திவ்ய திருப்பலி கொண்டாட்டமாக இருக்கமுடியுமா?

கல்வாரிப் பலியை எப்படி கொண்டாட முடியும்?

கோதுமை அப்பத்தை தன் உடலாகவும், திராட்சை இரசத்தை தன் இரத்தமாகவும் மாற்றி இதை வாங்கி உண்ணுங்கள், இதை வாங்கிப் பருகுங்கள் என்று திவ்ய திருப்பலியை ஏற்படுத்தினார். அதை எப்படிக் கொண்டாட முடியும்?

ஆண்டவர் கெத்சமெனி தோட்டத்தில் இரத்த வியர்வை வியர்த்து, ஜெபித்து, தன்னையே பலிபொருளாக மாற்றி, கல்வாரிப் பாடுகள்பட்டு, நிறைவேற்றிய திருப்பலியை எப்படி கொண்டாட முடியும்?

“இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்று சொல்லும்போது, 'மக்களை நம் இரத்தத்தால் மீட்கப்போகிறோம், அவர்களை வான் வீட்டிற்கு தன் தந்தையின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்போகிறோம்' என்ற மகிழ்ச்சி இருந்தாலும், அன்று இரவுமுதல், மறு நாள் நண்பகல்வரை உலகத்தில் இதற்கு முன்பும், இதற்கு பின்பும் யாரும் அனுபவித்திராத சித்திரவதையை தாம் அனுவவிக்க இருப்பதை நினைத்து மனக்கலத்திலும் இருந்திருப்பாரே... அதையும் நாம் நினைவுகூறும் திருப்பலி எப்படி கொண்டாட்டமாக மாறும்?

நான் சிந்தப்போகும் இரத்தமும், பலரின் விசுவாசக்குறைவால் அவர்களுக்கு வீணாகப்போகிறதே என்றும் வருந்தியிருப்பார்... இப்போது நம்மில் பலர் திவ்ய திருப்பலியில் தகுதியில்லா உள்ளத்தோடு பங்கேற்று, திருப்பலியின் பேறுபலன்களை வீணாக்குவது போல், திருப்பலியை எப்படி கொண்டாடமுடியும்?

கல்வாரியில் ஒரு திருமரணம் நடைபெற்றது; அதுவே திவ்ய திருப்பலி. அந்த திருமரணத்தை நினைவுகூறும் திருப்பலி எப்படிக் கொண்டாட்டமாக மாறும்?
பெரிய வியாழனையும், புனித வெள்ளியையும் நினைவு கூறும் திவ்ய திருப்பலி எப்படி கொண்டாட்டமாக இருக்க முடியும்?

முதல் கல்வாரிப்பலியில் முழுமையாக பங்கேற்று, ஆண்டவருடைய துன்பக் கலத்தில் பக்தியுடன் பங்கேற்ற, ஆண்டவரின் துன்பக் கிண்ணத்தில் பருகிய மாமரி மாதாவும், புனித அருளப்பரும் திவ்ய திருப்பலியைக் கொண்டாடினார்களா?

முதல் திருப்பலி ஏன் நடைபெறுகிறது? என்ன நடந்துகொண்டிருகிறது என்பதை அறியாவிட்டாலும், ஆண்டவராகிய இயேசு சுவாமி அனுபவித்துக்கொண்டிருக்கும் துன்பப்பாடுகளை பார்த்து கண்ணீர் சிந்தி அழுத எருசலேம் மகளிர் திருப்பலியை கொண்டாடினார்களா?
எப்படிக் கொண்டாட்டம் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம்?

ஒரு வேளை கல்வாரி பலிக்கு செல்கிறோம். ஆண்டவரை உட்கொள்ள செல்கிறோம். அதில் மிகவும் பக்தியோடும், தகுதியான உள்ளத்தோடும் பங்கேற்க வேண்டும் என்ற உணர்வு இல்லாமல் இப்படி செல்பவர்களுக்காக “கொண்டாட்டம்" என்ற வார்த்தை தானாக வந்து விட்டதோ?

முதல் திருப்பலியைக் கொண்டாடியவர்கள் யார் தெரியுமா?
தலமைக்குருக்கள்
பரிசேயர்கள்
சதுசேயர்கள்
படைவீரர்கள்
“இவனைச் சிலுவையில் அறையும்; இவனை சிலுவையில் அறையும்"; என்று வசை பாடிய ஆண்டவரை அறியாத மக்கள்.
பிலாத்து
ஏரோது
கெட்ட கள்ளன் இன்னும் பலர்…
அவர்களா நாம்? திருமுழுக்கு பெற்று ஆண்டவரின் பிள்ளைகளாக, கிறிஸ்தவர்களாக, அதுவும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களான நாம் திருப்பலியில், கல்வாரியில் எப்படி, என்ன மனநிலையில் கலந்து கொள்ள வேண்டும்?

ஆடம்பரமாக உடை உடுத்தி, திருமண வீட்டிற்கு செல்பவர்கள்போல் செல்பவர்கள்தான் தெய்வீக திருப்பலியைக் கொண்டாட முடியும்.

