தேவ ஊழியரும் சர்வேசுரனுக்குக் கணக்குக்கொடுக்க வேண்டியவர்களுமாகிய போதகர்களைப்பற்றிக் கொரிந்தியர் தர்க்கித்ததைக்குறித்துச் சின்னப்பர் அவர்களைக் கண்டித்ததும், கிறீஸ்துநாதர் விசுவாசத்துக்கு அஸ்திவாரமென்றும், கிறீஸ்தவன் சர்வேசுரனுடைய ஆலயமென்றுங் காண்பித்ததும்.
1. அன்றியும் சகோதரரே, நான் உங்களை ஞானிகளாகப் பாவித்துப் பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களாகவும், கிறீஸ்துநாதரிடத்தில் குழந்தைகளாகவும் எண்ணிப் பேச வேண்டிய தாயிற்று.
2. உங்களுக்குப் போஜனத்தை யல்ல, பாலையே குடிக்கக் கொடுத்தேன். ஏனெனில் அப்போது உங்களுக்குச் சக்தி யில்லாமலிருந்தது. இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாய் இருக்கிற தினாலே இப்பொழுதும் உங்களுக்குச் சக்தியில்லை. (எபி. 5:12; அரு. 16:12.)
3. உங்களுக்குள்ளே பொறாமையும் சச்சரவும் உண்டாயிருக்கிறபடியினாலே நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருந்து, மனுஷனுக்கு இயற்கையானபடி நடக் கிறீர்களல்லவா? (1 கொரி. 1:10.)
4. உங்களில் ஒருவன்: நான் சின்னப் பனுக்கும், வேறொருவன்: நான் அப் பொல்லோவுக்கும் சீஷனாயிருக்கிறேன் என்று சொல்லும்போது நீங்கள் (மாம்சத் துக்குரிய) மனுஷர்களல்லவோ? ஆகிலும் அப்பொல்லோதான் என்ன? சின்னப்பன் தான் என்ன? (1 கொரி. 1:12.)
5. கர்த்தர் அவனவனுக்குக் கொடுத் தருளின வரத்தின்படியே இவர்கள் நீங்கள் விசுவசித்திருக்கிறவருடைய ஊழியர்தானே.
6. நான் நட்டேன், அப்பொல்லோ நீர் பாய்ச்சினான். ஆனால் சர்வேசுரனே விளைவைத் தந்தார். (அப். 18:4; 8:11.)
7. ஆதலால் நட்டவனாலும், நீர் பாய்ச்சினவனாலும் காரியமில்லை. விளையப்பண்ணுகிற சர்வேசுரனாலே காரியமாகிறது.
8. நடுகிறவனும், நீர் பாய்ச்சுகிறவ னும் ஒன்றுதான். ஆயினும் அவனவன் தன் தன் வேலைக்குத்தக்க கூலியைப் பெற்றுக்கொள்ளுவான். (சங். 61:11; மத். 16:27; உரோ. 2:6; கலாத். 6:5.)
9. நாங்கள் சர்வேசுரனுடைய உதவி யாட்களாயிருக்கிறோம். நீங்களோ சர்வேசுரனுடைய வெள்ளாண்மை யும், சர்வேசுரனுடைய கட்டிடமுமா யிருக்கிறீர்கள். (எபேசி. 2:20.)
