சிருஷ்டிப்பில் தீமை நுழைதல்

ஆனால் சர்வேசுரன் நித்தியத்தில் இருந்தே, தமது புறச் செயல்பாடாகிய சிருஷ்டிப்பின் திட்டத்தில் நுழையக்கூடிய ஒரு புதிய காரியத்தை முன்னறிந்திருந்தார். இந்தப் புதிய காரியம் மனிதர்களின் சுயாதீன சித்தத்தைத் தன் ஆதாரமாகக் கொண்டிருந்தது. 

ஒருவேளை கடவுள் மனிதர்களைச் சுதந்திர சித்தமில்லாதவர்களாக, அதாவது தங்கள் சொந்த விருப்பத்தின்படி நன்மை அல்லது தீமையைத் தேர்ந்துகொள்ளக்கூடியவர்களாகப் படைக்கவில்லை என்றால், தீமைக்கு உட்பட அவர்கள் அனுமதிக்கப்படாதிருந்தார்கள் என்றால், தங்கள் புண்ணிய வாழ்வால் பரலோகத்தை அடைந்துகொள்ள உள்ளபடி அவர்கள் தகுதியற்றவர்களாகவே இருந்திருப்பார்கள். 

கடவுள் அவர்களைப் பொறுத்த வரை ஒரு சர்வாதிகாரியாக இருந்திருப்பார். நன்மை அவர்கள் மீது திணிக்கப்பட்டதாக இருந்திருக்கும். ஆனால் மனிதன் சுதந்திர சித்தத்தோடு தீமையை விலக்கி, நன்மைத்தனமாகிய தம்மைத் தேர்ந்துகொண்டு தம்மை அறிந்து, சிநேகித்து, சேவிக்க வேண்டுமென்றும், அதனால் மோட்சத்தை அவன் அடைந்துகொள்ள வேண்டும் என்பதும் கடவுளின் விருப்பமாக இருந்தது.

ஆனால் மனிதனின் சுயாதீன சித்தம் நன்மையிலிருந்து தன்னைப் பிரித்துக்கொண்டு, தீமையைப் பின்செல்ல வல்லதாக இருந்தது. மனிதனைப் பொறுத்த வரை, இது மனித சுபாவத்தைக் கடவுளிடம் இருந்து துண்டித்துப் பிரித்து, சுபாவத்திற்கு மேலான சகல கொடைகளையும் அவர்களிடமிருந்து அகற்றி, சுபாவத்தையும் அதன் சத்துவங்களையும் மிக ஆழமாகக் காயப்படுத்த வல்லதாக இருக்கும்.

சர்வேசுரன் தீமையாகிய இந்தப் புதிய காரியத்தை முன்னறிந்திருந்தார். தமது சர்வ வல்லபத்தில், தீமை என்பது இல்லாமல் செய்திருக்கவும், அதைச் செயல்படாமல் முடக்கியிருக்கவும் அவரால் முடியும். ஆனால் தமது வல்லமையைக் கொண்டு தலையிடுவதற்கு முன் அவர் தமது ஞானத்தோடு கலந்தாலோசித்தார். அப்போது, இந்தப் புதிய காரியத்தை முழுமையாகச் செயல்பட அனுமதிப்பதன் மூலம் தமது சிருஷ்டிப்பின் நோக்கம் அளவற்ற விதமாக, இன்னும் அதிக நன்றாக நிறைவேறும் என்று அவர் கண்டார். 

தமது அளவற்ற நன்மைத்தனத்தை வெளிப்படுத்துவதும், படைப்புகளுக்கு அதைத் தருவதுமே அந்த நோக்கமாகும். மேலும் மனிதர்கள் தங்கள் தகுதியை எண்பிப்பதற்கு அது அவசியம் என்றும் அவர் உணர்ந்திருந்தார். ஆகவே தீமையாகிய இந்தப் புதிய காரியம் தமது படைப்புத் திட்டத்தில் நுழைய அனுமதிப்பது என்று அவர் தீர்மானித்தார்.

மனிதர்கள் கடவுளின் பேரின்பத்தில் பங்குபெற்று, மூன்று தேவ ஆட்களோடு ஒரே குடும்பத்தை உருவாக்கும்படியாக, தமது தேவ சுபாவத்தில் தமது திருச்சுதனின் மனிதாவதாரத்தின் வழியாகப் பங்கெடுக்கும்படி அவர் அவர்களை அழைக்கிறார். இதை விட அதிக அழகானதும், அதியற்புதமானதும் வேறு எது இருக்க முடியும்? ஆனால் இத்திட்டத்தின் முழு மகத்துவத்தையும், அழகையும், இணக்க நிலையையும் அழிக்கும்படி தீமை வந்தது.

சரீர இச்சையே நன்மை தீமை அறியும் மரத்தின் கனி

எனவே மனிதன் தன் சுயாதீன சித்தத்தின்படி தீமையைப் புறக்கணித்து, நன்மையைத் தேர்ந்து கொள்ளும்படியாக, தீமையை அறிந்துகொள்ளும் வாய்ப்பை மனிதனுக்குக் கடவுள் அனுமதிக்கிறார். நன்மை தீமை அறியும் மரம் இவ்வாறு தீமை அறியப்படுவதற்கான வாய்ப்பைக் குறிக்கிறது. 