பிறர் கண்களை உறுத்தும் விரசமான ஆடைகளை (உறுத்தலின்றி) அணிந்துகொண்டு ஆலயத்திற்கு செல்பவர்கள்தான் திருப்பலியைக் கொண்டாட முடியும்.

ஆண்டவருக்கு முன்னால் காலணிகளை எவ்வித உறுத்தலின்றி தன் முன்னால் வைத்துக்கொண்டு ஆலயத்தில் அமர்ந்திருப்பவர்கள்தான் திருப்பலியைக் கொண்டாட முடியும்.

ஆண்டவரைப்பற்றி கவலைப்படாமல், ஆடைகளைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு, ஆன்மாவை அலங்கரிக்காமல், தங்கள் உடலை அலங்கரித்துச் செல்பவர்கள்தான் திருப்பலியைக் கொண்டாட முடியும்.

ஆண்டவருடைய கவனத்தை தன் மேல் திருப்ப வேண்டும் என்ற கவலையில்லாமல், ஆலயத்திற்கு வருபவர்களின் கவனத்தை தன் மேல் திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் செல்லும் பெண்களாலும், ஆண்களாலும்தான் திருப்பலியைக் கொண்டாட முடியும்.

தகுந்த தயாரிப்பின்றியும், ஆண்டவரை சந்திக்க செல்கிறோம் என்ற எண்ணமின்றியும், ஏதோ கடமைக்கு திருப்பலிக்கு செல்கிறவர்களும்தான் திருப்பலியைக் கொண்டாட முடியும்.

இப்படி திருப்பலியையை மேலே சொல்லப்பட்டவர்கள் போல் கொண்டாட்டமாக கருதினால் நமக்கு என்ன கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

முதல் கல்வாரி திருப்பலியில் பாதியில் வெளியேறி, ஆண்டவரை மறுதலித்தாலும், பின் உணர்ந்து, அழுது, கண்ணீர் வடித்து, அவரைப்பின் சென்று, தன் பாவத்திற்காக மனம் வருந்தி முதல் திருப்பலியில் முழுமையாக பங்கேற்காவிட்டாலும், அடுத்த திருப்பலிக்கு தன்னை தயாரித்து, தன்னையே பரிகார பலியாக்கிய புனித ராயப்பரைப் போலவாவது மாற வேண்டாமா?

முதல் திவ்ய திருப்பலியில் உண்மையான உணர்வோடும், பக்தியோடும், தகுதியோடும், பங்கேற்ற நம் தேவ அன்னை போலும், புனித அருளப்பர் போலும், குறைந்தபட்சம், “நாம் தண்டிக்கப்படுவது முறையே" என்று கூறி கடைசியிலாவது மனம் மாறி தப்பித்துக்கொண்ட நல்ல கள்வன் மாதிரியாவது பங்கேற்க வேண்டும்!

திவ்ய திருப்பலி கொண்டாட்டம் அல்ல. ஒரு புனித மரணத்தை நினைவு கூறி நம் பாவத்தைப்போக்கி ஆண்டவரை உட்கொண்டு ஆண்டவர் இயேசுவாக வாழ அழைக்கப்படும் கல்வாரிப்பலி கொண்டாட்டம் கிடையாது. அது ஒரு அனுபவம்!

அன்று எம்மாவூஸ் சீடர்கள் கண்ட அனுபவம்! ஒரு பக்தியான, தூய்மையான வழிபாடு!

ஆண்டவர் இயேசுவின் பாடுகளை தியானித்து நம்மை மனம் மாற்ற உதவவும், நமக்கு தேவையான, ஆன்மீக, ஞான, சரீர நன்மைகளைப் பெற்றுக்கொள்ள உதவும் தெய்வீக திருவழிபாடு, திருவருட்சாதனம், ஆன்மீக அருட்கருவி, நமக்கு மோட்சத்தில் கூட கிடைக்காத பேரின்ப பாக்கியம்!

அதுபோல ஆடம்பர திருப்பலியும் இருக்க முடியாது. திருவிழாக் காலங்களில் பலிபீடம் மட்டும் பூக்களால் அலங்கரித்து ஆடம்பரமாய் காட்சி அளித்தால் பரவாயில்லை. ஆனால் அதில் பங்கேற்கும் அனைவரும் சாதாரன நாட்களை விட அதிக தகுதியோடு பங்கேற்றால்தான், நாம் யாருக்கு திருவிழா எடுக்கிறோமோ அந்த புனிதரின் பரிந்துரையில் நாம் கேட்கும் மன்றாட்டுகள் கேட்கப்படும். நாம் ஆன்ம சரீர நன்மைகளைப் பெறுவோம்.

அதை விடுத்து, "நான் அதைச் செய்கிறேன்; இதைச் செய்கிறேன் என்று, கும்ப ஆரத்தி.. வரவேற்பு நடனம்.. திருப்பலி முடியும் முன் பொன்னாடைப் போர்த்துகிறேன்" என்று போனால் வரங்களுக்கு பதில் சாபமே நமக்கு கிடைக்கும்!

தெய்வீகத்திருப்பலி கொண்டாட்டம் அல்ல; அது ஒரு தெய்வீக அனுபவம்!