத் தாழ்த்துகிற வகையினாலே அவர்களைக் கண்டிக்கிறார்.
14. உங்களை வெட்கப்படுத்தும்படிக்கு நான் இதை எழுதவில்லை. ஆனால் எனக்கு மிகவும் பிரியமான பிள்ளைகளைப்போல உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
15. ஏனெனில் கிறீஸ்துநாதர் பெயரால் உங்களுக்கு உபதேசிகள் பதினா யிரமிருக்கலாயினும், உங்களுக்குத் தந்தைகள் பலரல்லவே. ஏனெனில் உங்களை நானே சுவிசேஷத்தின் வழியாய் சேசுக்கிறீஸ்துநாதரிடத்தில் ஜனிப்பித்தேன். (கலாத். 4:19.)
16. ஆதலால் நான் கிறீஸ்துநாதரைக் கண்டுபாவிக்கிறதுபோல நீங்களும் என்னைக் கண்டுபாவிக்க உங்களை மன்றாடுகிறேன். (1 கொரி. 11:1.)
17. இதினிமித்தம் எனக்கு மிகவும் பிரியமான குமாரனும், கர்த்தரிடத்தில் பிரமாணிக்கமுள்ளவனுமாகிய திமோத் தேயுவை உங்களிடத்தில் அனுப்பி னேன். நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்து வருகிற பிரகாரம் சேசுகிறீஸ்து நாதரிடத்தில் நடந்து வருகிறேனென்று அவர் உங்களுக்கு ஞாபகப்படுத்துவார். (அப். 19:22; பிலிப். 2:20.)
18. நான் உங்களிடத்தில் திரும்பிவரப்போகிறதில்லை யென்றாற்போலச் சிலர் இப்படி வீம்பு பாராட்டுகிறார்கள்.
19. ஆகிலும் ஆண்டவருக்குச் சித்தமானால், சீக்கிரத்தில் உங்களிடத்தில் வருவேன். அப்போது வீம்புக்காரருடைய பேச்சையல்ல, அவர்களுடைய வல்லமையை அறிந்துகொள்ளுவேன். (அப். 18:21.)
20. ஏனெனில் சர்வேசுரனுடைய இராச்சியம் பேச்சு வார்த்தைகளிலல்ல, பலத்தில் அடங்கியிருக்கிறது. (1 கொரி. 2:4; 1 தெச. 1:5.)
21. உங்களுக்கு என்ன வேண்டும்? நான் உங்களிடத்தில் பிரம்புடனே வரவேண்டுமோ, அன்போடும் சாந்த மனதோடும் வரவேண்டுமோ (சொல்லுங்கள்). (2 கொரி. 13:10.)
* 21. 14-ம் வசனந் துவக்கி 20-ம் வசனம் வரைக்கும் சபையாரைத்தானே நோக்கிப் பேசுகிறார். 20-ம் வசனமுதல் கடைசி வரைக்கும் முன் சொல்லப்பட்ட போதகர்களை நோக்கிப் பேசுகிறாரென்றறிக.