8. மனித ஆன்மா என்பது என்ன?
மனிதனின் உயிர்ச் சக்தியே ஆன்மா எனப்படும். அவனை வாழவைக்கும் உயிர் ஊற்று. அவன் உயிருடன் இயங்கச் செய்யும் விசை. அவன் உணர்வதும், அறிவதும் புதுப்புது காரியங்களைக் கண்டு பிடிப்பதும் இந்த சக்தியால் தான்.
9. ஆன்மாவின் தன்மை யாது?
ஆன்மா திடப்பொருளுமல்ல, நீர்ப்பொருளுமல்ல. ஆவியென நாம் இதை அழைப்பினும், இது வாயுப் பொருளுமல்ல. ஐம்புலன்களால் அறியக்கூடியதுமன்று. விஞ்ஞான மேதைகளின் ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்டது. தெய்வீக ஆவியின் சாயலில் இறைவனால் நேரடியாக உண்டாக்கப்படுவதால், இது உலக விஷயங்கட்கு உட்பட்ட பொருளல்ல. இறைவனைப் போல உருவமற்றது. துவக்கமுண்டு. ஆனால் நித்தியத்திற்கும் அழிவற்றது.
10. மனிதனிடம் ஆன்மா எங்கே இருக்கிறது?
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே ஒரு ஆன்மா மட்டுமே உண்டு. அது அவனது உடல் முழுவதும் பரவி இருந்து அவனை இயங்கச் செய்கிறது. சிலர் நினைப்பது போல ஆன்மா, மனிதனுடைய இருதயத்திலோ, அல்லது தலையிலோ அல்லது வேறு எந்த உறுப்பிலோ அடங்கியிருப்பதில்லை. எத்தகைய விஞ்ஞானக் கருவியாலும் கண்டுபிடிக்க முடியாது. உடல் முழுவதும் ஒரே ஆன்மா இருப்பினும், அதன் ஒவ்வொரு பாகத்திலும் (சிறிதோ, பெரிதோ, அவ் வான்மாவின் ஒரு பகுதி மட்டுமின்றி முழு ஆன்மாவும் இருக்கிறது. எப்படி யென்பதை பின்வரும் எடுத்துக்காட்டு நன்கு விளக்கும்.
முகம் பார்க்கும் கண்ணாடி முழுமையாக இருக்கும் போது முகம் முழுவதும் தெரிகிறது. அதே கண்ணாடி பல துண்டுகளாக உடைந்தபின் ஒரு துண்டில் முகத்தைப் பார்த்தால் அதிலும் முகம் முழுவதும் தெரிகிறது. இதுபோலவே ஆன்மாவின் இயக்கமும் அமைந்துள்ளது. எனினும், உடலின் எந்தப் பாகத்தையாவது துண்டிக்கும் போது, அந்த பாகமானது மற்ற உறுப்புகளை விட்டுப் பிரிக்கப்பட்டாலும், அவனது ஆன்மா அவனை விட்டுப் பிரிவதில்லை ஆனால் தலை, இருதயம் முதலிய முக்கிய உறுப்புகளை அவனது உடலிலிருந்து பிரிக்கும் போது. எஞ்சியுள்ள பாகங்களுக்கு உயிர் நாடியைக் கொண்டு செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படுவதால் அவனது ஆன்மாவும், அவனை விட்டுப் பிரிந்து போகும்.
11. ஆன்மாவுக்கும் உயிருக்கும் உள்ள வேறுபாடுகள் யாது?
ஐம்புலன்களின் தொழிலாகிய பார்வை, கேள்வி, சுவை, வாசனை, உணர்ச்சி முதலியவற்றிற்குத் தேவையானதை அளிக்கும் சக்தியை உயிர் என்கிறோம். இதை ஐயறிவு என்று சொல்லலாம். இவை மிருகங்களுக்கும் இருப்பதால் இதை மிருக உயிர் என்றும் கூறலாம். ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் என்னும் தொகுப்பில் மேற்கூறிய ஐயறிவுடன், ஆறாவது அறிவான பகுத்தறிவைக் கொடுக்கும் சக்திதான் ஆன்மா. இது மக்களுக்கு மட்டுமே உண்டு.
