கடவுளும் நாமும் - உண்மை

54. உண்மையை அறிய அனைவருக்கும் உரிமை உண்டா? 

கடவுள் சகல மனிதருக்கும் பொதுத் தந்தையாவார். உண்மையை அறியும் தத்துவமான புத்தியை மனிதன் பெற்றிருக்கிறான். எனவே, கடவுளைப்பற்றியும், அவருக்கு வழிபாடு செய்யும் வழிவகைகளைப்பற்றிய உண்மைகளையும் அறிய அவனுக்கு உரிமையுண்டு. மனிதன் பிறருடன் சேர்ந்துவாழும் சமூக உறுப்பினர். அதனால் மனம், மொழி, மெய் எனப்படும் மூவித செயற்படு கருவிகளிலும் அவன் உண்மை உடையவனாயிருக்க வேண்டும்

55. நாம் உண்மை பேசக் கடமையா ?

நாம் பேசும்போதெல்லாம், உண்மையென்று உணர்ந்திருப்பதையே உரைக்கக் கடமை; பொய் என்று நமக்குத் தெரிந்திருந்தும், அதை உண்மை போல் கூறுவது தவறு.

56. இந்தக்கடமை ஏற்படுவானேன்?

முதலாவது; பொய் பேசுதல், நமது தத்துவங்களைத் தீய வழியில் உபயோகித்தலாகும். இரண்டாவது ; பிறருக்கு அதனால் அநியாயம் செய்கிறோம். 

57. பொய் பேசுதல் நமது தத்துவங்களை தீயவழியில் செலுத்துதல் என்று கூறுவது ஏன்? 

நாம் உண்மையை அறியவும். தவறானதை நீக்கவும் நமக்குப் புத்தி என்னும் தத்துவத்தைக் கடவுள் அளித்திருக்கிறார். நமது மனதிலுள்ளதைப் பிறருக்கு வெளிப் படுத்துவதற்காகவே, பேசும் திறமை நமக்குக் கொடுக்கப் பட்டுள்ளது. ஆகையால் மனதிலுள்ளதை உள்ளதுபோல் வெளிப்படுத்துவது உண்மை அல்லது மெய் பேசுதல் எனப்படும். தவறானதைச் சிந்திப்பது புத்தியைத் தீய வழியில் செலுத்துவதாகும். அதுபோல் பொய் பேசுதல் ; பேசுந் திறமையைத் தீய வழியில் பயன்படுத்துவதாகும். 

58. பொய் பேசுதலை, பிறருக்கு அநியாயம் செய்தல் என்று கூறுவதேன்? 

ஏனெனில் நாம் பேசும்போது உண்மையைச் சொல்வோம் என்றுதான் பிறர் எதிர்பார்க்கிறார்கள். நாம் பொய் சொல்வோம் என்கிற சந்தேகம் அவர்களுக்கு இல்லை. ஆகையால் நாம் பொய் சொன்னால் அவர்களை ஏமாற்றுகிறோம். இது அவர்களுக்குத் தீங்கு புரிவதல்லவா? அதனால் தான் பொய் சொல்லுதலைப் பிறருக்கு அநியாயம் செய்தல் என்று கூறுகிறோம்

59. ஒருவர் சொல்லுவதை ஒருவர் நம்பவேண்டியதில்லை என்று அனைவரும் ஒப்பந்தம் செய்து கொண்டால் அதனால் ஏற்படும் கெடுதி என்ன?

அப்படியானால், மக்களுக்குள் பெருங் குழப்பமும். எல்லாம் தாறுமாறாகவும் இருக்கும்; பிறருடன் பேசிப் பழகுவது மிகுந்த தொந்தரவாக இருக்கும். இதனால் வாயை மூடிக்கொண்டிருப்பதே உத்தமமாகும். ஆனால், பிறருடன் பேசிப் பழகுவதற்காக நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் பேசும் திறமை வீணாகும்.

60. சகலவிதமான பொய்மொழிகளும், எத்தகைய வேறுபாடுமின்றி கெட்டவை எனலாமா? 

பொய் சொல்வதினால் நமக்கு லாபம் வந்தாலும் சரி; பிறருக்கு நன்மை உண்டானாலும் சரியே. பொய் என்றால் எல்லாப் பொய்யும் கெட்டது தான். ஆனால் பிறருக்குத் தீங்கு விளைவிக்கிற பொய் அதிகக் கெட்டது. பொய்மொழியால் உண்டான தீங்கு எவ்வளவு கனமானதோ, அதற்குத் தகுந்தாற்போல் பொய்யின் கனமும் அதிகரிக்கிறது.

61. அதிகக் கனமான பொய் எது?

யாருக்காவது அதிகமான உடல் தீங்கு அல்லது ஆன்மக்கேடு. உடைமை அல்லது நன்மதிப்புக்குக் கனமான தீங்கு வருவிக்கக்கூடிய பொய், அதிகக்கனமானது.

62. இதை சில எடுத்துக்காட்டுகளால் விளக்குக.

