அர்ச். அருளப்பர் வெளிப்படுத்தின காட்சியாகமம் - அதிகாரம் 02

எபேசு, சிமிர்னா, பெர்காமு, தியத்தீரா என்னும் பட்டணங்களிலுள்ள சபைகளின் தூதர்களுக்கு எழுத வேண்டியவைகள் கற்பிக்கப்படுகின்றன.

1. எபேசு சபையின் தூதனுக்கு எழுது: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலது கரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொற் குத்துவிளக்குகளின் நடுவே உலாவுகிறவர் சொல்லுகிறதாவது:

2. உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும் அறிந்திருக்கிறேன். நீ பொல் லாதவர்களைச் சகிக்கமாட்டாதிருக் கிறதையும், அப்போஸ்தலராயிராமல் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லு கிறவர்களை நீ பரிசோதித்து, அவர் களைப் பொய்யர் என்று கண்டறிந் திருக்கிறதையும்

3. நீ பொறுமையாயிருக்கிறதையும், தளர்ந்துபோகாமல், என் நாமத்தின் நிமித்தம் துன்பப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.

4. ஆனாலும், நீ முன் கொண்டிருந்த பரம அன்பை விட்டுவிட்டாயென்று உன்பேரில் எனக்கு முறைப்பாடு உண்டு.

5. ஆதலால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாய் என்பதை நினைவுகூர்ந்து, தவஞ்செய்து, முந்தின (தர்மக்) கிரியைகளைச் செய். இல்லாவிட்டால் இதோ, நான் உன்னிடத்திற்கு வந்து, நீ தவஞ்செய்யாதிருந்தால் உன் விளக் குத் தண்டை அதன் இடத்தினின்று தள்ளிவிடுவேன்.

* 5. தவஞ்செய்:- வேதாகமத்தில் தவஞ்செய்தல் என்னும் வாக்கியத்துக்கு தன் பாவங்களைக் குறித்து மனதில் நொந்து வியாகுலப்பட்டு அவைகளைத் துவேஷித்துத் தள்ளுகிறதென்றும், மன வியாகுலத்தைக் காண்பிக்கிற வெளி ஒறுத்தல்களை அநுசரிக்கிற தென்றும் அர்த்தமாம். நான் வந்து விளக்குத் தண்டைத் தள்ளுவேன் என்பது, உனக்குப் பதிலாக வேறொரு மேற்றிராணியாரை ஸ்தாபிப்பேனென்று அர்த்தமாகும். அல்லது நீ ஆளுகிற சபையானது உன்னுடைய தப்பிதத்தினாலே கெட்டுப்போன பிறகு அதற்குப்பதிலாக வேறொரு சபையை ஸ்தாபிப்பேனென்றும் அர்த்தங்கொள்ளும்.

6. ஆகிலும் நான் வெறுக்கிற நீக்கொலாய்த்தாருடைய கிரியைகளை நீயும் வெறுக்கிறாயே. இந்த நற்காரியம் உன்னிடத்தில் உண்டு.

* 6. அந்த நீக்கொலாய்த்தார் யாரென்றால் அப்.நடபடி 6-ம் அதி. 5-ம் வசனத்தில் கண்ட நீக்கொலா என்ற தியாக்கோனால் உற்பத்தியான பதிதமார்க்கமாமென்று வேதபாரகர் சொல்லுகிறார்கள். கிறீஸ்துவர்களுக்குள்ளே விபசாரம் பாவமல்லவென்பதும், பரிசுத்தவான்களுக்குள்ளே எல்லாம் பரிசுத்தமாயிருக்கிறதென்பதும், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கலாமென்பதும், அந்த மார்க்கத்திலுள்ளஒரு விசேஷ துர்போதனையாயிருந்தது.

7. இஸ்பிரீத்துவானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவான். ஜெயங்கொள்ளு கிறவனுக்கு என் சர்வேசுரனுடைய சிங்காரத் தோட்டத்திலுள்ள ஜீவ விருட்சத்தின் கனிகளில் புசிக்கக் கொடுப்பேன். (ஆதி. 2:9.)

8. சிமிர்னா சபையின் தூதனுக்கு எழுது: ஆதியும் அந்தமுமானவர், மரித்தும், உயிரோடிருக்கிறவர் சொல் லுகிறதாவது:

9. உன் உபத்திரவத்தையும், உன் தரித்திரத்தையும் அறிந்திருக்கிறேன். ஆனாலும் நீ ஐசுவரியவானாயிருக்கி றாய். தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல், சாத்தானுடைய கூட்ட மாயிருக்கிறவர்களால் நீ தூஷணிக்கப் படுகிறாய்.

