திருச்சபை இரட்சணியத்துக்கு ஏக வழி

94. (47) திருச்சபையின் சொற்படி கேளாதவர்களுக்கு மோட்சம் உண்டோ?

இல்லை.


95. (48) இல்லையென்கிறதற்குத் திருஷ்டாந்தம் என்ன?

திருச்சபையின் சொற்படி கேளாதவன் அஞ்ஞானியைப் போல உனக்கு ஆகக்கடவான் என்று கர்த்தர் திருவுளம் பற்றினார்.


1. இரட்சணியம் அடைவதற்கு சேசுநாதரை விசுவசித்து அவரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான திருச்சபையில் சேர வேண்டுமா?

சேர வேண்டும்.  ஏனென்றால்: “ஒருவன் ஜலத்தினாலும், இஸ்பிரீத்துசாந்துவினாலும் மறுபிறப்பு அடையாதிருந்தால், சர்வேசுரனுடைய இராச்சியத்தில் பிரவேசிக்க மாட்டானென்று மெய்யாகவே, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” (அரு. 3:5), “விசுவசியாதவனோ ஆக்கினைத் தீர்வையிடப்படுவான்” (மாற். 16:16) என்று சேசுநாதர்சுவாமி சொல்லியிருக்கிறபடியால், ஞானஸ்நானத்தால் திருச்சபையில் பிரவேசிக்கிறவர்கள் மாத்திரம் இரட்சணியமடைவார்களென்று நாம் தீர்மானிக்க வேண்டும்.


2. திருச்சபைக்குப் புறம்பாயிருப்பவர்களுக்கு இரட்சணிய மில்லையென்பது சத்தியமா? 

வேத சத்தியம்தான்.  ஏனென்றால், சேசுநாதரின் திருச்சபை இரட்சணியத்திற்கு ஏக அவசியமான வழி அல்லது சாதனமாம்.


3. சேசுநாதரின் திருச்சபை இரட்சணியத்திற்கு அவசியமான வழி அல்லது சாதனம் என்று ஏன் சொல்லுகிறோம்?

ஏனென்றால், சேசுநாதர் மனிதருக்காக சம்பாதித்த இரட் சணியப் பலன்கள் அவர்களுக்குப் பிரயோசனமாயிருக்கும்படி அவைகளை அவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்க ஓர் வழியை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.  திருச்சபையிலும் அதன் வழியாயும், இரட்சணியத்தின் பலன்களை மனிதர்கள் அடையும்பொருட்டு கிறீஸ்துநாதர் அதை ஸ்தாபித்தார். ஆதலால் திருச்சபைக்கு வெளியே இரட்சணியமில்லை என்னும் வேத சித்தாந்த வாக்கியத் தின்படி திருச்சபைக்குப் புறம்பாக இருக்கிற எவரும் நித்திய சீவியம் அடைய முடியாது.


4. திருச்சபைக்குப் புறம்பாயிருக்கிறவர்கள் யார்? 

அஞ்ஞானிகளும், பதிதர்களும், பிரிவினைக்காரரும், திருசசபையை மறுதலித்தவர்களும், திருச்சபைக்குப் புறம்பாக்கப் பட்டவர்களுமாம்.


5. அஞ்ஞானி என்றால் யார்? 

ஞானஸ்நானம் பெறாதவனும், சேசுநாதரை விசுவசி யாதவனுமேயாம்.


6. பதிதன் என்றால் யார்? 

கிறீஸ்துவனென்று அழைக்கப்பட்ட போதிலும், திருச்சபை படிப்பிக்கிற யாதொரு விசுவாச சத்தியத்தை அங்கீகரியதவன், அல்லது திருச்சபையால் விலக்கப்பட்ட போதகங்களை அங்கீகரித்துப் பிடிவாதத்துடன் சாதிக்கிறவனேயாம்.


7. பிரிவினைக்காரன் என்றால் யார்? 

திருச்சபையின் போதகங்களை அங்கீகரித்துக் கொண்டு, அதின் மெய்யான தலைவர்களுடைய அதிகாரத்தை அங்கீகரியாமல் அவர்களுக்குக் கீழ்ப்படியாதவனேயாம்.


8. திருச்சபையை மறுதலித்தவன் யார்? 

சத்திய வேதத்தில் உட்பட்டு, கத்தோலிக்கனாய் ஒழுகின பின், திருச்சபையைப் புறக்கணித்துத் தள்ளினவனேயாம்.


9. திருச்சபையினின்று புறம்பாக்கப்பட்டவன் யார்? 

