ஏழு பொற் குத்துவிளக்குகளால் குறிக்கப்பட்ட ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கு அர்ச். அருளப்பர் எழுதக் கற்பிக்கப்பட்டது.
1. சீக்கிரத்தில் நடக்கவேண்டியவை களைத் தம்முடைய ஊழியர்களுக்குத் தெரிவிக்கும்பொருட்டு, சர்வேசுரன் சேசுக்கிறீஸ்துவுக்கு ஒப்புவித்ததும், அவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியனாகிய அருளப்ப ருக்கு அறிவித்ததுமாகிய காட்சி:
* 1-வது இந்தக் காட்சியானது பிதாவாகிய சர்வேசுரனால் அல்லது அர்ச். தமதிரித்துவத்தினால் சேசுநாதருடைய மனுஷ சுபாவத்துக்கும், சேசுநாதரால், தம் தூதனாகிய சம்மனசுவுக்கும், சம்மனசானவரால் அர்ச். அருளப்பருக்கும், அர்ச். அருளப்பரால் சாதாரண திருச்சபைக்கும் வெளிப்படுத்தப்பட்டதென்று அறிக.
2. இவர் சர்வேசுரனுடைய வாக்கியத்துக்குச் சாட்சியஞ் சொல்லி, தாம் கண்ட யாவற்றையும் சேசுக்கிறீஸ்து நாதருடைய சாட்சியாக வெளிப்படுத்தினார்.
* 2-வது சீக்கிரத்தில் என்பதை நாம் நினைப்பதுபோல் எண்ணத்தகாது. கடவுள் சமுகத்தில் ஒருநாள் ஆயிரம் வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள் போலவும் இருப்பதினால், நமக்கு வெகு காலமாய்த் தோன்றுவது சுவாமிக்கு ஒரு க்ஷணமாகவும், நமக்கு ஒரு க்ஷணமாய்த் தோன்றுவது அவருக்கு நெடுங்காலமாகவும் இருக்கலாம்.
3. இந்தத் தீர்க்கதரிசனத்திலுள்ள வாக்கியங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவனும், இதிலே எழுதியிருக்கிறவை களை அநுசரிக்கிறவனும் பாக்கியவான். ஏனெனில் காலம் சமீபித்திருக்கின்றது.
* 3-வது இந்த ஆகமத்தில் சொல்லப்பட்டவைகளில் சில காரியங்கள் அக்காலத்தில் உடனேயும், சில பிற்காலங்களிலும், இன்னும் சில உலக முடிவிலும், கடைசியாய் மற்றவைகள் மோட்சத்தில் நித்தியமாயும் நிறைவேறவேண்டியவைகளாம்.
4. அருளப்பன் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுவதாவது: இருக்கிறவரும், இருந்தவரும், இனி வருபவருமானவராலும், அவருடைய சிங்காசனத்துக்கு முன்பாக நிற்கிற ஏழு அரூபிகளாலும், சேசுக்கிறீஸ்து நாதராலும் உங்களுக்கு இஷ்டப்பிரசாதமும் சமாதானமும் உண்டாவதாக. (யாத். 3:14.)
5. இவர் உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதல் பேறானவரும், பூமியின் இராஜாக்களுக்கு அதி பதியுமாயிருக்கிறார். இவர் நம்மைச் சிநேகித்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களினின்று நம்மை கழுவி, ( 1 கொரி. 15:20; எபி. 9:14.)
6. தம்முடைய பிதாவாகிய சர்வேசுரனுக்கு முன்பாக நம்மை இராஜாக்களும் குருக்களுமாக்கினார். அவருக்கே அநவரதகாலத்துக்கும் மகிமையும் வல்ல மையும் உண்டாவதாக. ஆமென்.
7. இதோ, மேகங்களின்மீது வருகிறார். கண்கள் யாவும் அவரைக் காணும்; அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள். பூமியிலுள்ள எக்குலத்தாரும் அவரைப் பார்த்து, தங்கள்மேல் நொந்து அழுவார்கள். அப்படியே ஆகும். ஆமென். (இசை. 3:13; மத். 24:30; யூதா.14.)
8. நானே அல்பாவும், ஓமேகாவும், ஆதியும் அந்தமும் என்று ஆண்டவராகிய கடவுள் சொல்லுகிறார். இவரே இருக்கிறவர், இருந்தவர், இனி வரப்போகிறவர், சர்வ வல்லபமுள்ளவர். (இசை. 41:4; 44:6; காட்சி. 21:6; 22:13.)
* 8. இந்த ஆகமம் அர்ச். அருளப்பரால் எழுதப்பட்ட கிரேக்க பாஷையில் அல்பா என்பது முதல் எழுத்தும், ஓமேகா என்பது கடைசி எழுத்துமாயிருக்கின்றது. ஆகையால் சர்வேசுரன் நாமே, அல்பா ஓமேகா என்று சொல்லும்போது எல்லாத்துக்கும் ஆதிகாரணமும் முடிவும் கதியும் நாமே என்று சொல்லுகிறாரென்று அறியவும்.
9. உங்கள் சகோதரனும் சேசுக்கிறீஸ்துவுக்குள் துன்பத்துக்கும் இராச் சியத்துக்கும் பொறுமைக்கும் உடன் பங்காளியுமாகிய அருளப்பன் என்னப் பட்ட நான் தேவ வாக்கியத்தைத்தைக் குறித்தும், சேசுநாதருடைய சாட்சியத்தைக் குறித்தும் பாத்மோஸ் என்னப்பட்ட தீவிலே இருந்தேன்.