10. ஆகிலும் நீ படப்போகிற பாடுகளைத் குறித்து எவ்வளவும் பயப் படாதே. இதோ, நீங்கள் சோதிக்கப் படும் படியாகப் பசாசானது உங்களில் சிலரைக் காவலில் போடப் போகிறது. பத்து நாளைக்கு உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் பிரமாணிக் கமாயிரு; அப்பொழுது ஜீவ கிரீடத்தை உனக்குத் தருவேன்.

* 10. உலக பொருட்களில் நீ தரித்திரனென்றாலும், புண்ணியத்தில் நீ ஐசுவரியவானாயிருக்கிறாய். இதுவரையில் நீ பட்ட துன்பத்திலும் இன்னும் அதிக துன்பமுண்டாகும். அதனாலே நீ பயப்படாதே. அவைகள் சொற்பகாலந்தானிருக்கும் என்பது கருத்து.

11. இஸ்பிரீத்துவானவர் சபைகளுக் குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவான். ஜெயங்கொள்ளுகிற வனை இரண்டாம் மரணம் தீண்டாது.

* 11. இரண்டாம் மரணம் என்பது ஆத்தும மரணம். ஆத்துமம் தேவ இஷ்டப்பிரசாதத்தை இழந்து நித்திய நரகாக்கினைக்குப் பிராப்தியாகிற நிர்ப்பாக்கியமாம்.

12. பெர்காமு சபையின் தூதனுக்கு எழுது; இருபுறமும் கருக்குள்ள பட்ட யத்தை உடையவர் சொல்லுகிறதாவது:

13. சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ வசிக்கிறதையும், என் நாமத்தை நீ கைப்பற்றி யிருக்கிறதையும் உங்கள் நடுவில் சாத்தான் குடியிருக்கிற இடத்தில் எனக்கு உண்மையுள்ள சாட்சியாகிய அந்திப்பாஸ் கொலையுண்ட நாளிலே முதலாய் நீ என்மேலுள்ள விசுவாசத்தை மறுதலியாதிருந்ததையும் அறிந் திருக்கிறேன்.

14. ஆகிலும், சில காரியங்களைக் குறித்து உன்பேரில் எனக்கு முறைப்பாடு உண்டு. விக்கிரகங்களுக்குப் படைத்த வைகளைப் புசிப்பதற்கும், வேசித்தனம் பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ராயேல் புத்திரர் முன்பாகப் போடும் படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பாலாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்தில் உண்டு. (எண். 22:5; 24:3 .)

15. அப்படியே நீக்கொலாய்த்தாருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்தில் உண்டு.

* 15. மோயீசன் எண்ணாகமம் 22-ம் அதிகாரமுதல் சொல்லியிருக்கிறதுபோல் மோவாப்பித்தாருடைய இராஜாவாகிய பாலாக் என்பவன் இஸ்ராயேல் பிரஜைகளைச் சபிக்கும்படி பாலாமென்னும் தீர்க்கதரிசியை வரவழைத்திருந்தான். ஆனால் அவன் அவர்களைச் சபிப்பதற்குப் பதிலாய் அவர்களை ஆசீர்வதிக்கும்படி ஒரு தேவதூதன் அவனைக் கட்டாயஞ்செய்தார். ஆகையால் அவன், இஸ்ராயேல் பிரஜைகள் மோவாப் ஸ்திரீகளோடு பாவத்தைக் கட்டிக்கொள்ளவும், அதினாலே அவர்கள்பேரில் தேவ கோபாக்கினையை வருவிக்கவும் வழிபண்ணவேண்டுமென்று பாலாக் என்பவனுக்குத் துர் ஆலோசனை சொன்னான். அவனைப்போலவே நீக்கொலாய்த்தார் என்னப்பட்ட பதிதரும் கிறீஸ்துவர்கள்மேல் தேவகோபம் உண்டாகும்படி தங்கள் துர்ப்போதனைகளால் அவர்களைக் கெடுக்கப்பார்த்தார்கள்.

16. ஆகையால் நீ தவஞ்செய். இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்ட யத்தைக்கொண்டு அவர்களோடே யுத்தம் பண்ணுவேன்.

17. இஸ்பிரீத்துவானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவான். ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைக் கொடுப்பதுமன்றி, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையுங் கொடுப்பேன். அந்தக் குறிக்கல்லின் மேல் ஓர் புதிய நாமம் எழுதப்பட்டிருக்கிறது. அதை வாங்குகிறவனொழிய வேறெவனும் அதை அறியான்.

* 17. மறைவான மன்னா:- தங்கள் ஞான சத்துருக்களை ஜெயிக்கிற புண்ணியவான்களுக்குச் சர்வேசுரன் இவ்வுலகத்தில் அளிக்கும் இஷ்டப்பிரசாதமும், மறு உலகத்தில் அளிக்கும் நித்திய சம்பாவனையுமாம்.

