முதலாம் தேவ இலட்சணம்

1. முதலாம் தேவ இலட்சணத்தைச் சொல்லு.

“சர்வேசுரன் தாமாயிருக்கிறார்.” 


2. தாமாயிருக்கிறாரென்பதற்கு அர்த்தமென்ன?

யாதொரு பிற காரணமுமில்லாமல், தானாக, அதாவது தனது சொந்த வல்லமையினால் இருப்பது என்று அர்த்தமாம்.


3. பரலோகமும் பூலோகமும் அவற்றில் அடங்கிய சகல வஸ்துக்களும் தானாயிருக்கின்றனவா?

இல்லை, அவைகள் தங்கள் இருத்தலை, தங்கள் உயிர் இருப்பை சர்வேசுரனிடத்திலிருந்து பெற்றுக் கொண்டிருக்கிற படியால் தானாயிருக்கிறதில்லை.


4. சம்மனசுக்கள் தாங்களாயிருக்கிறார்களா?

சம்மனசுக்களைச் சர்வேசுரன் படைத்தாரேயன்றி, அவர்கள் தாங்களாயிருக்கிறதில்லை.


5. நாம் தாமாயிருக்கிறோமா?

இல்லை.  நாமும் சர்வேசுரனால் உண்டாக்கப்பட் டிருக்கிறோம்.  அவர்தான் நமக்கு ஆத்துமத்தையும் சரீரத்தையும் கொடுத்திருக்கிறார்.


6. சர்வேசுரனைப் படைத்து, அவருக்கு உயிர் கொடுத்தவர் உண்டா?

அவரை ஒருவரும் படைக்கவில்லை. அவர் நித்தியமா யிருக்கிறபடியால், அவருக்கு எந்த வஸ்துவும் உயிர் கொடுக்கவில்லை.  அவர் தாமாக ஜீவிக்கிறார்.  மேலும் எந்த வஸ்துவாவது சர்வேசுரனுக்கு உயிர் கொடுத்திருந்தால், அப்படி உயிர் பெற்றவன் சர்வேசுரன் அல்லவென்று சொல்ல வேண்டியது.


7. சர்வேசுரன் தாமாயிருக்கிறதெப்படி?

சர்வேசுரன் யாருடைய வல்லமையாலும் உண்டாக்கப் படாமலும், யாரிடத்திலிருந்தும் உயிர் பெறாமலும், யாருடைய உதவிகளையும் அடையாமலும், தமது சொந்த வல்லமையினாலும், சுபாவ இயல்பினாலும் அவசியமாகத் தம்மிலே தாமாயிருக்கிறார்.


8. சர்வேசுரன் தவிர தன்னில் தானாயிருக்கிற வேறே வஸ்து இருக்கக்கூடுமா?

சர்வேசுரன் ஒருவர் தவிர, வேறே ஒரு வஸ்துவும் தானாக இருக்க முடியாது.  இப்பேர்ப்பட்ட வஸ்து இருக்கக் கூடுமானால், அப்போது அந்த வஸ்துவும் சர்வேசுரனாயிருக்கும். அது முடியாத காரியம்.


9. சர்வேசுரன் தாமாயிருக்கிறார் என்னும் சத்தியத்தை எப்படி அறிவோம்?

சர்வேசுரனுடைய நாமம் ஏதென்று கேட்ட மோயீசனுக்கு: “இருக்கிறவர் நாமே” என்று அவர் திருவுளம்பற்றினார் (யாத். 3:14).  அந்த மறுமொழியால், தாம் சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல. தமது உயிரை வேறொருவனிடத்தினின்று பெற்றவரல்ல. ஆனால் தம்முடைய சுபாவத் தன்மையாலே அது தமக்கு இருக்கிறதாகச் சர்வேசுரன் நமக்கு அறிவித்திருக்கிறார்.