பிரசித்தமான பெரும் அக்கிரமங்களுக்குத் தண்டனையாகத் திருச்சபையின் ஐக்கியத்தினின்று தள்ளப்பட்டவனேயாம்.


10. திருச்சபைக்குப் புறம்பாயிருக்கிறவர்களெல்லோரும் இரட்சணியம் அடையமாட்டார்களென்று சொல்லலாமா? 

சொல்ல முடியாது.  ஏனென்றால், திருச்சபைக்குப் புறம்பாயிருக்கிறவர்கள் எல்லாரும் குற்றவாளிகளல்ல, திருச்சபையினின்று முழுதும் பிரிந்திருப்பதற்கு ஒருவன் மனம் பொருந்தி இந்தக் குற்றங்கட்டிக் கொள்ளுகிறது அவசியம்: ஆகையினாலே:

(1) திருச்சபையை மறுதலித்தவனும்,

(2) திருச்சபையினின்று புறம்பாக்கப்பட்டவனும், 

(3) மெய்யான திருச்சபையையும், அதன் உண்மையையும் அறிந்திருந்தும், அதில் சேர மனமில்லாதிருப்பவனும்,

(4) இதுதான் மெய்யான சபையென்று அறியாதவன் அசட்டைத்தனத்தினாலாவது, வேறே உலக ரீதியான காரணங்களினாலாவது தன்னால் கூடியமட்டும் இதின் உண்மையைத் தேடாமலிருபபவனும், குற்றவாளியாயிருப்பதினால், அவர்கள் இரட்சணியமடையவே மாட்டார்கள்.

ஆனால் தங்கள் வேதம் மெய்யான வேதமென்று உறுதியாக நம்பி, அதைப் பற்றி யாதொரு சந்தேகமும் படாமல், தங்களால் கூடிய மட்டும் சர்வேசுரனுக்கு ஊழியம் செய்து, பாவத்தை விலக்கி, தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்தில் இருப்பவர்கள் இரட்சணியமடைவார்களென்று சொல்லலாம்.  ஏனென்றால் அப்பேர்ப்பட்டவர்கள் திருச்சபையின் சரீரத்தோடு ஐக்கியமில்லா திருந்தாலும், அதன் ஆத்துமத்தைச் சேர்ந்திருக்கிறார்கள். 


11. திருச்சபையில் என்னென்ன விபரத்தைப் பகுத்துணர வேண்டும்? 

காணக்கூடிய திருச்சபையின் ஞானசரீரம், காணப் படாத திருச்சபையின் ஆத்துமம் ஆகிய இவ்விரண்டையும் பகுத் துணர வேண்டும்.


12. திருச்சபையின் ஞான சரீரம் என்றால் என்ன?   

சேசுநாதரால் கற்பிக்கப்பட்டவைகளை வெளியரங்க மாய் அநுசரித்து வருகிறவர்களுடைய கூட்டமாம்.


13.  திருச்சபையின் ஞான சரீரத்தைச் சேர்ந்தவர்கள் யார்?

ஞானஸ்நானம் பெற்று சேசுநாதரால் நியமிக்கப்பட்டிருக் கும் தலைவருக்குக் கீழ்ப்படிந்து, திருச்சபையினின்று சபித்துத் தள்ளப்படாமலிருக்கும் விசுவாசிகளாம்.


14. திருச்சபையின் ஆத்துமம் என்பது என்ன? 

திருச்சபையின் சுபாவத்துக்கு மேலான ஞான சீவியத்துக்கு காணக்கூடிய மூலாதாரமாம்.


15. திருச்சபையின் ஆத்துமத்தோடு சேர்ந்திருக்கிறவர்கள் யார்? 

தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்திலிருக்கும் சகலரும் திருச்சபையின் ஆத்துமத்தில் சேர்ந்திருக்கிறார்கள்.


16. திருச்சபையின் ஆத்துமத்தோடு மாத்திரம் ஒன்றித்திருக்கிறவர்கள் யார்?

திருச்சபையின் ஞான சரீரத்தைப் பற்றி அறியாததினால் அதற்குப் புறம்பாயிருந்த போதிலும், தங்களுக்குத் தெரிந்த மட்டும் சர்வேசுரனுடைய கற்பனைகளை அனுசரித்து, தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்தில் இருப்பவர்களாம்.


17. திருச்சபையின் ஆத்துமத்தோடும் சரீரத்தோடும் ஐக்கியமா யிருக்கிறவர்கள் யார்?

ஞானஸ்நானம் பெற்று மற்ற தேவத்திரவிய அநுமானங்களை அங்கீகரித்து சேசுநாதரால் நியமிக்கப்பட்டிருக்கும் தலைவருக்குக் கீழ்ப்படிந்து தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்திலிருப் பவர்களாம்.