* 9. நீங்கள் சர்வேசுரனுடைய கட்டிடமாயிருக்கிறீர்களென்று அர்ச். சின்னப்பர் 9-ம் வசனத்தில் சொன்னபிறகு அந்த உவமையைத் தொடந்து, விவேகமுள்ள சிற்பாசாரியைப்போல நான் அந்த ஞான மாளிகையின் அஸ்திவாரத்தைப் போட்டேன்; அதாவது: கிறீஸ்துநாதரைப் பற்றும் விசுவாசத்தில் உங்களை உட்படுத்தி, ஞான ஸ்நானத்தினாலே உங்களைச் சர்வேசுரனுடைய பிள்ளைகளாக்கினேன். அந்த அஸ்திவாரத்தின்மேல் ஆண்டவருடைய ஞான மாளிகையானது நாளுக்குநாள் உயர்ந்து சிறப்பான வேலைப்பாடாகவேண்டும். அதாவது: நீங்கள் கிறீஸ்துநாதரைப் பற்றும் விசுவாசத்தால் நாளுக்குநாள் அதிகரித்து, ஞான அறிவிலும், புண்ணிய முயற்சியிலும் வளர்ந்து, அந்த ஞான உப்பரிகையின் கொடுமுடியாகிய அர்ச்சியசிஷ்டதனத்தை அடையும்வரைக்கும் பிரயாசைப்படவேண்டும்.
10. எனக்கு அளிக்கப்பட்ட தேவ வரப்பிரசாதத்தின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல நான் அஸ்திவாரம் போட்டேன். வேறொருவன் அதன்மேல் கட்டியெழுப்புகிறான். ஆதலால் அவனவன் தான் இன்ன விதமாய்க் கட்டுகிறானென்று பார்த்துக்கொள்ளக்கடவான்.
11. போடப்பட்டிருக்கிற அஸ்திவாரமாகிய சேசுக்கிறீஸ்துநாதரை யல்லாமல் வேறே எந்த அஸ்திவாரத் தையும் எவனும் போடவொண்ணாது.
12. ஒருவன் அந்த அஸ்திவாரத்தின் மேல் பொன், வெள்ளி, விலையேறப் பெற்ற கல், மரம், புல், வைக்கோல் இவை களைக் கட்டினால், (1 இரா. 2:4-6.)
* 12. ஆனால் நான் போட்ட அஸ்திவாரத்தின்மேல் கட்டிடங் கட்டுகிற வேலைக்காரர் எவர்களாகிலுஞ் சரி அதன்மேல் தாங்கள் சேகரித்துக் கட்டுகிற பொருள் பொன்னோ, வெள்ளியோ, இரத்தினங்களோ, அல்லது மரமோ, புல்லோ, கூளமோ, எதைக்கொண்டு அதைக் கட்டுகிறார்களென்று பார்த்துக்கொள்ளக்கடவார்கள். அதாவது: நான் உங்களுக்குப் போதித்த உபதேசத்தின்மேல் எனக்குப்பிறகு வந்த உங்கள் போதகர்கள் தூய தங்கத்துக்குஞ் சுத்த வெள்ளிக்கும் விலையுயர்ந்த இரத்தினங்களுக்கும் ஒப்பான மெஞ்ஞான உபதேசத்தை உங்களுக்குப் போதிக்கிறார்களோ, அல்லது மரம், புல், கூளத்துக்கொப்பான இலெளகீகத் துக்குரிய வீண் பெருமை சிலாக்கியத்தைத் தேடி உலகத்துக்கடுத்த சாதுரிய வசனங்களால் உங்களுக்குப் போதிக்கிறார்களோவென்று அவர்களே பார்த்துக்கொள்ளட்டும். நீங்களும் என்னிடத்தில் பற்றிக்கொண்ட அந்த விசுவாசத்தின்மேல் தூய தங்கம் சுத்த வெள்ளி விலையுயர்ந்த இரத்தினங்களுக்கொப்பான உத்தம புண்ணிய முயற்சிகளில் வளர்ந்து வருகிறீர்களோ, அல்லது உங்கள் புண்ணியக் கிரியைகளில் மரம், புல், கூளங்களுக்கொப்பான இலெளகீக வீண் பாராட்டுதலையும் பெருமை சிலாக்கியத்தையும் தேடுகிறீர்களோ என்று பாருங்கள்.
13. அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும். ஆண்டவருடைய நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும். அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியே பரிசோதிக்கும். (1 கொரி. 4:5.)
