கடவுளும் நாமும் - கடவுளின் பிரதிநிதிகள்

53. கடவுள் பேரால் பேசும் பிரதிநிதிகள் யார்?

சேசுக்கிறிஸ்து, வரலாற்றில் காணப்படும் உலகில் தலைசிறந்த உத்தமர். எதார்த்த மனதுடன் வரலாற்றைக் கூர்ந்து கவனிக்கும் எவனும் வேதநூலில் அறியும் உண்மை இது - கிறிஸ்து ஓர் திருச்சபையை நிறுவினார் என்பது. அவர் தம் வாழ்நாளில் மக்களுக்கு சத்தியங்களைப் போதித்தார். தம்மைப் பின்பற்றி வந்த சீடர்களிலிருந்து பன்னிருவரைப் பொறுக்கி எடுத்தார்; தனிப் பயிற்சி கொடுத்தார். பல சிறந்த வரங்களையும் அவர்களுக்கு அளித்து, எங்கும் சென்று போதிக்கக் கற்பித்தார். 'பிதா என்னை அனுப்பினது போல, நானும் உங்களை அனுப்புகிறேன்"-(அரு. 20/21 ) அந்தப் பன்னிரு அப்போஸ்தலர்களில் (அனுப்பப் பட்டவர்கள்) சிமோன் இராயப்பரைத் தலைவராக நியமித்தார். அப்போஸ்தலர்கள் உலகமெங்கும் போய் போதிக்க வேண்டும். அவர்களுக்குச் செவி சாய்க்காதவர்கள் தண்டிக்கப் படுவார்களென்று அச்சுறுத்தினார். நீங்கள் உலகமெங்கும் போய் எல்லா சிருஷ்டிகளுக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் இரட்சணியமடைவான். விசுவசியாதவனோ ஆக்கினைத் தீர்வையிடப்படுவான்.' (மாற்கு 16/15) இறுதியாக, அவர் தாம் நிறுவிய திருச்சபையோடு எக்காலமும் இருப்பதாக வாக்குறுதி கொடுத்தார். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவற்றையும் அனுசரிக்கும்படி அவர்களுக்குப் போதியங்கள். இதோ நான் உலகம் முடியுமட்டும் எந்நாளும் உங்களோடு கூட இருக்கிறேன் என்று திருவளம் பற்றினார்" (மத், 28/20)

கிறிஸ்துநாதருடைய போதனைகளைப் பரவச் செய்யவும் அவைகளுக்கு உண்மையான விளக்கம் கொடுக்கவும். ஓர் அதிகார பூர்வமுள்ள அமைப்பு ஒன்று இருந்தாலே தவிர, அவரது வாழ் நாள் உழைப்பும், சகல மனிதரின் ஈடேற்றம் கருதய அவரது இறப்பும் வீண் என்றே சொல்லவேண்டி யிருக்கும். அந்த அதிகார பூர்வமுள்ள அமைப்புத்தான் அவரால் நிறுவப்பட்ட திருச்சபை. கிறிஸ்துவிடம் நேரடியாக அதிகாரம் பெற்ற அப்போஸ்தலர்களும், அவர்களது வழித்தோன்றல்களாகிய கத்தோலிக்க மேற்றிராணிமார்களும், குருக்களும், திருச்சபையின் காணும் தலைவரான புனித பாப்பரசரும், உண்மைகளையும் சாத்தியங்களையும் போதிக்கும் இறைவனின பிரதிநிதிகள் ஆவார்கள்.