கடவுள் ஒருவரே! அவர் யார்? யார் உண்மைக் கடவுள்?

கடவுள் உண்டென்பது ஆத்திகம் என்றும், இல்லை என்பது நாத்திகம் என்றும் அழைக்கப் படுகிறது. 'மனிதன் மற்ற உயிர்களைப் போலவே பிறந்து இறந்து இவ்வுலகோடு முடிந்து போகிறான்; மறு உலகம் , கடவுள் என்பது இல்லை ' என்கிறது நாத்திகம்.

இதில் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு. அதாவது, பிற உயிர்கள் உணவுக்காகவும், தம் உயிரைக் காத்துக் கொள்ளவுமே வாழ்கின்றன. இவ்வுலகோடு தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கின்றன. மனிதனும் இவை போன்றவன்தான் என்றால் நன்மை செய்யும்போது உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சியும், பிறர் அறியாமல் தீமை செய்தாலும் உள்ளுக்குள் ஒரு நெருடலும் ஏற்படுகிறதே, அது ஏன்?

நம்மிடம் ஒரு குவளை தண்ணீர் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்! கடும் வெயில்! தண்ணீர் நமக்குத் தேவை! ஆனால் யாராவது கேட்கும்போது அதில் பாதியைக் கொடுத்து அரை தாகத்தோடு நாம் இருந்தாலும் உள் மனதில் ஒரு சந்தோஷம் ஏற்படு கிறதே, அது ஏன்? மற்ற உயிர்களிடம் அது இல்லையே! நன்மை, தீமை பற்றிய ஒன்று மனித னிடம் மட்டுமே இருப்பது ஏன்?

இந்த உலகில் தோன்றி மறைபவன் மனிதன் என்றால் இந்த உணர்ச்சி அவனுக்குத் தேவையற்றது அல்லவா? இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. மனிதனுக்கும் இறைவனுக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒரு பிணைப்பு மனசாட்சி என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அது அவனை இறப்புக்குப் பின்னும் உள்ள வாழ்வுக்குத் தயாரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, கண்ணுக்குத் தெரியாதவர் என்றாலும் கடவுள் இருக்கிறார்; மனித னோடு தொடர்பில் இருக்கிறார்.

அடுத்து ஒரு கேள்வி வருகிறது! கடவுள் இருக்கிறார் என்றால் யார் கடவுள்? நம்மைச் சுற்றிப் பல கடவுள்கள் காட்டப்படுகின்றனரே! யார் உண்மைக் கடவுள்?

நமக்குக் காட்டப்படும் பல கடவுள்களில் ஒருவர் மட்டும் வித்தியாசப்படுகிறார். இறந்தவராகக் காணப்படுகிறார். மற்றக் கடவுள்கள் மனிதனிடம் சேவையை எதிர்பார்க்கின்ற கோலத்தில் இருக்கும் போது, இவர் மட்டும் மனிதனுக்காக என் உயிரைக் கொடுத்தேன் என்கிறார். அப்படியானால் இவரே என் அன்புக்குரிய கடவுள்; எனக்காக உயிரைக் கொடுத்த இவர் எனக்காக வேறு என்னதான் செய்ய மாட்டார்?

இவரே என் அன்புக்குரியவராய்க் காணப்படுகிறார். சரி! ஆனால் இவர் நம்பிக்கைக்குரியவரா? இதற்கு ஆதாரம் ஏதும் உண்டா? சொன்னதைச் செய்பவர் என்றும், செய்வதைத்தான் சொல்பவர் என்றும் நான் நம்புவது எப்படி? நின்று நிலைக்கும் ஆதாரம் ஏதும் உண்டா ? ஆம், மறுக்க முடியாத ஆதாரம் ஒன்று உண்டு. இவர் சொன்னவை, செய்தவை அடங்கிய புத்தகம் ஒன்று உண்டு! அதில் கடைசிப் புத்தகத்தின் கடைசி அதிகாரத்தில் இவர் ஒன்று சொல்லியிருக்கிறார்.

''முதலும், இறுதியும், தொடக்கமும், முடிவும் நானே" திருவெளி. 22:13).

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் இவர். உலகமோ பல ஆயிரம் ஆண்டுகளாக உள்ளது. பின் எப்படி இவர் தொடக்கமும் முடிவுமாக இருக்க முடியும். ஆனால் ''உண்மையும், உயிரும் நானே" என்ற இவர் வாக்கு பொய்க்கவில்லை. உலகத்தின் எல்லா நிகழ்வுகளும், பிறப்பும், இறப்பும் இவரை அல்லவா மையமாகக் கொண்டிருக் கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் தொங்கிக் கொண்டிருக்கும் காலண்டர்கள் இவரே வாழ்வின் மையம் என்பதைப் பறைசாற்றுகின்றனவே! கி.மு., கி. பி. என்று உலகச் சரித்திரத்தை இரண்டாகப் பிரித்து விட்டாரே! இவரே சரித்திரத்தின் நடுநாயகன் ஆகிவிட்டாரே! எந்தவொரு நிகழ்வைக் குறிப்பிட் டாலும் ... உதாரணமாக இந்தியா 1947இல் சுதந் திரம் பெற்றது என்றால் இயேசு பிறந்து 1947ஆம் ஆண்டு என்பதுதானே அர்த்தம். இவருக்கு முந்திய வர்களைப் பற்றிய வரலாற்றைக் கூட கி. மு . என்று தானே குறிப்பிட வேண்டியுள்ளது. எத்தனை அழகாகத் தன் வார்த்தைகளை உண்மையாக்கி இருக்கிறார். தனது வார்த்தைகள் பொய்க்காது என்று நிரூபித்திருக்கிறார். தொடக்கமும் முடிவும் நானே ...... அப்படியானால் இவரைக் குறித்த அந்தப் புத்தகமும் உண்மையின் புத்தகமாகத்தானே இருக்க இயலும். அதனால்தான் உலகில் அதிகமான மக்களால் அது படிக்கப்படுகிறது. அதுவே பைபிள்.

மேலும் ஒரு கேள்வி! இவரே உண்மைக் கடவுள்! இதுவே உண்மையின் புத்தகம். ஆனால் இவர் பெயரில் எத்தனை பிரிவினைகள்! எத்தனை போதனைகள் இதில் எதை நம்புவது? எதைப் பின்பற்றுவது? இவரது புத்தகம் உண்மையின் புத்தகமானால் இதற்கும் விடை இருக்க வேண்டுமே! ஆம். இருக்கிறது.