திருச்சபைக்குரிய விசேஷ வரங்கள்

96. இந்தத் திருச்சபைக்கு சேசுநாதர் என்ன பிரதான வார்த்தைப் பாடுகளைக் கொடுத்தார்?

இது பூலோக முடிவு பரியந்தம் அழியாமல் நிலையாய் நிற்கும் என்றும், பிசகின்றி சத்திய வேதத்தைத் தவறாமல் போதிக்கும் எனவும் வாக்குக் கொடுத்தார்.


1. இவ்வித வாக்கை சேசுநாதர் தமது திருச்சபைக்குக் கொடுத் தாரென்று நமக்கு எப்படித் தெரியும்? 

“இதோ நான் உலக முடியுமட்டும் எந்நாளும் உங்க ளோடு இருக்கிறேன்” என்று சேசுநாதர் வசனித்தார் (மத். 28:20). சேசுநாதர் தாம் உலக முடியும்வரையில் தமது திருச்சபையோடு இருப்பதாக வாக்குக் கொடுத்திருப்பதால், அது ஒருக்காலும் தவறிப் போகாமல் எக்காலத்துக்கும் நிலைத்திருக்கும்படி, அதை ஸ்தாபித் திருக்கிறாரென்று விளங்குகிறது.


2.  ஏன் திருச்சபையானது பூலோக முடிவு வரையிலும் அழியாமல் நிலைத்திருக்க வேண்டும்? 

சேசுநாதர் பூலோக முடிவு வரையிலும் பிறக்கப் போகிற சகல மனிதரும் இரட்சணியமடையவதற்குத் திருச்சபையை ஏக வழியாக உண்டாக்கியிருக்கிறபடியால்தான்.


3. திருச்சபைக்குத் தவறாமை இருக்கிறது என்றால் என்ன? 

திருச்சபையானது தான் போதிக்கும் வேதசத்தியங் களிலும், கற்பிக்கும் நல்ல ஒழுக்கத்துக்கடுத்த விஷயங்களிலும்,   ஒருபோதும் தப்பிப் போகாதென்று அர்த்தமாகும்.


4. அப்பேர்ப்பட்ட வரம் திருச்சபைக்கு அவசியமா? 

திருச்சபையானது சகல மனிதரும் இரட்சணியமடைய ஏக வழியாக சேசுநாதரால் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறதினால், இது சேசுநாதரின் போதகங்களை மாற்றாமல், அவைகளை எப்போதும் பிரமாணிக்கமாய்க் காப்பாற்றவும் மனிதரால் முடியாத காரியம்.  திருச்சபைக்குத் தவறாவரமில்லாவிட்டால்,

(1) அது தன் போதகத்தில் தப்பிப் போய், மனிதருக்கு மோட்ச வழியைக் காட்டாமல், அவர்களுடைய நித்திய கேட் டுக்குக் காரணமாயிருக்கக் கூடும்.

(2) அதிசீக்கிரம் பொய்யான போதகங்கள் எங்கும் பரம்பவே, அவைகளைச் சீர்திருத்தித் திட்டப்படுத்த ஒருவனும் போதுமான சக்தியுள்ளவனாயிருக்க மாட்டான்.

(3) அன்றியும் சேசுநாதரின் மெய்யான போதகமெது என்று அறிவது முழுதும் கூடாததாயிருக்கும்.  ஏனென்றால், அதிகாரத்தோடு சகல சந்தேகங்களையும் நிவிர்த்தி செய்யும் திருச்சபையின் நியாயாதிபதி தவறாதவராயிருக்க வேண்டும்.  இல்லாவிடில், அவன் போதகம் சேசுநாதரின் போதகந்தான் என்று ஒருநாளும் நிச்சயமாயிருக்க முடியாது.


6. தவறாவரம் திருச்சபைக்கு இருக்கிறதென்று நமக்கு எப்படித் தெரியும்? 

