இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பொது வியாக்கியானம்

1. இவ்விடத்தில் இலட்சணம் என்பதற்கு அர்த்தமென்ன?

ஒரு வஸ்து எதுவென்றும், அதன் சுபாவம் எப்பேர்ப் பட்டதென்றும் கண்டுபிடிப்பதற்கு உதவியான குறிகளாம்.


2. தேவ இலட்சணங்கள் என்றால் என்ன?

சர்வேசுரன் இருக்கும் தன்மையில் அல்லது அவர் நடத்தும் கிரியைகளில் நாம் நமது புத்தியைக் கொண்டு பிரித்து எடுக்கும் வெவ்வேறு தேவ குணங்களாம்.


3. இந்த ஆறு இலட்சணங்களைப் பிரதான இலட்சணங்கள் என்று சொல்வானேன்?

(1)  சர்வேசுரனிடத்தில் கணக்கற்ற இலட்சணங்கள் இருந்தாலும், அவருக்குச் சொந்தமான மற்ற இலட்சணங்கள் எல்லாம் இந்த ஆறு இலட்சணங்களில் அடங்கியிருந்து, இவைகள் மற்ற இலட்சணங்களுக்கு ஊற்றுப்போல் இருக்கின்றன.  அப்படியே சர்வேசுரன் நித்தியர் ஆனதால் மாற்றமற்றவராயிருக்கிறார்.  எங்கும் வியாபித்திருக்கிறபடியால், சகலத்தையும் அறிவார்.

(2) சர்வேசுரன் யாரென்றும், அவருடைய சுபாவம் என்னவென்றும் அறிவதற்கு மேற்சொல்லிய இலட்சணங்கள் போதும்.

(3)  இத்தேசத்தின் தேவர்கள் மெய்யான சர்வேசுரனல்லவென்று காண்பிப்பதற்கு மேற்சொல்லிய இலட்சணங்கள் போதும்.


4. இத்தேசத்தின் தேவர்கள் மெய்யான சர்வேசுரன் அல்லவென்று காண்பிப்பதற்கு மேற்கூறப்பட்ட ஆறு இலட்சணங்கள் எப்படிப் போதுமா யிருக்கின்றன?

அஞ்ஞானிகளின் வேதபுஸ்தகங்கள், சத்தியங்கள், முதலியவைகளைக் கொண்டு, அத்தேவர்கள்:

(1) மற்றவர்களிடத்தினின்று உற்பவித்தார்களென்றும்,

(2) அவர்களுக்குத் துவக்கமும், சரீரமும் உண்டென்றும்,

(3) அவர்கள் சகல நன்மைத்தனமுள்ளவர்கள் அல்ல வென்றும்,

(4) அவர்கள் எங்கும் வியாபித்திருந்து எல்லாச் சிருஷ்டிகளுக்கும் கர்த்தாக்களா யிருப்பதில்லையென்றும், இதனாலே அத்தேவர்கள் சர்வேசுரன் அல்லவென்றும் காட்டுவது எளிதே.  இந்த ஆறு இலட்சணங்களில் ஒன்று மாத்திரம் ஒரு தேவனுக்குக் குறைவுபட்டாலும், அவன் மெய்யான சர்வேசுரன் அல்லவென்று நிச்சயிப்பதற்கு அதுவே போதும்.


5. சர்வேசுரனுடைய சுபாவத்துக்கும் இலட்சணங்களுக்கும் மெய்யான வித்தியாசம் உண்டா?

சர்வேசுரன் சற்றேனும் பாகமாகப் பிரிக்கக் கூடாத வஸ்துவானபடியால், அவருடைய சுபாவத்துக்கும், இலட்சணங்களுக்கும் மெய்யான வித்தியாசம் கிடையாது. இலட்சணங்கள் அவருடைய சுபாவத்தைச் சேர்ந்தவை. அவைகள் சர்வேசுரனே, சர்வேசுரனே அவைகள்.  மேலும் அவருடைய பற்பல இலட்சணங் களும் ஒன்றுக்கொன்று மெய்யாகவே வித்தியாசமானவை அல்ல. இப்படியே நித்தியர் என்னும் இலட்சணத்திற்கும் மாற்றமற்றவர் என்னும் இலட்சணத்திற்கும் மெய்யான வித்தியாசமில்லை.


6. அப்படியானால் நமது புத்தியினால் தேவ இலட்சணங்களைப் பிரித்து யோசிப்பதற்குக் காரணம் என்ன?

நாம் மனிதர்களுடைய குணங்களை யோசித்துப் பார்ப்பதுபோல், சர்வேசுரனுடைய இலட்சணங்களையும் பிரித்து யோசித்தாலொழிய, அவைகளை அளவுள்ள நமது புத்தியால் கண்டுபிடிக்கவே முடியாது.  ஆனாலும் சர்வேசுரனிடத்திலுள்ள தெல்லாம், எவ்வித மெய்யான வித்தியாசமுமின்றி, ஒரே அளவில்லாத சுபாவம், ஒரே அளவில்லாத இலட்சணம், ஒரே அளவில்லாத வஸ்துவாய்த்தான் இருக்கிறதென்பதை நாம் ஒருபோதும் மறந்து விடலாகாது.