இதைக் கடவுள் அனுமதித்தது மனிதன் தீமை செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக, தீமையை அடியோடு மறுத்துத் தள்ளி, நன்மைத்தனமாகிய தம்மை மட்டும் அவன் ஏற்றுக்கொண்டு, இவ்வாறு தம் மீதுள்ள அன்பை அவன் எண்பிக்க வேண்டும் என்பதற்காகவே. 

இந்த அனுமதியை சாத்தான் பயன்படுத்திக்கொண்டான். புதிய காரியங்களை அறிய ஏவாளுக்கு இருந்த வினோதப் பிரியத்தை அறிந்தவனாக, அவன் அவளுடைய கண்களுக்கு சரீர இச்சையிலுள்ள அசுத்த இன்பத்தை அறிமுகப்படுத்தினான். 

அந்த இன்பத்தின் மூலம் தங்கள் சந்ததியைத் தாங்களே உருவாக்குவதன் மூலம் மனிதர்களும் கடவுளைப் போல் ஆக முடியும் என்று பொய்க்குத் தகப்பனானவன் ஏவாளை வஞ்சித்தான். 

இந்தத் தீமைக்குச் சம்மதிப்பது ஏவாளுக்கு எளிதாக இருந்திருக்க முடியாது. ஏனெனில் அவள் உத்தம தேவசிநேகத்தின் மூலம் கடவுளோடு இணைக்கப்பட்டிருந்தாள். பரிசுத்தமும் பாக்கியமுமான அந்தஸ்தில் தேவ இஷ்டப்பிரசாதமாகிய தேவ உயிரால் நிறைந்திருந்தாள். ஆகவே தீமைக்குச் சம்மதிக்க அவள் தன் ஆத்துமத்தோடு நிச்சயமாகப் போராட வேண்டியவளாகவே இருந்திருப்பாள். 

ஆனால் அவள் கடவுளுக்கு மேலாகத் தீமையை ஏற்றுக்கொள்ளத் தீர்மானித்தாள். ஏனெனில் அசுத்த இச்சையாகிய “அந்த மரத்தின் கனி புசிப்பதற்கு நல்லதென்றும் பார்வைக்கு நேர்த்தியானதென்றும், அதை நோக்கினால் கண்குளிரும் என்றும் கண்டுணர்ந்ததினாலே அவள் அந்தக் கனியைப் பறித்துத் தானும் புசித்தாள், தன் கணவனுக்கும் கொடுத்தாள், அவனும் அதை வாங்கிப் புசித்தான்” (ஆதி.3:6). 

ஏவாள் கடவுளின் எச்சரிக்கையை மறந்தாள். “கனியைத் தின்ற நாளிலே சாகவே சாவீர்கள்” என்ற அவரது வார்த்தையை விசுவசிக்க மறுத்தாள். “நீங்கள் எந்நேரத்தில் அக்கனியைப் புசிப்பீர்களோ, அந்நேரத்திலே உங்கள் கண்கள் திறக்கப்படுவதினால் நீங்கள் தேவர்கள் போலாகி நன்மையும் தின்மையும் அறிந்துகொள்வீர்கள்” (ஆதி.3:5) என்ற பசாசின் ஏமாற்று வார்த்தைகளை நம்பினாள். 

பேராசை, கீழ்ப்படியாமை என்னும் பெரும் பாவங்களைத் தான் கட்டிக்கொண்டதோடு, தன் கணவனையும் இச்சையின் பாவத்தினுள் இழுத்தாள். அவனும் தவறிப்போகச்செய்து, மனுக்குலத்தின் பாவத்தை முழுமைப்படுத்தினாள்.

“உடனே அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டன, தாங்கள் நிர்வாணிகள் என்று கண்டறிந்தார்கள்” (ஆதி.3:7) என்னும் தேவ வாக்கியமும் அவர்களுடைய பாவங்கள் சரீர இச்சையின் பாவமே என்பதை எண்பிக்கிறது. 

தேவசிநேகத்தை மறுதலித்து, சரீர இன்பத்தைத் தேர்ந்துகொண்டதால், தங்கள் சிருஷ்டிப்பின் மாசற்றதனத்தை, தங்களுடைய பரிசுத்த, பாக்கிய அந்தஸ்தை இழந்து போனார்கள். 

தின்மையை அறியாத கபடற்ற குழந்தைத்தனம் அவர்களிடமிருந்து அகன்றுபோக, அவர்களுடைய கண்களை இச்சையாகிய அருவருப்புக்குரிய நாசம் குடியேறியிருந்தது. ஆகையால் அவர்கள் தாங்கள் நிர்வாணமாயிருந்ததை உணர்ந்தார்கள். 

ஆதிப் பெற்றோரைச் சீரழித்து, அவர்களுடைய சந்ததி என்ற முறையில் நம் உற்பவத்தில் நம் ஆத்துமத்தைத் தீண்டி, நம்மைத் தீமையின் பிள்ளைகளாக்குகிற இந்தப் பாவத்தையே நாம் ஜென்மப் பாவம் என்கிறோம்.