மக்கள் தாமே ஆறறிவுயிரே'' என்பது தொல்காப்பியம். இந்தப் பகுத்தறிவின் காரணத்தால் மக்களுக்கும், மிருகங்களுக்கும் வேறுபாடு உண்டு.
12. மக்களுக்கும் விலங்குகட்கும் உள்ள பொதுவான தத்துவங்கள் யாவை?
புலன்களின் சக்தியே தத்துவம் எனப்படும். கண், காது, வாயு, மூக்கு. மெய் என்னும் ஐந்து உறுப்புகளின் தொழிலாகிய பார்வை, கேள்வி, சுவை, வாசனை, உணர்தல் ஆகியவை மனிதனுக்கும், விலங்குகட்கும், பொதுவானவை யாகும். இவற்றை உடலுக்கடுத்த புல உணர்ச்சிகள் எனலாம். இத்துடன் விருப்பு, வெறுப்பு என்னும் குணங்களும், அவற்றின் விளைவான கொள்ளுதல், தள்ளுதல் என்னும் செயலகளும் பொதுவானவை.
13. விலங்கினங்கட்கு இல்லாத, மக்களுக்கு மட்டுமே உள்ள தத்துவங்கள் யாவை?
புத்தி, மனது என்னும் ஆன்மாவின் உத்தர தத்துவங்கள், நம்மைப் படைத்த கடவுள் புத்தியுள்ளவர். மனது அல்லது சித்தம் உள்ளவர். இந்த இரு தெய்வீக தத்துவங்களில் நாம் பங்கு பெற்று அவரது சாயலாக உண்டாக்கப் பட்டிருக்கிறோம். கடவுள் தன்னை முற்றிலும் அறிகிறார். அவரது புத்தியில் பங்கு பெற்றிருக்கும் நாம் அவரை ஓரளவு அறிய முடியும். விலங்கிணங்களால் அறிய முடியாது. கடவுள் தன்னை அளவற்றவிதமாக நேசிக்கிறார். ஏனெனில் அவர் அளவற்ற நன்மைத் தனமுடையவராயிருக்கிறார். அவரது சித்தத்தில் பங்குகொண்ட நாம், அவரை அதிகமதிகமாய் நேசிக்க முடியும். விலங்கினங்கட்கு அவரது நன்மைத்தனம் தெரியாது. ஆனபடியால், அவை அவரை நேசிக்க முடியாது.
14. கடவுள் இந்த தத்துவங்களை மனிதனுக்கு எதற்காகக கொடுத்துள்ளார் ?
தன்னை அறியக்கூடிய தத்துவமான புத்தியையும், விரும்பக்கூடிய தத்துவமான சித்தத்தையும் அவனுக்குக் கொடுத்து, அவன் கடவுளை அறந்து, விரும்பி, அவருக்காக இவ்வுலகில் வாழ்ந்து, அவருக்கு விருப்பமான ஊழியத்தில் ஈடுபட்டு, அவர் அளிக்கும் பேரின்ப பாக்கியத்தை நித்தியத் துக்கும் அனுபவிக்கவே, மனிதனுக்கு இந்த தத்துவங்களைக் கடவுள் கொடுத்துள்ளார்.
எனவே அவன் தனக்கு விசேஷ விதமாக கொடுக்கப்பட்டுள்ள புத்தியைச் சரிவரப் பயன்படுத்தி அவரை அறியவும் சித்தத்தின் செயல்திறனாகிய சுதந்திரத்தை தகுந்த முறையில் உபயோகித்து, அவரையும், அவரது நன்மைத்தனத்தையும் விரும்பவும், உடலில் ஆன்மா சேர்ந்துள்ள காலம்வரை, இயன்றளவு, அயராது முயற்சித்து, அவரது விருப்பத்தை நிறைவேற்ற உழைக்க கடமைப் பட்டிருக்கிறான்.