கொரிந்தியருக்கு எழுதிய முதல் நிருபம் - அதிகாரம் 02

சின்னப்பர் சிலுவையில் அறையுண்ட சேசுநாதரைப்பற்றிக் கொரிந்தியருக்குத் தாம் இயல்பான வார்த்தைகளால் பிரசங்கித்ததாகச் சொல்லுகிறார்.

1. அப்படியே, சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்தபோது கிறீஸ்துநாதரைப்பற்றிய சாட்சியத்தைச் சிறந்தோங்கிய வாக்கியத்தினாலும், ஞானத்தினாலும் அறிவிக்கிறவனாக வரவில்லை. (1 கொரி. 1:17.)

2. எப்படியெனில், உங்களுக்குள்ளே நான் சேசுக்கிறீஸ்துநாதரை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி வேறொன்றையும் அறிந்தவனாயிருக்க வேண்டுமென்று எண்ணவில்லை. (கலா. 6:14.)

3. அல்லாமலும் நான் உங்களிடத்தில் பலவீனத்தோடும், பயத்தோடும், மிகுந்த நடுக்கத்தோடும் இருந்தேன். (அப். 18:1-18; 2 கொரி. 10:1.)

4-5. உங்கள் விசுவாசம் மனிதருடைய ஞானத்தில் அல்ல, சர்வேசுரனுடைய வல்லமையில் ஊன்றி நிற்கும் படிக்கு என் பேச்சும், பிரசங்கமும், மனிதருடைய ஞானத்துக்குரிய நயமான வார்த்தைகளில் அல்ல, இஸ்பிரீத்துவையும், வல்லமையுங் காண்பிப்பதில் அடங்கியிருந்தது. ( 2 இரா. 1:16.)

6. அப்படியிருந்தும், நாங்கள் உத்தமர்களுக்குள்ளே ஓர் ஞானத்தைப் போதிக்கிறோம். அது இந்த உலகத்தின் ஞானமும் அல்ல, அழிந்து போகிறவர்களாகிய இவ்வுலக பிரபுக்களுடைய ஞானமும் அல்ல.

7. உலக ஆரம்பத்துக்கு முன்னே சர்வேசுரன் நம்முடைய மகிமைக்காக முன் நியமித்ததும், மறைக்கப்பட்டதுமா யிருந்த இரகசியமான தேவஞானத் தையே போதிக்கிறோம். (உரோ. 16:25.)

* 7. உலக ஆரம்பத்துக்கு முன்னே சர்வேசுரன் தம்முடைய தோத்திரத்துக்காகவும் நம்முடைய மகிமைக்காகவும் ஏற்படுத்தினதும் இரகசியத்தில் மறைக்கபட்டதுமாயிருந்த தேவ ஞானமேதென்றால், ஏக திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய அவதரித்த சுதனாகிய சர்வேசுரன் நம்மை இரட்சிக்கிறதற்கும், நீதிமான்களாக்குகிறதற்கும், மோட்சத்தில் நம்மை மகிமைப்படுத்துகிறதற்கும், மாம்ச ஐக்கியம் எடுக்கவேண்டுமென்று அர்ச். தமதிரித்துவம் நித்தியத்திற்கும் தீர்மானித்திருந்தது. ஆகிலும் இது நிறைவேறுந்தனையும் உலகத்துக்கு முழுவதும் மறைக்கப்பட்டதன்றியே பிதாப்பிதாக்களுக்கு முதலாய் மறைவான பொரு ளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த மாம்ச ஐக்கிய தேவ இரகசியத்தில் அடங்கியிருக்கிற அநேக மேலான பரம இரகசியங்களை உத்தமதனத்தை அடைந்தவர்களுக்கு மாத்திரம் அர்ச். சின்னப்பர் பிரசங்கித்துக்கொண்டு வந்தார். அந்தத் தேவ இரகசியத்திலே நிறைவேற வேண்டியிருந்த திருப்பாடுகளையும், அதனால் மனுஷர் மோட்சத்தில் அடையப்போகிற உன்னத மகிமை பாக்கியத்தையும், உலக பிரபுக்களும் பசாசுகளும் முதலாய் முந்தி அறியாதிருந்தார்கள். அறிந்திருந்தால் பிரபுக்கள் அவரைச் சிலுவையிலே அறைந்திருக்க மாட்டார்கள், பசாசுகளும் அதற்கு ஏவுதல் பண்ணியிருக்கமாட்டாதென்று அர்த்தமாமே.

