கடவுளும் நாமும் - மனசாட்சி

22. மனசாட்சியின் குரலொலி என்பது யாது?

தக்கதை செய்து. தகாததை விலக்குவது மனிதனின் கடமை என்று நமக்குரைக்கும், மனதினுள் அடங்கிய ஓர் அறிக்கை இது 

23. மனசாட்சியின் குரலொலி வெறும் அறிக்கை தானா?

இல்லை; நாம் கீழ்ப்படிய வேண்டும் என்று உணரும் வண்ணம் மனசாட்சி எடுத்துக்காட்டும் ஒரு கைகாட்டி.

24. மனசாட்சியால் உதிக்கும் உணர்வு வேறு ஏதேனும் உண்டா? 

தகுதியானதைச் செய்யும்போது நமக்குத் திருப்தியும், மன மகிழ்ச்சியும் உண்டாகிறது. தகாதவற்றைச் செய்யும் போது நமது குற்றத்தை உணர்ந்து, நம் மனதில் திகில் உண்டாகும்படி செய்கிறது. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்': மனக் குரங்கை மாற்றலரிது" என்னும் முதுமொழிகள் இதை உணர்த்துகின்றன.

25. இவ்வித உணர்ச்சிகள் உதிப்பதற்குக் காரணம் என்ன ? 

கடவுள் நாம் செய்கிறதைப் பார்க்கிறார்; நன்மை செய்யும்பொழுது அவருக்கு நம்மீது விருப்பமும், தீமை செய்யும் பொழுது வெறுப்பும் உண்டாகிறது என்பதை நாம் உறுதியாய் அறிந்திருப்பதுதான் இதற்குக் காரணம்.

26 தீமை செய்யும் பொழுது மனதில் சஞ்சலம் ஏற்படுவதின் காரணம் என்ன? 

ஏனெனில், கடவுளின் கற்பனையை மீறியிருக்கிறோம் என்று நமக்குத் தெரிகிறது. இந்தக் குற்றத்துக்காக நம்மை ஒருக்கால் தண்டிப்பார் என்று அஞ்சுகிறோம். 

27. மனிதரைப்பற்றிய பயமும் நமக்கு ஏற்படுவது உண்டா ?

ஆம். நமது செயலைப்பற்றி வெட்கப்பட்டு, மனிதர் நம்மைக் கண்டுபிடித்துக் குற்றம் சாட்டித் தண்டிப்பார்களோ என்று அஞ்சுவது உண்டு. ஆனால் இது மனசாட்சியின் குரலொலியல்ல. நமது பாவம் மறைவானாலும், ஒருவரும் அறியக்கூடாததாயினும், பாவத்தால் கடவுளுக்கு நம் மீது வெறுப்பும், அதனால் நமக்கு அவரது தண்டனையும் வருமென்று அஞ்சும்படி செய்வது மனசாட்சி.

28. மனசாட்சியின் குரலொலி எவ்விதம் ஏற்பட்டுள்ளது? 

கடவுளே, அதை நமது ஆன்மாவில் அமைத்திருக்கிறார். அவரது கட்டளையை அனுசரிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம் என்று நாம் அதைக் கொண்டு உணர வேண்டுமென்பது அவரது சித்தம்.

29. மனசாட்சி யாருக்கு உரைக்காது? ஏன்?

கடவுள் அறியாத, அல்லது கடவுள் இல்லை என்று சாதிக்கும் நாஸ்திகனுக்கும் மனசாட்சி இத்தன்மையாக உரைப்பதில்லை. ஆயினும், அவனும் நம்மைப்போல் நன்மை தீமைகளைப்பற்றி உணரக்கூடும். ஆனால் அவ்வுணர்ச்சிகளின் உட்பொருள் அவனுக்கு விளங்காது. கடவுளை விசுவாசியாமல் அவற்றைக் கண்டுபிடிக்க இயலாது.

30. இந்த வேறுபாடு ஏன்?

