69. நாம் கொடுத்த வாக்கை மீறாதிருக்கவும், அதன்படியே நடக்கவும் கடமையா?
நாம் உறுதிமொழி அளித்தபடி நடக்கக் கடமைதான்; ஆனால் நாம் வாக்களித்த காரியம் வேறொருவனுக்குக் கெடுதி அல்லது பாவத்துக்குக் காரணமாகிறதாகப் பிற்பாடு தெரியவந்தால் அந்த வாக்குப்படி நடக்கக் கடமையல்ல; அதற்கு மாறாக வாக்கை மீறிப் போகக் கடமை யுண்டு.
70. சத்தியப்பிரமாணமாய் சொன்ன காரியங்களில் தவறலாமா?
ஒருக்காலும் தவறக்கூடாது. ஏனெனில் சத்தியம் செய்யும் போது. நாம் சொல்வது மெய். முற்றிலும் மெய்யானது, யாதொரு கலப்பும் இல்லை என்பதற்கும், அல்லது நாம் செய்வதாக வாக்களிக்கும் காரியங்களைக் கட்டாயம் செய்து முடிப்போம் என்பதற்கும், கடவுளையே சாட்சியாகக் கூறுகிறோம். ஆகையால், சத்தியத்தை மீறுவது, கடவுளுக்கு அவசங்கை, அவமதிப்பான பெரும் பாதகமாகும்.
71. தீய காரியங்கள் ஏதேனும் செய்வதாகச் சத்தியம் செய்திருந்தால் என்ன செய்வது?
அத்தகைய சத்தியம் ஒருபோதும் செய்திருக்கக் கூடாது. ஆகையால் அதன்படி நடக்கவும் கூடாது.
குறிப்பு :-
(1) இரகசிய சபைகளில் செய்யப்படும் சாத்தியங்கள் இத்தகையானவை. அவ்விதமான சபைகளில் இருந்து விலகிக்கொண்ட பிறகு. அந்தச் சபையில் இரகசியமாய் அறிந்த விஷயங்களை மேலான நன்மையின் பொருட்டன்றி யாருக்கும் வெளியிடக்கூடாது. ஆனால், அந்த சபையில் கொடுத்த குருட்டுக் கீழ்ப்படிதலின் வார்த்தைப்பாட்டை அனுசரிக்க சிறிதேனும் கடமையில்லை. அவ்விதமான வார்த்தைப் பாட்டை ஒருக்காலும் கொடுத்திருக்கலாகாது.
(2) கற்புக்கு அல்லது நீதிக்கு விரோதமாக நடக்கக் கொடுத்த வாக்கை அனுசரிக்கக் கடமையில்லை.
72. உண்மையை விளம்பரப்படுத்திப் பரவச்செய்ய அனைவருக்கும் உரிமையுண்டா?
உண்டு. யான் பெற்ற பேறு பெருக இவ்வையகம்" என்னும் பொன்மொழிப்படி நாம் அறிந்த உண்மைகளை நமது சமூக மக்களுக்கும், ஏன்? உலக மக்களுமே அறியும்படிச் செய்ய உரிமையுண்டு. ஏனெனில், இது மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. ஆனால் இந்தப் பிரசாரத்தால் பிற சிநேகக் கடமையையும் அனுசரித்து, பிறருக்கு வருத்தமோ, இடறலோ ஏற்படாதபடி கவனிக்கவேண்டும். இதனால் உண்மையை மறைக்கவேண்டும் என்பது கருத்தல்ல; ஆனால், அதை எடுத்துரைக்கும் விதம் விவேகமுள்ளதாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, பிறருடைய தவறுகளை எடுத்துக் கூறும்போது உள்ளத்தைப் புண் படுத்தக்கூடிய கடினமான வார்த்தைகளையோ, அந்தத் தவறுகளைக் கைக்கொண்டுள்ளவர்களின் மீது மிதமிஞ்சின ஆத்திரத்தையோ கையாளக்கூடாது,
73. உண்மையைப் பிரச்சாரம் செய்வதை யாரும் தடுக்கலாமா?
காலம், இடம், முதலிய வசதிகளைப் பொருத்தமட்டில் உரிமையாளர் சில கட்டுத்திட்டம் பண்ணலாமே தவிர வேறு எந்த தனி ஆளோ, சமூகமோ, தலைவர்களோ தடுக்க உத்தரவில்லை.