தற்கொலை

1. தற்கொலை ஆவதென்ன?

மனது பொருந்தித் தனக்குத்தானே மரணம் வருவித்துக் கொள்வது தற்கொலை என்னப்படும்.


2. மனது பொருந்தி என்று சொல்லுவானேன்?

தனக்கு மரணம் வருவிக்கவேண்டுமென்று மனதில்லாமல் எதிர்பாராத விபத்தினால் அல்லது தற்செயலாய்த் தன்னைக் கொல் கிறவன் தற்கொலை என்னும் பாவம் கட்டிக்கொள்ள மாட்டான்.  உதாரணமாக: நல்ல மருந்து சாப்பிட மனதாயிருந்து தப்பிதமான விஷத்தை உட்கொள்ளுகிறவன்.


3. தன் உயிரை வாங்குகிறது பெரிய பாவமா?

பிறர் கொலையைப் போலவே தற்கொலையும் நீதிக்கும் பிறர் சிநேகத்துக்கும் விரோதமான மகா கனமான பாவம். ஏனெனில், 

(1) நம்முடைய உயிர் சர்வேசுரனுக்குச் சொந்தமானது.  சர்வேசுரனுக்கு மனிதனுடைய உயிர்மீதுள்ள சுதந்திரத்துக்குத் தற்கொலை பங்கம் வருவிப்பதால், நீதிக்கு விரோதமான பாவம்.

(2) நம்மை நேசிக்க வேண்டுமென்று பிறர்சிநேகக் கற்பனை கற்பிக்கிறது; தற்கொலையானது இந்தக் கற்பனையை மீறுவதினால் பிறர்சிநேகத்துக்கு விரோதமான பாவம்.

(3) மேலும் தற்கொலை செய்பவன் தன் பாவத்துக்கு மனஸ் தாபப்பட்டுத் தபசு செய்வதற்குச் சர்வேசுரன் கொடுத்திருக்கும் காலத்தைப் போக்கடித்து விடுகிறான்.


4. எப்போதாகிலும் ஒருவன் தன்னைக் கொன்று கொள்ளலாமா?

ஒருக்காலும் கூடாது.  ஆகையால், கடின வியாதியின் வாதை யைச் சகிக்கவும், உண்டான அபகீர்த்தியைப் பொறுக்கவும், கடனைச் செலுத்தவும் கூடாதிருக்கும்போது அல்லது சண்டை மனஸ்தாபம் கோபம் வைராக்கியத்தினிமித்தம் நமக்கு மரணம் வருவித்துக் கொள்ளும் கருத்தோடு யாதொரு கிரியையும் செய்யவே கூடாது.


5. தன் வாழ்நாளைக் குறைக்கப் பிரயாசைப்படலாமா?

வியாதியினாலாவது வேறே எவ்வித துன்பத்தினாலாவது உண்டாகும் வேதனையை ஒழிக்க எண்ணி, தன் சீவிய நாளைக் குறைக்கப் பிரயாசப்படக்கூடாது.


6.  உடல் உறுப்புகளை வெட்டிக் கொள்ளலாமா?

உயிரைக் காப்பாற்றுவதற்கன்றி தன் கை, கால் முதலிய அவயவங்களை வெட்டக்கூடாது.


7. உயிரைக் காப்பாற்றுவதற்காக உடல் உறுப்புகளை ஊனமாக்குதல் அல்லது வேறே சத்திரம் அவசியமாயிருக்கும்போது, அதைச் செய்வதற்குச் சம்மதிக்கக் கடமை உண்டா?

அதற்கு இணங்கக் கடன் ஒன்றுமில்லை. தன் உயிரைக் காப்பாற்ற வழக்கமானதும், சாதாரணமானதுமான மருந்துகளை உபயோகிக்கக் கடனானாலும், அதிக விசேஷ கருவிகளைப் பிரயோகிக்கக் கடமை யில்லை.


8. நமது உயிரை ஆபத்துக்குள்ளாக்கலாமா?

சில வேளையில் வெகு கனமான பிறர்சிநேகத்தை முன்னிட்டு, அல்லது பொது நன்மையினிமித்தம் நமது உயிரை முதலாய் ஆபத்துக்குள்ளாக்கலாம். உதாரணமாக: தொற்று வியாதிக்காரருக்கு உதவி செய்கிறதினால், தன் உயிருக்கு மோசம் வருமென்று அறிந்திருந்தும், அவர்களுக்கு உதவி செய்யலாம். --தெருவிலே விழுந்த வெடிகுண்டை எடுத்து அப்புறப்படுத்தலாம்.


9. எப்போதாகிலும் நமது உயிரை ஆபத்துக்குள்ளாக்கக் கடமை யுண்டா?

ஒரு ஆத்துமத்தை இரட்சிப்பதற்கு அல்லது நமது கடமையை நிறைவேற்றுவதற்கு வேறே வழியில்லையானால் நமக்கு மரணம் வருவிக்கக்கூடிய ஆபத்தைக் கவனியாமல், நமது உயிரை ஆபத்துக் குள்ளாக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.  உதாரணமாக:  தொத்து வியாதிக்காலத்தில் பங்கு சுவாமிமார்கள் வியாதியஸ்தர்களுக்கு அவஸ்தை கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.--தங்கள் தேசத் தைக் காப்பாற்றும்படியாகப் போர்வீரர்கள் தங்கள் உயிரைப் பலியிட பின்வாங்கக்கூடாது.


10. நமக்கு மரணம் சீக்கிரம் வரவேண்டுமென்று ஆசை கொள்ளலாமா?

(1) வெறும் வெறுப்பினால் மாத்திரம் சாவை ஆசிப்பது பாவமாகும்.  ஆனால் தனக்கு உண்டான கஷ்ட துன்ப வியாதி அகோரத்தினால் சாகிறதைவிடச் சீவிக்கிறது அதிக வருத்தமா யிருக்கும்போது, அப்பேர்ப்பட்ட ஆசை பாவமாயிராது.

(2) சீக்கிரம் மோட்சகதியடைந்து சர்வேசுரனைத் தரிசிக்க வேண்டுமென்கிற ஆசையோடு என்கிலும், அல்லது இனி சர்வேசுரனுக்குப் பாவத்தினால் துரோகம் செய்யாதபடியென்கிலும் மரணம் கூடியசீக்கிரம் வரவேணுமென்று ஆசிப்பது  புண்ணியமாம்.  “என் தேகக் கட்டவிழ்ந்து, கிறீஸ்துவுடனே இருக்க எனக்கு ஆசையுண்டு” என்று அர்ச். சின்னப்பர் வசனித்தார்     (பிலிப். 1:23).


11.  தற்கொலை செய்துகொள்கிறவனுடைய கதி என்ன?

நேராய் நித்திய நரகத்துக்குப் போவான். ஏனெனில் அந்நேரத்தில் சாதாரணமாய் உத்தம மனஸ்தாபப்படுவதற்கு நேரமிராது.


12. தற்கொலை செய்கிறவர்களைத் திருச்சபை எப்படித் தண்டிக்கிறது?

அவர்களுக்குக் கிறீஸ்தவர்களுக்குரிய அடக்கம் கொடுக்கக் கூடாதென்றும், அவர்களை மந்திரித்த கல்லறையில் வைக்கக் கூடாதென்றும் திருச்சபை விலக்கியிருக்கிறது. மேலும், அவர்களுக்காகப் பூசை ஒப்புக்கொடுப்பதை விலக்கம் செய்து, வேண்டிக்கொள்கிறதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு இரட்சிப்பு கிடையாது.