18. தியத்தீரா சபையின் தூதனுக்கு எழுது: அக்கினிச் சுவாலை போன்ற கண் களும், வெண்கலம் போன்ற பாதங்களு முள்ள தேவசுதன் சொல்லுகிறதாவது:

19. உன் கிரியைகளையும், உன் விசுவாசத்தையும், உன் பரம அன்பையும், உன் ஊழியத்தையும், உன் பொறுமை யையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்தவைகள் அதிகமாயிருக் கிறதையும் அறிந்திருக்கிறேன்.

20. ஆகிலும் உன்மேல் எனக்குச் சில முறைப்பாடுகள் உண்டு. என்னவெனில்: தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற ஜெசாபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியர்கள் வேசித்தனம்பண்ணவும், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை மயக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.

* 20. இங்கே சொல்லப்பட்ட ஸ்திரீ நீக்கொலாய்த்தாருடைய பதித மார்க்கத்திலே உட்பட்ட ஓர் மேன்குல ஸ்திரீயாமே. அவள் செல்வத்திலும் துஷ்டத்தனத்திலும் பேர் போனவளாய் இருந்தபடியால், பழைய ஏற்பாட்டிலே காணப்படுகிற ஜெசாபேல் என்கிற துர்மார்க்க இராக்கினியின் பேர் அவளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதாகத் தோன்றுகிறது.

21. அவள் தவஞ்செய்யும்படியாய் அவளுக்குக் காலம் கொடுத்தேன். அவளுக்கோ தன் வேசித்தனத்தை விட்டுத் தவஞ்செய்ய மனமில்லை.

22. இதோ, நான் அவளைக் கட்டிலில் படுகிடையாக்குவேன். அன்றியும் அவளுடனே விபசாரஞ் செய்தவர்கள் தங்கள் கிரியைகளைவிட்டுத் தவஞ்செய்யாதிருந்தால், அவர்கள் அகோர துன்பத்துக்குள்ளாவார்கள்.

23. அவளுடைய மக்களையும் கொல் லவே கொல்லுவேன். அப்போது உள்ளிந் திரியங்களையும் இருதயங்களையும் பரிசோதிக்கிறவர் நானே என்று சகல சபைகளும் அறிந்துகொள்ளும். இப்படி யே உங்களில் ஒவ்வொருவனுக்கும் தன் தன் கிரியைகளின்படியே பலன ளிப்பேன். (1 அரச. 16:7; சங். 7:10; எரே. 11:20; 17:10; 20:12.)

24. பின்பு உங்களுக்கும் தியத்தீராவிலுள்ள மற்றவர்களுக்கும் நான் சொல் லுகிறதாவது: அந்தப் போதகத்தை ஏற்றுக் கொள்ளாமலும், மகா ஆழ்ந்த தென்று அவர்கள் சொல்லிவருகிற சாத் தானுடைய ஞானங்களை அறியாமலும் இருக்கிறவர்களாகிய உங்கள் மேல் வேறே பாரத்தைச் சுமத்தமாட்டேன்.

25. ஆனாலும் நீங்கள் கைக்கொண்டிருக்கிறதை நான் வருந்தனையும் கடைப்பிடியுங்கள்.

26. ஜெயங்கொண்டு, முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் காப்பாற்றினவ னெவனோ, அவனுக்கு ஜனங்கள்மேல் அதிகாரங் கொடுப்பேன்.

27. அவன் இருப்புக்கோலால் அவர் களை ஆளுவான். அவர்கள் குசக்கலம் போல் நொறுக்கப்படுவார்கள். இவ்வித அதிகாரம் என் பிதாவினிடத்தில் பெற்றுக் கொண்டேன்.

28. அன்றியும் விடிவெள்ளியையும் அவனுக்குக் கொடுப்பேன்.

* 28. காட்சி. 22-ம் அதி. 16-ம் வசனம் காண்க. விடிவெள்ளி என்பது நித்திய காலம் விடியப்போகிறதைக் காண்பிக்கிறது. அதாவது: ஒருபோதும் அஸ்தமிக்காத நித்திய பிரகாசமுள்ள நாள் பரிசுத்தவான்களுக்குத் துவக்கப்போகிறதைக் குறிக்கிறது.

1. செத்தவனாயிருக்கிறாய்:- சார்திஸ் நகரத்துச் சபையாரில் அநேகர் தங்கள் பாவங்களால் தேவ இஷ்டப்பிரசாதமாகிய ஞான உயிரை இழந்து, ஞான சாவு செத்தவர்களாயிருந்தார்கள்.

2. சாகப்போனவைகளை என்பது சாகிறதற்குரிய ஆபத்தில் இருந்தவர்களென்றும், கர்த்தர் எச்சரியாதேபோனால், அவர்கள் ஞானவிதமாய்ச் செத்திருப்பார்கள் என்றும் அறிக.

29. இஸ்பிரீத்துவானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவான்.