நாம் பொய் சொல்வதினால் ஒருவனுக்கு ஏதேனும் ஆபத்து அல்லது தீங்கு நேரிட்டால், அவனுடைய உடைமை அல்லது உத்தியோகம் போவதற்குக் காரணமானால், அவன் பிறரை விரோதிக்கவும், அவர்கள் மேல் நம்பிக்கையற்றுப் போகவும். அல்லது அவனுக்கும் மற்றொருவனுக்குமுள்ள சிநேகம் விட்டுப் போகக் காரணமானால்; நாம் சொன்ன பொய்யினால் ஒருவனுக்கிருந்த மதிப்பைக் கெடுத்துக் குற்றமில்லாதவன் தண்டனை அனுபவிக்கக் காரணமானால், இத்தகைய பொய்களெல்லாம் மிகவும் கனமானதாகும்.

63. தன்னைப் பாதுகாக்கும் பொருட்டுப் பொய் சொல்லக் கூடாதா? 

அநியாயமான துன்பத்திலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளுவதற்காகக்கூட தாம் பொய் சொல்லவே கூடாது.

64. நாம் வெளியிடக்கூடாத மிக முக்கியமான இரகசியம் ஒன்று இருக்கிறது; அப்போது என்ன செய்வது? 

அதைப்பற்றிக் கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்ல மாட்டோம் என்று மறுத்துவிடலாம்; அல்லது அதைவிட்டு விட்டு வேறு செய்திகளைப்பற்றிப் பேசலாம் அல்லது, "உனக்கென்ன அதைப்பற்றி? உன் வேலையைப் பார்!"என்று நம்மைக் கேட்டவனை நோக்கிக் கூறலாம்.

65. நாம் மறுமொழி சொல்ல மறுப்பதினாலேயே, இரகசியம் வெளியாகிறதாயிருந்தால், எனன செய்வது? 

அத்தகைய சமயங்களில் அந்த இரகசியம் நமக்குத் தெரியாது போல் பதில் உரைக்க வேண்டும்.

66. ஆனால் உண்மையிலேயே அந்த இரகசியம் நமக்குத் தெரிந்திருக்க, இவ்விதம் கூறுவது பொய்யல்லவா? 

அது பொய்யல்ல; கொஞ்சம் விவேகமுடைய எவனும் அது விஷயம் கேட்கத்தகாதென்றும், பதில் கூறத் தேவையில்லை என்றும் உணர்ந்து கொள்வான். அப்படிப்பட்ட விஷயத்தில் ஒருவன் பதில் உரைக்கும் வகையிலிருந்து. சொல்லும் மறுமொழி 'நழுவலான பேச்சு" - என்று மற்றவன் தெரிந்து கொள்வான்.

குறிப்பு:- குற்றவாளி தான் குற்றம் செய்திருந்தாலும் குற்றமற்றவனாக வழக்காடலாம். அவனுடைய கருத்து யாதெனில், நான் என் குற்றத்தை ஒப்புக்கொள்ள மாட்டேன்; நான் குற்றம் செய்ததாக நீதிமன்றத்தில் ருசுப் படுத்தட்டும்"- என்பதாகும்.

இரகசியமான ஒரு விஷயத்தைப்பற்றிக் கட்டாயமாய் பதில் சொல்ல நேரிடும்போது, "இல்லை. எனக்குத் தெரியாது"- என்கிற மொழிகள் "நான் பிறருக்கு அதை வெளிப் படுத்தக் கூடிய விதமாய் அறியவில்லை" - என்று பொருள் படும். 

67. இரகசியத்தை வெளியிட நமக்கு இஷ்டமில்லாத போதெல்லாம், இவ்விதமாய் பதல் உரைக்கலாமா? 

கூடாது; மிகவும் கனமான பெரிய விஷயங்களில் இரகசியத்தை வெளியிட்டால், கடவுளுக்கும், பிறருக்கும் அல்லது நமக்கும் அநியாயம் நேரிடக்கூடுமான சமயங்களில், ஏதாவது பதில் சொல்லித்தான் தீரவேண்டிய தானால் மட்டுமே மேற்கூறிய விதம் பதில் உரைக்கலாம்.

68. தாங்கள் அறிந்த இரகசியங்களை வெளியிடாதிருக்கக் கடமைப்பட்டவர்கள் யார்? 

(1) கத்தோலிக்கக் குருவானவர், பாவசங்கீர்த்தனத்தில் அறிந்தவைகளை வெளியிடக்கூடாது.

(2) வக்கீல் அல்லது வைத்தியன் தன் தொழில் மூலமாய் அறிந்த விஷயங்களை வெளியிடலாகாது.

(3) அரசாங்க அலுவலர் தம் அலுவலகத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தக்கூடாது.

(4) வெகு இரகசியமாக வைத்துக்கொள்ளும்படி நம்மிடம் சொன்ன கனமான விஷயங்களை ஒருவருக்கும் வெளி இடக்கூடாது.