ஏனெனில் நமக்குப் பொறுப்பும், கடமையும் உண்டென்று மனசாட்சி கூறுகிறது. பொறுப்பு என்றால் பிறர் மீதுள்ள உத்திரவாதம்; பிறருக்கு நாம் ஏதோ கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதை கடமை உணர்த்துகிறது. ஒருவன், மற்றொருவனுக்குத் தன் மீது உண்டான உரிமை பின் காரணத்தால், அவனுக்கு தான் கடமைப்பட்டவனாக வேண்டும் அவன் மீது தனக்கு கடமை உண்டென்று உணரலாம். இது மனசாட்சியல்ல. ஏனெனில், மனசாட்சி மற்றொரு மனிதன் மட்டில் அல்ல, கடவுள் மட்டில் நமக்கு உள்ள உத்திரவாதம், கடமையைக் குறிக்கிறது..

மேலும், கடவுளைப்பற்றி ஒன்றுமே அறியாதவன் தண்டனைக்கு அஞ்சினால், அது மனிதரால் வரக்கூடிய தண்டனையைப் பற்றியே யன்றி, கடவுளால் விதிக்கப்படும் தண்டனையைப்பற்றி இராது. மனசாட்சியோ வென்றால் தேவ கோபத்தின் பயத்தை நமக்கு வற்புறுத்துகிறது.

31. இதனால் நாம் அறிவதென்ன?

கடவுளைப்பற்றிய விசுவாசமின்றி (கடவுள் உண்டு என்று நம்பாது இருந்தால்) பொய்யான கடமையை உணர்த்தும் அறநெறி வாழ்க்கை என்பது இருக்கவே முடியாது. கடவுளின்றி நமது அறநெறி வாழ்க்கை. பயனுள்ள வாழ்வு நமக்கு விருப்பத்தை அளிக்கும் ஒரு வாழ்க்கையாகவோ, அல்லது சமூகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு வழக்கமாகவோ அமையுமேயன்றி வேறாகாது.

கடவுளை நீக்கின மனசாட்சி, நீதிபதி இல்லாத நீதி மன்றத்துக்கு ஒப்பாகும்.

32. எல்லா மனிதர்களிடமுள்ள மனசாட்சி ஒரே விதமானதா? 

இல்லை, சிலரிடத்தில் அதிகத் தெளிவாயும், திறமையுள்ளதாகவும் இருக்கிறது. வேறு சிலரிடம் மந்தமாகவும் திறமை குன்றியதாகவும் இருக்கிறது. 

33. இந்த வேறுபாட்டுக்குக் காரணம் யாது?

பயிற்சியும், பழக்கங்களும் இந்த வேறுபாட்டுக்கு முதன்மையான காரணம். சரியான முறையில் பயிற்சிபெற்று, நல் வழியில் நடக்க விருப்பமுள்ளவர்களுக்கு மனசாட்சியின் குரலொலி வெகு தெளிவாய்க் கேட்கும் நன்முறையில் பயிற்சி பெறாதவர்களுக்கும், தீய நடத்தையைப்பற்றிய எச்சரிக்கை இல்லாதவர்களுக்கும் அது தெளிவற்றதாயும், குறைந்த ஒலியுடனும் கேட்கும். ஏனெனில் சாதாரணமாய் அவர்கள் அதைக் கவனிப்பதும் இல்லை. உற்றுக்கேட்பதுமில்லை.

34. 'தக்கது இது. தகாதது இது' - என்று நிதானிப்பதில் எல்லோருடைய மனசாட்சியும் ஒரேவிதமாக (மாறுபாடின்றி) கூறுகிறதா? 

மிக முக்கியமான விஷயங்களில், எல்லோருடைய மனசாட்சியும் ஒரே விதமாகத்தான் தீர்மானிக்கிறது. ஆனால் சில நுட்பமான விஷயங்களைப்பற்றி அனைவருடைய மனசாட்சியும் ஒத்திருப்பதில்லை

35. இந்த வேறுபாடு உண்டாகக் காரணம் என்ன?

