திவ்விய பலிபூசை என்பதென்ன?

1. பூசையில், சர்வேசுரனுடைய திருச்சுதனானவர் மீண்டும் மனிதனாகிறார். இவ்வாறு, ஒவ்வொரு பூசையிலும், பேரதிசயமான மனிதாவதாரப் பரம இரகசியம் தன் சகல, அளவற்ற பேறுபலன்களோடும் மீண்டும் பலிபீடத்தின் மீது நிகழ்த்தப்படுகிறது. தேவ சுதனானவர் திவ்விய கன்னிகையின் உத்தமமான திருவுரத்தில் முதன்முதலாக எப்படி மனுவுருவானாரோ, அப்படியே, மெய்யாகவே பலிபீடத்தின் மீதும் அவர் மனிதனாக அவதரிக்கிறார்.

அர்ச். அகுஸ்தீனார்: ''கிறீஸ்துநாதர் யாருடைய கரங் களில் மீண்டும் ஒருமுறை மனிதனாக ஆகிறாரோ, அந்த குருவானவரின் உத்தம் மகத்துவம் எவ்வளவு பக்திக் குரியது!''

2. பூசை சேசுக்கிறிஸ்துநாதரின் பிறப்பாக இருக்கிறது. பூசை நிறைவேற்றப்படும் ஒவ்வொரு முறையும், தாம் பெத்லகேமில் பிறந்தது போல், அவர் மெய்யாகவே திவ்விய பலிபீடத்தின்மீது பிறக்கிறார்.

அர்ச். தமாஸீன் அருளப்பர்: ''அப்பம் எப்படி சேசுக் கிறீஸ்துநாதருடைய திருச் சரீரமாக மாற்றப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள யாராவது விரும்பினால், நான் அவனுக்கு பதில் சொல்வேன். திவ்விய இஸ்பிரீத்து சாந்து வானவர் மகா பரிசுத்த கன்னிகைக்குத் தாம் செய்தது போலவே குருவானவரின் மீதும் நிழலிட்டு, அவரில் செயல்படுகிறார்!''

அர்ச். பொன வெந்தூர் : ''சர்வேசுரன் முதல் முறையாக தேவ கன்னிகையின் மாசற்ற திருவுதரத்தில் மனிதனான போது தாம் செய்தவாறே, பீடத்தின் மீது தாம் இறங்கி வரும் போதும் செய்கிறார். அவருடைய பலிபீடப் பிறப்பு, மகா பரிசுத்த கன்னித்தாயாரிடம் அவருடைய அதிசயமான கன்னிமைப் பிறப்பிற்கு எந்த விதத்திலும் தாழ்ந்ததல்ல!''

3. பூசைப்பலியும், கல்வாரிப் பலியும் ஒன்றே. சர்வேசுரன் பெரிய வெள்ளிக்கிழமையன்று கல்வாரியில் எப்படி மரித் தாரோ, அப்படியேதான் பூசைப் பலியிலும் அவர் மரிக் கிறார். பூசைப் பலியானது, கல்வாரிப் பலி கொண்டிருந்த அதே அளவற்ற மதிப்பைத் தானும் கொண்டுள்ளது. அது அதே விலை மதியாத வரப்பிரசாதத்தின் பெருவெள்ளத்தை மனிதர்களின் மீது இறங்கி வரச் செய்கிறது.

பூசை என்பது கல்வாரியின் ஒரு பாவனையோ, அல்லது ஒரு ஞாபகார்த்தமோ அல்ல, மாறாக அது கல்வாரிப் பலியேதான். தோற்றத்தில் மட்டும்தான் அது கல்வாரிப் பலியிலிருந்து மாறுபடுகின்றது.

ஒவ்வொரு பூசையிலும், சேசுநாதருடைய திவ்விய இரத்தம் மீண்டும் நமக்காக சிந்தப்படுகிறது.

அர்ச். அகுஸ்தீனார் : "திவ்விய பலிபூசையில் கிறிஸ்து நாதருடைய திரு இரத்தம் பாவிகளுக்காக புதிதாகப் பாய்ந்து வருகிறது."

4. இந்தப் பூமியில் உள்ள எதுவும், மோட்சத்திலுள்ள எதுவும்கூட, ஒரேயொரு பலிபூசையை விட அதிகமான மகிமையைக் கடவுளுக்குத் தருவதில்லை, அவை நமக்கு அதிகமான நன்மைகளைப் பெற்றுத்தருவதுமில்லை.

5. கடவுள் விரும்பக்கூடிய அனைத்திலும் பெரிய ஸ்துதி புகழ்ச்சியை, அனைத்திலும் பெரிய மகிமையை, நாம் பூசையின் வழியாக அவருக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர் நம்மீது பொழிந்துள்ள சகல நன்மைகளுக்காகவும் நாம் அனைத்திலும் அதிக உத்தமமான நன்றியறிந்த தோத் திரத்தை அவருக்கு சமர்ப்பிக்கிறோம். அனைத்திலும் அதிகக் கடினமான, கடுமையான தவமுயற்சிகளின் வழியாக நாம் செய்வதை விட நம் பாவங்களுக்காக நாம் பூசையின் மூலம் அதிகமான பரிகாரம் செய்கிறோம்.

6. பாவிகள் மனந்திரும்புவதற்கு, அவர்களுக்காக பூசைப் பலியை ஒப்புக்கொடுப்பதற்கு மேலாக நாம் வேறு ஒன்றும் செய்ய முடியாது. பாவம் செய்யும் தங்கள் பிள்ளை களுக்காக தாய்மாரும், மனைவியருக்காக கணவன் மாரும், கணவர்களுக்காக மனைவிமாரும் பூசை கண்டும், பூசைகள் நிறைவேற்றப்படச் செய்தும் வருவார்கள் என்றால், அவர் களுடைய குடும்பங்கள் எவ்வளவு மகிழ்ச்சி நிரம்பியவையாக மாறிவிடும்!

எந்த ஜெபங்களும், எந்தப் பாத்தியாக, பரிகார முயற்சிகளும் பூசைப்பலியைவிட அதிகமாக உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமங்களுக்கு உதவி செய்துவிட முடியாது. ஓ., உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களைப் பற்றி நாம் எப்போதும் சிந்திப்போமாக! அவர்களுக்குள் நம் பிரியத்திற்குரிய தந்தையோ, தாயோ, நண்பர்களோ இருக்கலாம். அவர்களுக்காகப் பூசை காண்பதன் மூலம் அவர்களுக்கு மிக மிக நன்மையான விதத்தில், மிக எளிதாக, நாம் உதவி செய்ய முடியும், மிக எளிதாக அவர்களுடைய பயங்கரத்திற்குரிய வேதனைகளிலிருந்து அவர்களை விடுவிக்க முடியும்.