18. திருச்சபையின் ஆத்துமத்தோடாவது, அதன் சரீரத்தோடாவது சேராதவர்கள் யார்? 

திருச்சபைக்குப் புறம்பாயிருந்து சாவான பாவ அந்தஸ்தில் இருப்பவர்கள்.


19. திருச்சபையின் சரீரத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் இரட்சணியமடைவார்களா? 

சொல்ல முடியாது.  அவர்கள் சாகிற வேளையில் தேவ இஷ்டப்பிரசாதத்தால் திருச்சபையின் ஆத்துமத்தோடும் ஐக்கியமாயிருந்தால்தான் இரட்சணியமடைவார்கள்.


20. திருச்சபையின் சரீரத்தோடு சேர்ந்திருக்காமல், அதன் ஆத்து மத்தோடு மாத்திரம் ஐக்கியமாயிருக்கிறவர்கள் இரட்சணியமடைவார்களா? 

அடைவார்கள்.


21. திருச்சபையின் ஆத்துமத்தோடும் சரீரத்தோடும்  ஐக்கியமா யிருக்கிறவர்கள் இரட்சணியமடைவார்களா? 

அடைவார்கள்.


22. தான் அநுசரிக்கும் வேதம் மெய்யான வேதமென்று உறுதியாக நம்புகிற ஒரு அஞ்ஞானி சாகும் வேளையில் நல்ல கிறீஸ்துவன் என்ன செய்வான்? 

அவன் தன் பாவங்களுக்காக மெய்யான மனஸ்தாபப்படும் படியாக அவனுக்கு நல்ல புத்திமதி சொல்லுவான்.


23.  திருச்சபையின் சொற்படி கேளாதவன் அஞ்ஞானி போல் நமக்கு ஆகக்கடவான் என்பதற்கு அர்த்தமென்ன?

இரட்சணியமடைவதற்கு சேசுநாதர்சுவாமி போதித் திருக்கிற போதகங்களையும், அவர் குறித்திருக்கிற ஞான உதவிகளையும் புறக்கணிக்கும் அஞ்ஞானிகளைப்போல், திருச்சபையின் சொற்படி நடவாத கிறீஸ்தவர்களை நாம் எண்ணி, அவர்களை வேத காரியங்களில் அஞ்ஞானிகளைப் போல் நடத்த வேணுமென்று அர்த்தமாகும். 


24. கத்தோலிக்க கிறீஸ்தவன் எப்படி திருச்சபையின் சொற்படி நடவாமல் போகலாம்? 

தேவ கட்டளைப்படி நடந்தபோதிலும், திருச்சபைக்குக் கீழ்ப்படியாமல் போகிறதினால்தான்.


25. அப்பேர்ப்பட்டவனுக்கு என்ன நேரும்? 

தகுந்த புத்திமதியால் எச்சரிக்கப்பட்டும்கூட தன் தப்பிதத்தில் மூர்க்கத்தனமாய் நிலைநிற்பவனைத் திருச்சபை தன் கூட்டத்தினின்று அப்புறப்படுத்தும்.


26. திருச்சபையினின்று தள்ளப்பட்ட கிறீஸ்தவன் எதை இழக்கிறான்? 

(1) தேவ ஆராதனையில் சேர அவனுக்கு உரிமையில்லாமல் போகிறது;

(2) தேவத்திரவிய அநுமானங்களைப் பெற அவனுக்கு சுதந்தரமில்லை;

(3) திருச்சபையின் ஞான நன்மைக்குப் பங்காளியாயிருக்க அவனுக்குச் சுதந்தரமில்லை;

(4) கடைசியாய்ச் செத்தபிறகு முதலாய் அப்பேர்ப்பட்டவன் மந்திரிக்கப்பட்ட கல்லறையில் புதைக்கப்பட மாட்டான்.


27. அஞ்ஞானிகளைப் போல் நாம் எண்ண வேண்டிய குருக்கள் உண்டோ? 

உண்டு.  திருச்சபைக்குக் கீழ்ப்படியாத பிரிவினைக் குருக்களை நாம் அஞ்ஞானிகளைப் போல் எண்ண வேண்டும்.


28. நாம் அதைப் பற்றி ஆச்சரியப்பட வேண்டுமோ? 