* 9. பாத்மோஸ் என்கிற தீவு ஏஜ் என்கிற கடலிலே கிரீஸ் தேசத்துக்குச் சமீபமாயிருக்கின்றது. அத்தீவிலே முந்நூறு ஜனங்கள்போலே குடியிருக்கிறார்கள்.
10. கர்த்தருடைய நாளில் நான் பரவசமாகி, எனக்குப் பின்னாலே எக்காள சத்தம்போன்ற ஓர் பெரும் சத்தத்தைக் கேட்டேன்.
* 10. கர்த்தருடைய நாள்:- ஞாயிற்றுக்கிழமை
11. அது: நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்திலே எழுதி, ஆசியாவிலுள்ள எபேசு, சிமிர்னா, பெர்காமு, தியத்தீரா, சார்தீஸ், பிலதெல்பியா, லவோதிக் கையா என்னும் ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்றது.
12. அப்பொழுது என்னுடனே பேசின சத்தம் இன்னதென்று பார்க்கும்படி திரும்பினேன். திரும்பின அளவில் ஏழு பொற் குத்துவிளக்குகளையும்,
13. அவ்வேழு பொற் குத்துவிளக்குகளின் மத்தியில் மனுமகனுக்கு ஒப்பாயிருந்த ஒருவரையும் கண்டேன். அவர் நிலையங்கி தரித்து, மார்பினருகே பொற்கச்சை கட்டியிருந்தார். (தானி. 10:5.)
14. அவருடைய தலையும், மயிரும் தூய்மையான ஆட்டு உரோமத்தைப் போலவும், உறைந்த பனியைப்போலவும் வெண்மையாயிருந்தது. அவருடைய கண்கள் அக்கினிச் சுவாலைபோலிருந்தன.
15. அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்கிற வெண்கலத்துக்கு ஒப்பாயிருந்தன. அவருடைய குரலோ, பெரும் வெள்ளத்தின் இரைச்சலைப் போலிருந்தது.
16. அல்லாமலும் அவர் தம்முடைய வலது கரத்தில் ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார். அவருடைய வாயிலிருந்து இருபுறமும் கருக்கான பட்டயம் புறப்பட்டது. அவருடைய முகம் தன் பலனெல்லாங்கொண்டு ஜொலிக்கிற சூரியனைப்போலிருந்தது.
17. நான் அவரைக் கண்டவுடனே செத்தவனைப்போல் அவருடைய பாதத்திலே விழுந்தேன். ஆனால் அவர் தம்முடைய வலது கரத்தை என்மேல் வைத்து, என்னைப் பார்த்துச் சொன்ன தாவது: பயப்படாதே; நானே ஆதியும் அந்தமும், (காட்சி. 21:6; 22:13; இசை. 41:4; 44:6; 48:12.)
18. சீவியருமாயிருக்கிறேன். நான் மரித்தேன்; ஆனாலும் இதோ, என்றென்றைக்கும் ஜீவனுள்ளவராயிருக்கிறேன். மரணம் நரகம் இவைகளின் திறவுகோல் என் கையிலிருக்கின்றது.
* 18. முதலும் கடைசியும் என்பது எல்லாவற்றையும் படைத்து, எல்லாவற்றிற்கும் கதியாயிருக்கிற சர்வேசுரனென்றும்; மரணம், நரகம் இவற்றின் திறவுகோல்களைக் கைக்கொண்டிருக்கிறேன் என்கிறதினாலே உயிர்வாழப் பண்ணவும், சாகடிக்கவும், நரகத்தில் விழாதபடிக்கு இரட்சிக்கவும், நரகத்தில் தள்ளவும் வல்லபராயிருக்கிறேனென்று அர்த்தமாம்.
19. ஆதலால், நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப் பின் சம்பவிக்கவேண்டியவைகளையும்,
20. என் வலது கரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொற் குத்துவிளக்குகளையும்பற்றி எழுது. அந்த ஏழு நட்சத்திரங் களும் ஏழு சபையின் தூதர்களாம்; அந்த ஏழு விளக்குகளும் ஏழு சபைகளாம்
* 20. இரண்டாம் மூன்றாம் அதிகாரங்களில் சொல்லப்போகிறபடியே, ஏழு நட்சத்திரங்களால் குறிக்கப்பட்ட ஏழு தூதர்கள் அந்த ஏழு சபைகளின் மேற்றிராணிமார்களாம். அந்த நட்சத்திரங்கள் சேசுநாதருடைய வலது கையில் இருக்கின்றன. அதாவது: மேற்றிராணிமார்கள் சேசுநாதருடைய பிரதான ஸ்தானாபதிகளென்றும், அவர்கள் நட்சத்திரங்களைப்போல் சுவிசேஷ வெளிச்சத்தைத் தங்களைச்சுற்றிலும் பிரகாசிக்கப்பண்ணுகிறார்களென்றும், அவர்கள் தவறிப்போகாமலும், அஞ்சாமலும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படியாக சேசுநாதருடைய வலது கரத்தால் தாங்கப்படுகிறார்களென்றும் அர்த்தமாம்.