கடவுளும் நாமும் - புத்தி

15. புத்தி என்பது யாது?

அறியவும், யோசிக்கவும் சக்தியுடைய தத்துவம் புத்தி எனப்படும். 

16. புத்தியின் அலுவல் என்பது என்ன?

உண்மையும் நன்மையுமானதை அறிந்து, பொய்மையிலிருந்து, உண்மையை வேறுபடுத்துவதும் தீமையிலிருந்து நன்மையை வேறுபடுத்துவதும், புத்தியின் அலுவலாகும்

17. புத்தியைக் கொண்டு நாம் அறியக் கூடிய உண்மைகள் யாவை? 

(1) உலகிலுள்ள பல்வேறு படைப்புகளையும், அவற்றின் இடையே மனிதனுக்குள்ள மதிப்பையும், பதவியையும் அறியக்கூடும்.

(2) உலகம் தன்னில் தானே உண்டானதல்ல; கடவுளாலேயே உண்டாக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கண்டு பிடிக்கக்கூடும்.

(3) கடவுள் எத்தன்மையானவர். அவர் சகல இலட்சணமும் அதிகாரமும், நன்மைத்தனமும் உள்ளவர் என்று அறியலாம்.

(4) மனிதன் கடவுளின் படைப்புப் பொருளானதால் அவருக்கு ஊழியம் செய்யவும், அவர் சட்டத்துக்குக் கீழ்ப்படியவும் கடமைப்பட்டிருக்கிறான் என்று அறியக்கூடும்.

(5) கடவுளுடைய சட்டம் எது, செய்யத்தக்கது என்ன, செய்யத்தகாதன எவை என்று கண்டுபிடிக்கலாம். 

18. உண்மை அல்லது சத்தியம் என்றால் என்ன?

கண், அல்லது காது முதலிய புலன்கள் வழியாக அறிந்த ஒரு பொருள் அல்லது விஷயத்தின் தன்மை, குணம் முதலியவற்றைக் கூட்டாமலும், குறைக்காமலும், உள்ளதை உள்ளவாறே கண்டுணர்ந்து மனதில் இருத்துவது உண்மை எனப்படும். மேற்கண்டவாறு அறிந்துகொண்ட உண்மையைக் கூட்டாமலும், குறைக்காமலும் அப்படியே எடுத்துரைப்பது உண்மை பேசுவதாகும்,

19. உண்மை எத்தனை வகைப்படும்?

புலன்களைக் கொண்டு நாமாகவோ அல்லது பிறர் மூலமாகவோ அறியும் இயல்பான விளக்கங்களை இயற்கை உண்மை எனலாம். புலன்களுக்குப் புலப்படாத, இயற்கைக்கு மேலான விஷயங்களை அறிவோமானால் அவை இயற்கைக்கு மேலான உண்மை எனப்படும்.

20. இயற்கை உண்மைகளை எவ்வாறு அறியலாம்?

இற்கை உண்மைகளை சரித்திரம், விஞ்ஞானம் முதலியவற்றின் உதவியால் அறியலாம்.

21. இயற்கைக்கு மேலான உண்மைகளை எவ்விதம் அறியலாம்? 

தேவ உதவியைக்கொண்டு, பின்காணும் வழிகள் மூலமாக இயற்கைக்கு மேலான உண்மைகளை அறியலாம். அவையாவன:

(1) மனச்சாட்சியின் குரலொலி 
(2) தெய்வ வெளியீடு 
(3) பாரம்பரை 
(4) கடவுளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள்