சம்மனசானவரும், ரோஜாக்களும்!

ஓர் ஏழைக் குடியானவன் தன் வாழ்வில் பல ஆண்டுகளாக தினமும் பூசை காணும் வழக்கத்தைக் கொண்டிருந்தான்.

ஒரு மிகக் குளிரான காலை நேரத்தில் அவன் பனியால் மூடப்பட்ட வயல்வெளிகளைக் கடந்து கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது தனக்குப் பின்னால் யாரோ நடந்து வருவது போன்ற காலடிச் சத்தத்தை அவன் கேட்டான். ஆகவே அவன் திரும்பிப் பார்த்த போது, தனது காவல் சம்மனசானவர், அற்புதமாக மணம் வீசிய அழகிய ரோஜா மலர்கள் நிறைந்த கூடை ஒன்றைச் சுமந்தபடி நின்று கொண்டிருந்ததை அவன் கண்டான். தேவதூதர் அவனிடம் : ''பார்த்தாயா, இந்த ஒவ்வொரு ரோஜாவும் நீ பூசை காண எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியையும் குறிக்கிறது. மேலும், மோட்சத்தில் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிற ஒரு மகிமையான சம்பாவனையையும் அவை குறிக்கின்றன. ஆனாலும் பூசையிலிருந்தே நீ பெற்றுக்கொண்டுள்ள பேறுபலன்கள் இவற்றை விட மிக மிகப் பெரியவை" என்று அறிவித்தார்.

தன் வியாபாரத்தை / தொழில் முயற்சியை வளப்படுத்திக் கொள்ளும் விதம் இரண்டு வணிகர்கள் பிரான்ஸ் நாட்டிலுள்ள ஓர் ஊரில் தங்கியிருந்தார்கள். இருவரும் ஒரே விதமான வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள், என்றாலும் ஒருவன் அதில் செழிப்பான இலாபம் ஈட்டிக் கொண்டிருக்க, மற்றவனுக்குப் போதுமான இலாபம் கிடைப்பது மிகவும் கடினமானதாக இருந்தது. இவ்வளவுக்கும் இவன் அதிக இலாபம் பெற்ற தன் நண்பனை விட அதிகக் கடுமையாக உழைத்து வந்தான். ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே எழுந்து வேலையைத் தொடங்கியும் வந்தான்.

நாளுக்கு நாள் இவனுடைய நிலைமை மோசமாகிக் கொண்டே வர, கடைசியாக, நல்ல வசதியோடிருந்த தன் நண்பனிடம் ஆலோசனை கேட்பது என்று இவன் முடிவு செய்தான்; அவனுடைய வெற்றியின் இரகசியம் என்ன என்பதை அறிந்து கொள்ள விரும்பினான்.

செல்வந்தனான அந்த வணிகன் பதிலளித்தான்: "என் நல்ல நண்பனே, என்னிடம் இரகசியம் எதுவுமில்லை. நீ உழைப்பது போலத்தான் நானும் உழைக்கிறேன். நம் செயல் முறைகளில் ஏதாவது வித்தியாசம் இருக்கிறது என்றால் அது ஒன்றே ஒன்றுதான் : நான் ஒவ்வொரு நாளும் பூசை காணப் போகிறேன், நீ அவ்வாறு செய்வதில்லை. என் உண்மையுள்ள அறிவுரையைப் பின்பற்று, ஒவ்வொரு நாள் காலையிலும் பூசைக்கு வா, அப்போது கடவுள் உன் வேலையையும் ஆசீர்வதிப்பார் என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன்.''

இந்த ஏழை வணிகன் தனக்குக் கூறப்பட்ட அறிவுரையை ஏற்று தினமும் பூசை காணத் தொடங்கினான். மிக விரைவில், பெரியதொரு மாற்றம் வந்தது. அவனுடைய சிரமங்கள் நின்று போயின. அவனுடைய வியாபாரம் யாரும் புரிந்து கொள்ள முடியாத ஒரு விதத்தில், அவனுடைய சகல எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக மிகவும் செழிப்பான பலனை அவனுக்குத் தந்தது.