பிறர் கொலை

1. பிறர் கொலை ஆவதென்ன?

மனசு பொருந்தி அநியாயமாய் மற்றொருவனைக் கொல்வதுதான் பிறர் கொலை எனப்படும்.


2. மனசு பொருந்தி என்று சொல்லுவானேன்?

எச்சரிக்கையாயிருந்தும், தற்செயலாய்ப் பிறரைக் கொல்லுகிறவன் பிறர் கொலை என்னும் பாவம் கட்டிக்கொள்ளுகிறதில்லை.  உதாரணமாக, எச்சரிக்கையாய் மோட்டார் ஓட்டுகிறவன், ஒன்றும் கவனிக்காமல் திடீரென குறுக்கே ஓடுகிறவனைக் கீழே தள்ளிக் கொன்றால், மனது பொருந்திக் கொலை செய்கிறதில்லை.


3. அநியாயமாய் என்று சொல்வதேன்?

ஏனென்றால், சில சமயங்களில் பாவமின்றி பிறரைக் கொல்லலாம்.


4. பிறரைக் கொல்லுகிறது பெரிய பாதகமா?

ஆம்; ஏனென்றால், கொலை செய்கிறவன் சர்வேசுரனுடைய அளவில்லாத சுதந்தரத்துக்கு விரோதம் செய்கிறான். மேலும் இந்தப் பாவத்தினால் கொலையுண்டவனுக்கும், அவன் குடும்பத்துக்கும், மற்ற மனுஷர்களுக்கும் ஒருக்காலும் பரிகரிக்கக் கூடாததான பெரிய அநியாயம் உண்டாகிறது. “எந்தக் கொலை பாதகனும் தனக்குள் நிலைமையான நித்திய சீவியத்தைக் கொண்டிருக்கிறதில்லை” என்று அர்ச். அருளப்பர் எழுதியிருக்கிறார். (1 அரு. 3:15).


5. பாவமின்றிப் பிறரைக் கொல்லக்கூடிய சமயங்கள் எவை?

(1) போர்க்களத்தில் நியாயமான காரணத்தினிமித்தம் சண்டை செய்யும்போது எதிரியைக் கொல்லுதல்.

(2) நீதி ஸ்தலத்தில் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட குற்றவாளியைச் அரசு ஆணையின் பேரில் கொல்லுதல்.

(3) யாராவது ஒருவன் நம்மை அல்லது நமது குடும்பத்தாரை அநியாயமாய் எதிர்த்தால், நமது உயிர், சுயாதீனம், கற்பென்கிற புண்ணியம், பெரிய ஆஸ்தி முதலியவைகளைக் காப்பாற்றும் பொருட்டு அவனைக் கொல்லுதல்.


6. நமது  உயிர் முதலிய பிரதான நன்மைகளைக் காப்பாற்றும் பொருட்டு, பிறனைப் பாவமின்றி கொல்லக் கூடிய சமயங்களில் கவனிக்க வேண்டிய காரியங்கள் எவை?

(1) நமது உயிர் முதலியவைகளைக் காப்பாற்றும் கருத்தோடு அப்படிச் செய்யவேண்டுமெ தவிர, அவனுடைய மரணத்தை விரும்பிச் செய்யக் கூடாது.

(2) நமது உயிர் முதலியவற்றைக் காப்பாற்ற வேறே வழி இல்லாதிருக்க வேண்டும்.

(3) நமக்கு இவ்வாறு தீமை செய்பவனை அந்நேரத்தில் மாத்திரம் அப்படிச் செய்யலாமேயயாழிய, பிறகு செய்யக் கூடாது.


7. இது விஷயத்தில் நமது உயிர் முதலியவைகளைக் காப்பாற்றும் பொருட்டு  பிறரைக் கொல்ல நாம் கடன்பட்டிருக்கிறோமோ?

அப்படி நினைக்க வேண்டாம்.  ஏனெனில், எதிராளியின் ஆத்தும இரட்சணியத்தை விரும்பி, அவனை எதிர்க்காமல் நமது உயிரை முதலாய்க் கொடுப்பது பெரிய புண்ணியமாகும்.


8. நமது கீர்த்தியைக் காப்பாற்றும்படியாகவது, நமக்குச் செய்யப்படும் அவமானத்துக்குப் பரிகாரமாகவாவது ஒருவனைக் கொல்லலாமா?

ஒருக்காலும் கூடாது.  செய்தால், கனமான பாவமாகும்.


9. ஒருவனுடைய வேதனையைக் குறைக்கும்பொருட்டு அவனுடைய மரணத்தை முந்தி வரச் செய்யலாமா?

அவன் சீக்கிரம் செத்துப் போகும்படி செய்வது கனமான பாவம்.


10.  மிருகம், பறவை முதலியவற்றைக் கொன்றால் பாவமா?

பாவமல்ல.  ஏனெனில், சர்வேசுரன் மிருகம் முதலிய ஜந்துக்களை மனிதன் பயன்படுத்துவதற்காக உண்டாக்கினதால் அப்படிப்பட்டவைகளைக் கொன்று சாப்பிடலாம்.


11. குற்றமில்லாதவனை மரணத்துக்குட்படுத்த இவ்வுலகத்தில் யாருக்கும் அதிகாரமுண்டோ?

ஒருவருக்கும் அதிகாரமில்லை.


12. இப்படியிருக்க இன்னும் பிறக்காத குழந்தையைக் கொல்லலாமா?

அது பெரிய கொலைபாதகமாகும். ஏனென்றால், இப்படிக் கொல்பவர்கள் குற்றமுள்ள பிள்ளையின் உயிரை வாங்கி விடுகிறதுமன்றி, அதன் ஆத்துமத்தையும் கொலை செய்கிறார்கள்.  எப்படியெனில், அந்தப் பிள்ளைகள் ஞானஸ்நானம் பெறாமல் சாகிறபடியால், அவர்கள் ஒருக்காலும் மோட்சத்தில் பிரவேசிக்க மாட்டார்கள். ஆகையால், தாயின் உயிரை முதலாய்க் காப்பாற்றுவதற்காக அவள் உதரத்தில் இருக்கிற குழந்தையைக் கொல்லவே கூடாது.


13.  இவ்விஷயத்தில் பாவத்தைக் கட்டிக் கொள்கிறவர்கள் யார்?

தங்கள் கர்ப்பத்தை அழிக்கிறதற்காக மருந்து சாப்பிடும் பெண்களும்; அவர்களுக்கு மருந்து கொடுக்கிறவர்களும்; தாய் உதரத்தில் இருக்கிற குழந்தையைக் கொல்லுகிற வைத்தியர்களும்; அதற்காக உதவி ஒத்தாசை செய்கிறவர்களும்; புத்தி ஆலோசனை கொடுப்பவர்களும் மகா கனமான பாவத்தைக் கட்டிக் கொள்ளு கிறார்கள்.


14.  யாராகிலும் குற்றவாளிகளைக் கொல்லலாமா?

அதற்கு அதிகாரமுள்ளவர்கள் செய்யலாமேயொழிய மற்றவர்கள் செய்யலாகாது.