சேசுநாதரால் அப்போஸ்தலராகத் தெரிந்தெடுக்கப் பட்ட யூதாஸ் பண ஆசையினாலேயும், சந்நியாசியாகிய லூத்தர் ஆங்காரத்தினாலேயும் எப்படிக் கெட்டுப் போனார்களோ, அப்படியே இன்னமும் தங்கள் ஆசாபாசங்களினாலே கெட்டுப் போய் கலகத்துக்கும் பிரிவினைக்கும் காரணமாயிருந்து, திருச் சபைக்குக் கீழ்ப்படியாத குருக்களும் உண்டென்பதைப் பற்றி ஆச்சரியப்பட வேண்டாம்.  ஏனென்றால் குருக்களும் நம்மைப் போல மனிதர்களாயிருப்பதால், நம்மைப் போலவே குற்றங் குறைகளைக் கட்டிக் கொள்ளக்கூடியவர்களே.


29. மேற்றிராணியாருக்குக் கீழ்ப்படியாத குருவுக்கு நேரிடுவ தென்ன? 

யாதொரு குருவானவர் திருச்சபைக்குக் கீழ்ப்படியாவிட்டால், மேற்றிராணியாரால் தண்டிக்கப்பட்டு, தன் குருப் பட்டத்துக்குள்ள உரிமைகளை இழக்கிறார்.  அதாவது: பூசை செய்யக் கூடாது, பாவசங்கீர்த்தனம், கலியாணம் முதலிய தேவதிரவிய அநுமானங்களை நிறைவேற்றவும் கூடாது.


30. இப்பேர்ப்பட்ட குழப்பக்கார குருவிடம் தேவத்திரவிய அநுமானங்களைப் பெறலாமோ? 

பெறவே கூடாது;  பெற்றால் தேவதுரோகம் என்னும் கனமான பாவம்.  இன்னும் அவரிடம் தேவதிரவிய அநுமானத்தைப் பெற்றவன் திருச்சபையின் சாபத்துக்குள்ளாகிறான்.  மேலும் இப்பேர்ப்பட்ட பிரிவினைக் குருவால் கொடுக்கப்பட்ட பாவ சங்கீர்த்தனமும், மந்திரிக்கப்பட்ட கலியாணமும் செல்லாது.


31. ஒரு பிரிவினைக் குரு ஞானஸ்நானம், தேவ நற்கருணை கொடுப்பாராகில் அவை தேவத்திரவிய அநுமானங்களாயிருக்குமோ? 

இருக்கும்.  ஆனால் அவரிடமிருந்து வேணுமென்று அவைகளைப் பெறுகிறவர்கள், ஒரு பெரிய தேவதுரோகத்தைக் கட்டிக் கொள்ளுவார்கள்.


32. அவஸ்தை நேரத்தில் பிரிவினைக்காரக் குருவிடம் கடைசி தேவத்திரவிய அநுமானங்களை வியாதிக்காரன் பெற்றுக் கொள்ளலாமோ? 

அப்பேர்ப்பட்ட சமயத்தில் பிரிவினைக்காரக் குருவிடம் பாவசங்கீர்த்தனம் செய்யத் தடையில்லை (தி. ச. 882).  மேலும் நல்ல குருவானவர் அருகாமையிலில்லாவிட்டால் அவஸ்தைப் பூசுதலைக் கூட பெற்றுக் கொள்ளலாம்.  ஆனாலும் பிரிவினைக்குரு கடைசி  தேவத்திரவிய அநுமானங்களைக் கொடுக்க தன் சபையில் சேர வேண்டுமென்று கண்டிப்பான திட்டம் பண்ணினால் அவரிடம் ஒருக்காலும் அவைகளைப் பெறக் கூடாது.  பிரிவினைக் குருவைக் கூப்பிடுவதால் கிறீஸ்தவர்களுக்குத் துர்மாதிரிகையும், பிரிவினைக் குருவுக்கு அதிகப் பலமும் உண்டாவதாயிருந்தால், அந்தக் கெட்ட குருவைக் கூப்பிடாமல், வியாதிக்காரன் தேவ இரக்கத்தின் பேரில் தன் முழு நம்பிக்கையும் வைத்து, உத்தம மனஸ்தாபப்படுவது அதிக நலமாயிருக்கும்.


33. யாதொரு கிறீஸ்தவன் அல்லது கிறீஸ்தவர்கள் தங்கள் சொந்தச் செலவில் கட்டியிருக்கும் கோவிலுக்காவது, செபக் கூட்டத்திற்காவது திருச்சபை சாபத்துக்குள்ளான பிரிவினைக் குருவை வரவழைக்கலாமா? 

அப்பேர்ப்பட்ட குருவை வரவழைத்துப் பூசை முதலிய தேவதிரவிய அநுமானங்களை நிறைவேற்றும்படி செய்வது மகா பாவமாம்.