* 13. ஏனெனில், ஆண்டவருடைய நாளிலே அவனவனுடைய வேலைப்பாடெல்லாம் அக்கினியிலே சோதிக்கப்படும். எவனுடைய வேலைப்பாடு நிலைநிற்குமோ அவன் சம்பாவனை அடைவான். எவனுடைய வேலைப்பாடு வெந்துபோகுமோ அவன் நஷ்ட மடைவான். ஆகிலும் அவன் பிழைப்பான். ஆனால் நெருப்பிலகப்பட்டுத் தப்பினாற் போலாகும். அதாவது தனித்தீர்வை நாளிலே, அவனவன் செய்த புண்ணிய கிரியைக ளெல்லாம் ஆத்துமங்களைச் சோதித்துப் பரிசுத்தமாக்குகிற உத்தரிப்பு ஸ்தலத்தின் அக்கினியினாலே பரிசோதிக்கப்பட்டு உயிருள்ள விசுவாசத்துக்குரிய சுகிர்தக் கருத்தோ டேயுந் தீப்பொறிக்கொத்த சுறுசுறுப்போடேயும் புண்ணியங்களைச் செய்துகொண்டு வந்தவன் உத்தரிப்பு ஸதலத்தின் நெருப்பினால் சுட்டெரிக்கப்படத்தக்க தொன்றுமில்லாமல் அந்தப் புண்ணியபேறுக்கேற்ற சம்பாவனையை உடனே மோட்சத்திலே அடையப் போவான். சொல்லப்பட்ட பெருமை சிலாக்கியம் முதலிய வீண் முகாந்தரங்களைப் பற்றிப் புண்ணியங்களைச் செய்தவனோ உத்தரிப்பு ஸ்தலத்தின் நெருப்பினால் சோதிக்கப்படும் போது, அந்தக் குறையுள்ள புண்ணியங்களினிமித்தம் வேதனைப்படுவானொழிய, அதற்குச் சம்பாவனையயான்றும் அடையான். ஆகிலும் அவன் மரணபரியந்தங் கிறீஸ்து நாதரைப் பற்றும் விசுவாசத்தில் நிலைத்திருந்ததினாலும், அவிசுவாசத்தினாலேயாவது சாவான பாவத்தினாலேயாவது தேவ இஷ்டப்பிரசாதத்தைப் போக்கடியாததினாலும் அவன் மோட்சத்திலே சேருவான் என்கிறதற்குச் சந்தேகப்பட இடமில்லையென்றர்த்தமாம்.
14. அதன்மேல் ஒருவன் கட்டின வேலைப்பாடு நிலைத்தால், அவன் சம்பாவனையடைவான்.
15. ஒருவனுடைய வேலைப்பாடு எரிந்துபோனால், அவன் நஷ்டப்படுவான். அவனோ இரட்சிக்கப்படுவான், என்றாலும் அக்கினியில் அகப்பட்டுத் தப்பினதுபோலாகும்.
16. நீங்கள் சர்வேசுரனுடைய ஆலய மாயிருக்கிறீர்களென்றும், சர்வேசுர னுடைய இஸ்பிரீத்துசாந்துவானவர் உங்களுக்குள்ளே வாசம் பண்ணுகிறா ரென்றும் அறியீர்களோ? (உரோ. 8:2; எபே. 2:21; 1 கொரி. 6:19; 2 கொரி. 6:16.)
17. ஒருவன் சர்வேசுரனுடைய ஆலயத்தைப் பங்கப்படுத்தினால், சர்வேசுரன் அவனை நிர்மூலமாக்குவார். சர்வேசுரனுடைய ஆலயம் அர்ச்சிக்கப்பட்டதாயிருக்கின்றது; நீங்களே அந்த ஆலயம். (1 கொரி. 6:19.)
