இரண்டாம் தேவ இலட்சணம்

1. இரண்டாம் தேவ இலட்சணத்தைச் சொல்லு.

“சர்வேசுரன் துவக்கமும் முடிவும் இல்லாம லிருக்கிறார்.” 


2. எந்தக் காலத்திலாகிலும், உலகம் இல்லாமல் இருந்த துண்டோ?

உலகம் சர்வேசுரனால் உண்டாக்கப்படுகிறதற்கு முன் இருந்ததில்லை.


3. உலகம் எப்போதும் இருக்குமோ?

உலகம் ஒருநாள் முடிந்துபோகும்.


4. எந்தக் காலத்திலாகிலும் சர்வேசுரன் இல்லாமல் இருந்த துண்டோ?

எக்காலத்திலும் சர்வேசுரன் இல்லாதிருந்ததில்லை.  அவர் எப்போதும் இருந்தார்.


5. உலகம் முடிந்தபின் சர்வேசுரனும் மறைந்து விடுவாரோ?

சர்வேசுரன் உலகம் உண்டாவதற்கு முன் இருந்தார்.  அப்படியே உலகம் ஒழிந்து போன பின்னும், சர்வேசுரன் இருப்பாரேயன்றி உலகத்துடன் மறைந்துபோக மாட்டார்.


6. சர்வேசுரன் எத்தனை காலமட்டும் சீவித்திருப்பார்?

அவர் எப்படி துவக்கமின்றி இருக்கிறாரோ, அப்படியே முடிவுமின்றி இருப்பார். அவர் ஒருக்காலும் இறந்துபோக மாட்டார்.  எப்போதைக்கும் இருப்பார்.


7. ஏன் சர்வேசுரனுக்குத் துவக்கமாவது முடிவாவது கிடையாது?

சர்வேசுரனுக்குத் துவக்கமாவது முடிவாவது இருக்குமாகில். அவருக்குப் பிறப்புக் கொடுத்த காரண கர்த்தரும், அவரிடத்தில் மாற்றமும் உண்டென்று சொல்ல வேண்டியிருக்கும்.  சர்வேசுரன் தாமாயிருக்கிறபடியால், அப்பேர்ப்பட்ட காரண கர்த்தர் அவருக்கு இல்லை.  அவர் தமது சுபாவத்தில் சகல நன்மைத் தனங்களையும் கொண்டிருப்பதால் மாற்றமாகிய முடிவு அவருக்கு இருக்க முடியாது.


8. சர்வேசுரனுக்குத் துவக்கமாவது முடிவாவது இல்லாதிருக்க, அவர் எப்படியிருக்கிறார்?

நித்தியராயிருக்கிறார்.


9. நித்தியம் என்றால் என்ன?

ஊழியுள்ள காலம், அல்லது எக்காலமும் என்று அர்த்தமாம்.


10. சர்வேசுரன் எக்காலத்திலும் இருந்தால், பெரிய கிழவனாயிருப்பாரோ?

வருஷம் என்பது மனிதனுடைய சீவியத்துக்குரிய ஒரு அளவு.  ஆதலால் ஒருவனுக்கு இருபது, முப்பது, நாற்பது வயது என்று சொல்லுகிறோம்.  நித்தியத்திலோவென்றால் காலத்திற்குரிய தொடர்ச்சி, மாற்றங்கள், வித்தியாசங்கள், முதலியவை இல்லை.  அதில் இறந்த காலமில்லை. சர்வேசுரனுக்குச் சரீரம் இல்லாதபடியாலும், அவர் நித்தியராயிருக்கிறபடியாலும், நம்மைப் போல் அவருக்கு வயது நாளுக்குநாள் அதிகரிக்கிறதில்லை.


11. அப்படியானால் சர்வேசுரனுடைய நிலையைப் பற்றிய சரியான உண்மை என்ன?

அவர் எப்போதும் இருக்கிறார் என்பதே சரியான உண்மை.


12. சர்வேசுரனுக்கு வயது இல்லாதிருக்க, ஏன் பிதாவாகிய சர்வேசுரன் பெரிய கிழவனாகப் படங்களில் எழுதப்பட்டிருக்கிறார்?

பிதாவாகிய சர்வேசுரன் நித்திய காலமாயிருக்கிறார் என்று நமக்குக் காட்டும்படிதான்.


13. சர்வேசுரன் தவிர வேறு எந்த வஸ்து அநாதியாயிருக்கிறது?

சர்வேசுரன் ஒருவர் தவிர, மற்ற வஸ்துக்களுக்கு துவக்கமுண்டு.