(1) “இதோ நான் உலக முடியுமட்டும் எந்நாளும் உங்களோடுகூட இருக்கிறேன்” என்று (மத்.28:20) சேசுநாதர் அப்போஸ்தலர்களுக்குச் சொன்னதினால், அவர்களை விட்டுத் தாம் பிரிவதில்லையென்றும், தாம் உலக முடிவு வரையில் திருச் சபையோடு இருப்பதாகவும் வாக்குக் கொடுத்தார்.  சேசுநாதர் தமது திருச்சபையோடிருந்து, அதை நடத்தி வருகிறதினால்,  அது ஒருக்காலும் தவறிப் போகமுடியாது.

(2) “இஸ்பிரீத்துசாந்துவானவர் சகலத்தையும் உங்களுக்குக் கற்றுக் கொடுப்பார்” என்று (அரு. 16:16) சேசுநாதர் அப்போஸ்தலர்களுக்கு வார்த்தைப்பாடு கொடுத்தார்.  சத்திய சுரூபியாகிய இஸ்பிரீத்துசாந்துவானவரால் போதிக்கப்பட்டு வருகிற திருச்சபை தவறிப் போக முடியாது.

(3) “நரகத்தின் வாசல்கள் திருச்சபையை ஒருபோதும் மேற்கொள்ளமாட்டாது” என்று (மத்.16:18) சேசுநாதர் வாக்களித்த போது, தமது திருச்சபைக்குத் தவறா வரங் கொடுக்க வாக்களித்தார்.  திருச்சபை எப்போதாவது விசுவாசத்திலும் நல்லொழுக்கத்திலும் தவறிப் போகக் கூடுமானால், இந்த வார்த்தைப்பாடு வீணாய்ப் போகும்.  ஏனெனில் திருச்சபை தவறினால், நரகத்தின் வாசல்கள், அதாவது நரகப் பேயின் வல்லமை அதை மேற்கொண்டனவென்று சொல்ல வேண்டியிருக்கும்.


7. திருச்சபைக்கு அளிக்கப்பட்ட தவறாவரம் யாரிடம் இருக் கிறது? 

(1) முன்சொன்னபடி அர்ச். பாப்பானவருக்கு இவ்வரம் இருக்கிறது.

(2) ஒவ்வொரு மேற்றிராணியாரும் தனித்தனியே தவறக் கூடுமாயிருந்தாலும், சகல மேற்றிராணிமாரும் அர்ச். பாப்பானவரோடு பொதுச்சங்கமாக ஒன்றித்திருக்கும்போது இவர்களுக்குக் கூட இவ்வரம் இருக்கிறது.


8.  பொதுச் சங்கம் என்றால் என்ன?

எல்லா மேற்றிராணிமார்களும் பாப்பாண்டவரால் அழைக்கப்பட்டு, அர்ச். பாப்பானவர் அல்லது அவருடைய பிரதிநிதியின் தலைமையின்கீழ் கூடும் மேற்றிராணிமாரின் கூட்டமே பொதுச் சங்கம் எனப்படும்.


9. பாப்பானவராலாவது, பொதுச் சங்கத்தினாலாவது  நிரூபிக்கப்பட்ட சத்தியங்களுக்குப் பெயரென்ன? 

விசுவாச சத்தியம் என்று பெயர். இதை மறுதலித்தல் பதிதத்தனம் என்று சொல்லப்படும்.


10. திருச்சபையில் ஆதிமுதல் இதுவரையில் எத்தனை பொதுச் சங்கங்கள் நடந்திருக்கின்றன? 

ஜெருசலேமில் நடந்த அப்போஸ்தலர்கள் கூட்டத்தைத் தவிர அந்நாள் முதல் இந்நாள் வரையில் இருபது பொதுச் சங்கங்கள் நடந்திருக்கின்றன. “நீசே” என்னும் பட்டணத்தில் 325-ம் வருஷத்தில் முதற்சங்கம் கூடினது. 20-ம் சங்கமோ 1875-ம் ஆண்டில் ரோமாபுரியில் அர்ச். பாப்பானவர் வசிக்கும் “வத்திக்கான்” அரண்மனையில் கூடினது.