* 17. யாதாமொருவன் துர்ப்போதகத்தினாலே உங்களை விசுவாசத்தில் தவறப் பண்ணுவானாகில், அப்படிப்பட்டவன் பரிசுத்த தேவாலயமாகிற உங்கள் ஆத்துமத்தைக் கெடுக்கிறபடியினாலே சர்வேசுரன் அவனைப் பழிவாங்கி நரகாக்கினைக்குத் தீர்வையிடுவாரென்று அர்த்தமாம்.
18. ஒருவனும் தன்னைத்தான் ஏய்க்க வேண்டாம். இப்பிரபஞ்சத்தில் உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று நினைத்தால், அவன் ஞானியாயிருக்கும்படிக்குப் பைத்தியகாரனாகக் கடவான்.
19. ஏனெனில் இவ்வுலகத்தின் ஞா னம் சர்வேசுரனுடைய சமுகத்தில் பைத் தியமாயிருக்கின்றது. இதற்கொத்த வண்ணம்: ஞானிகளை அவர்களுடைய சூட்சத்திலே பிடிப்பேன் என்றும், (யோப். 5:13.)
20. மற்றோரிடத்தில்: ஞானிகளு டைய சிந்தனைகள் விழலாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறார் என் றும் எழுதப்பட்டிருக்கின்றது. (சங். 93:11.)
* 19-20. உங்களில் சிலர் இலெளகீக சாஸ்திரங்களில் தேறினவர்களாய் ஞானிகளென்று பெயரடைந்தபடியால், சுவிசேஷ சத்தியங்களைத் தங்கள் இலெளகீக சாஸ்திர சாமர்த்தியப்படிக்குக் கண்டுபிடிக்கவும் போதிக்கவுந் துணிகிறார்கள். அப்படிப் பட்டவர்கள் சர்வேசுரனுடைய சமுகத்தில் மெய்யான சாஸ்திரிகளும், மெய்யான ஞானிகளுமாயிருக்க விரும்பினால் அந்த இலெளகீக சாஸ்திர சாதுரியங்களை எல்லாம் விட்டுவிட்டு ஒன்றுமறியாத சிறு பிள்ளைகளைப்போல் அந்த வேத சத்தியங்களை ஏற்றுக்கொண்டு விசுவசித்து, அவைகளைத் தாழ்ச்சியோடும் அடக்கவொடுக்கத் தோடும் போதிக்கக்கடவார்களென்று அர்த்தமாம்.
21. இப்படியிருக்க, ஒருவனும் மனிதரைப்பற்றி மேன்மை பாராட்டாதிருப்பானாக.
22. ஏனெனில் எல்லாம் உங்களுடையவைகளே; சின்னப்பனாகிலும், அப்பொல்லோவாகிலும், கேபாவா கிலும், உலகமாகிலும், உயிராகிலும், மரணமாகிலும், நிகழ்காரியங்களாகி லும், வருங்காரியங்களானாலும் எல்லாம் உங்களுடையவைகளே. (2 கொரி. 4:5,15.)
* 22. ஆகையால் உங்களில் ஒருவன் எந்தப் போதகரைக் குறித்தும் மேன்மை பாராட்டுவானேன்? சின்னப்பனாவது, அப்பொல்லோவாவது, இராயப்பராவது, உலகமாவது, உயிராவது, மரணமாவது, நிகழ்காலமாவது, வருங்காலமாவது, எல்லாம் உங்கள் ஈடேற்றத்துக்கு உதவும்படிக்குச் சொந்தமாகக் கொடுக்கப்பட்டது. நீங்களோ, சேசுநாதருக்கும், சேசுநாதர் சர்வேசுரனுக்குஞ் சொந்தமானவர்கள். ஆகையால் எல்லாவற்றையும் உங்களுக்குக் கொடுத்த சர்வேசுரனை மட்டும் மேன்மைபாராட்டி, அவருக்கு நன்றியறிந்த தோத்திரஞ் சொல்லுங்களென்று அர்த்தமாம்.
23. நீங்களோ கிறிஸ்துநாதருடையவர்கள். கிறீஸ்துநாதரோ சர்வேசுரனுடையவர்.