அர்ச். அருளப்பர் வெளிப்படுத்தின காட்சியாகமம் - பாயிரம்

அப்போஸ்தலரான அர்ச். அருளப்பர் தொமிசியானு என்கிற இராயனால் பாத்மோஸ் என்ற தீவுக்குப் பரதேசியாக அனுப்பப்பட்டிருக்கையிலே கர்த்தர் அவதாரத்தின் 95-ம் வருஷத்தில் இந்த அருமையான காட்சி ஆகமத்தைக் கிரேக்கப் பாஷையில் எழுதினார். 

முதல் மூன்று அதிகாரங்களில் சின்ன ஆசியாவிலுள்ள ஏழு மேற்றிராணிமார்களுக்கு எழுதும்படி தமக்குக் கற்பிக்கப்பட்டவைகளை எழுதுகிறார். 

மற்ற அதிகாரங்களில் கடைசிமட்டும் திருச்சபையில் நடக்கப்போகிற பிரதான காரியங்களையும், விசேஷமாய் உலகமுடிவில் வரப்போகிற அந்திக்கிறீஸ்துவின் செய்கைகளையும் குறித்து ஆழ்ந்த கருத்துள்ள தீர்க்கதரிசனங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். 

இந்த அதிசயத்துக்குரிய பிரபந்தத்திலே எத்தனை வார்த்தைகள் உண்டோ அத்தனை பரம இரகசியங்கள் உண்டென்று சொல்லுவதுமாத்திரம் போதாது. 

ஒவ்வொரு வார்த்தையிலும் பற்பல ஞான அர்த்தங்கள் அடங்கியிருக்கின்றன என்று மிகவும் பேர்போன வேதபாரகராகிய அர்ச். எரோணிமுஸ் என்பவர் வசனித்திருக்கிறார். 

அதன்பேரில் வியாக்கியானம் பண்ணின சாஸ்திரிகளுக்குக் கணக்கில்லை. 

நாமோ, இந்தத் தீர்க்கதரிசனங்களுக்கு உள்ள அர்த்தம் இன்னதென்று சொல்லத் துணியாமல், வாசிக்கிறவர்களுக்குக் கருத்து விளங்கும்படியாகச் சிறிது வியாக்கியானங்களை மட்டும் சேர்த்திருக்கிறோம்.