8. இந்த ஞானத்தை இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை. அறிந்திருந்தால் மகிமையின் கர்த்தரை ஒருபோதுஞ் சிலுவையில் அறைந்திருக்கமாட்டார்கள். (அப். 3:15.)

9. ஆனால் எழுதப்பட்டிருக்கிற படியே சர்வேசுரன் தம்மை நேசிக்கிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணியிருக்கிறவைகளைக் கண் கண்டதுமில்லை; காதுகேட்டதுமில்லை; மனிதருடைய இருதயத்திற்கு அவைகள் எட்டினது மில்லை. (இசை. 64:4.)

10. நமக்கோ சர்வேசுரன் (அவைகளைத்) தம்முடைய இஸ்பிரீத்துவைக் கொண்டு வெளிப்படுத்தியிருக்கிறார். ஏனெனில் இஸ்பிரீத்துவானவர் எல்லா வற்றையும், சர்வேசுரனிடத்தில் ஆழ்ந்தி ருப்பவைகளை முதலாய் ஊடுருவிப்பார்க் கிறார். (மத். 13:11; அரு. 14:26; 16:13.)

11. எப்படியெனில், மனிதனுக்குரிய வைகளை மனிதனிடத்திலுள்ள அவ னுடைய ஆத்துமமேயன்றி மனிதருக் குள் எவன் அறிவான்? அப்படியே சர்வே சுரனுக்குரியவைகளைச் சர்வேசுரனு டைய இஸ்பிரீத்துவானவரேயன்றி வேறெவனும் அறியான்.

12. நாமோ இவ்வுலக ஞானத்தைப் பெற்றுக்கொள்ளாமல் சர்வேசுரனாலே நமக்கு அளிக்கப்பட்டவைகளை அறிந்து கொள்ளும்படிக்குச் சர்வேசுரனிடத்தி லிருந்து வருகிற இஸ்பீரித்துவையே பெற்றிருக்கிறோம்.

13. அவைகளையே நாம் பேசுகிறோம். ஆகிலும் மனுஷ ஞானத்தின் உயர்ந்த வார்த்தைகளினாலல்ல, இஸ்பிரீத்து (சாந்துவானவர்) போதிக்கிறபடி யே ஞானமானவைகளை ஞானமான வைகளோடு ஒப்பிட்டுப் பேசுகிறோம். (1கொரி. 1:17; 2:1, 4; 2 இரா. 1:16.)

14. மிருக சார்பான மனுஷனோ தேவ இஸ்பிரீத்துவானவருக்குச் சம்பந்தப்பட்டவைகளைக் கண்டுபிடி யான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஞானத் துக்கேற்றதன்மையாய் ஆராயப்படுவ தால், அவன் அவைகளைக் கண்டு பிடிக்கமாட்டான். (1 கொரி. 2:6.)

15. ஆனால் இஸ்பிரீத்துவையுடையவன் எல்லாவற்றையும் நிதானிக்கிறான். ஆயினும் அவன் மற்றொருவனாலும் நிதானிக்கப்படுகிறதில்லை.

16. ஏனெனில் கர்த்தருக்குப் போதிக்கும்படி அவருடைய சிந்தனையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறீஸ்து நாதருடைய சிந்தை உண்டாயிருக்கி றது. (ஞானா. 9:13; இசை. 40:13; உரோ. 11:34.)

* 14-15-16. இஸ்பிரீத்துசாந்துவின் வரப்பிரசாதத்தினாலே பிரகாசிக்கப்படாத இலெளகீக சிந்தனையுள்ள மனிதர்கள் ஞானக்காரியங்களைக் கண்டுபிடியார்கள். அவைகள் அவர்களுக்குப் பைத்தியம்போல் தோன்றும். இஸ்பிரீத்துசாந்துவின் வரப்பிரசாதத்தை அடைந்தவனோவென்றால், ஞானக்காரியங்களைத் தெளிவாய்க் கண்டுபிடிப்பான், ஆனால் அவனிடத்திலே நடக்கிற தேவ ஏவுதலை உலகப் புத்தியுள்ள மனிதர் கண்டுபிடிக்க மாட்டார்கள். ஏனெனில், அவனுள்ளத்தில் முயற்சி செய்கிற ஆண்டவருடைய வரப்பிரசாதத்தை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. நாங்களோ கிறீஸ்துநாதருடைய வரப்பிரசாதத்தை அடைந்து ஞானக்காரியங்களைப் போதிக்கத்தக்க வகையறிந்தவர்களாய் இருக்கிறோமென்று அர்த்தமாம்.