யோசிக்காத குறையினாலும், அல்லது ஒரு வழக்கத்தை உண்மைக் கொள்கையாகப் பாவித்துக் கொள்வதினாலும் இந்த வேறுபாடு உண்டாக விசேஷ காரணமாகிறது.

36. இதை சில எடுத்துக்காட்டுகளினால் விளக்குக.

நாகரீகமில்லாத சில முரட்டு ஜாதியார், தங்களிடம் அகப்பட்டவர்களை மிகவும் கொடுமையாகத் தண்டிக்கிறார்கள். வேறு சிலர் திருடுவதையும், கொள்ளையடிப்பதையும் தொழிலாகக் கொள்கிறார்கள். சிலர் நரபலி இடுகிறார்கள்; நர மாமிசத்தையும் புசிக்கிறார்கள்; வேறுசிலர் பொய் சொல்வதும், பிறரை வஞ்சிப்பதுமே தொழிலாயிருக்கிறார்கள். ஆனால் இவற்றில் எதையாகிலும் தப்பிதம் என்று அவர்கள் எண்ணுவதில்லை.

37. இவர்களுடைய எண்ணம் தவறானது என்று நமக்கு எப்படித் தெரியும்? 

நமது புத்தியைச் சரிவர உபயோகித்து ஆழ்ந்து யோசித்துப் பார்ப்போமானால் மேற்கூறிய செயல்கள் எல்லாம் தீயவை என்று நமக்குப் புலப்படும். நாகரீகமடைந்த மக்கள் இவற்றைக் கண்டுணர்ந்து. இந்த தீய வழக்கங்களை ஒழித்துவிட்டார்கள். குரூரச் செயல்களைச் செய்யும் நாகரீகமற்ற மக்கள் கூட, அவர்கள் செய்வது தவறு என்று நாம் அவர்களுக்குக் கற்பித்தால் தங்களுடைய நடத்தை தவறுதலானதென்று தாங்களே உணர்கிறார்கள்.

38. மனசாட்சி வளர்ச்சி அடையக் கூடியதா?

ஆம். நல்லது எது கெட்டது எதுவென்று அதிகத் தெளிவாய் அறியப் பிரயாசைப்படுவதாலும், மனசாட்சி நமக்குக் கூறுவதை உற்றுக்கேட்டு, அதன் ஏவுதல்படி நடக்கிற பழக்கத்திலும் மனசாட்சி அடையக்கூடும்.

39. நல்லது இது. கெட்டது அது என்று நாம் ஐயமற அறிவதற்குச் செய்யவேண்டியது யாது? 

நாமை விட நல்லவர்கள் என்னும்படியான மக்களுடன் நெருக்கப் பழகுவது இதை அறிவதற்கேற்ற சிறந்த வழியாகும். அவர்கள் ஏதேனும் ஒரு செயல் தவறு என்று சொன்னால், நமக்கு அது அப்படிப்பட்டது என்று ஏற்கனவே தெரியாவிட்டாலும், இப்போது அது அவர்கள் கூறுவது போல் தவறுதான் என்று உணர்வோம். நாம் நெருங்கிப் பழகும் அந்த நல்லோர்கள். எப்போதும் எச்சரிக்கையுடன் நடந்து வருகின்றனர் என்பதைக் காணும்போது, நாமும் அவ்விதமே நடக்க விருப்பமும், தூண்டுதலும் நமக்கு உண்டாகும்.

40. மற்றவர்கள் தவறு செய்யும் போது நாம் நினைக்கவேண்டியது என்ன? அவர்களுடைய தவறு இருவிதத்தில் ஏற்படக்கூடும். ஒன்றில் தேவ சட்டத்தை அவர்கள் அறியாதிருக்கலாம். ஆகையால் அதை அவர்களுக்குச் சொல்லிக் காட்டுதல் அவசியம். அல்லது தேவ சட்டத்தை அறிந்தும் மனம் பொருந்தி அதை மீறுகிறார்கள் என்று சொல்லவேண்டும்.