மனிதன் பாவத்தில் விழுந்ததும் மனித இரட்சணியமும்

ஆக சரீரமில்லாத சம்மனசுக்களையும், ஆத்துமமும் சரீரமும் உள்ள மனிதர்களையும் எந்த மாசு மறுவுமற்றவர்களாகப் படைத்து, தாமே மனித சுபாவத்தை ஏற்றுக்கொண்டு, பாவமற்ற மனிதர்களில் மத்தியில் தாமும் ஒரு மனிதராக ஒரு கன்னிகையிடமிருந்து பிறந்து, கடவுளும் மனிதனுமாகக் கடவுளுக்குத் தகுதியுள்ள ஓர் ஆராதனையையும், துதிபுகழ்ச்சியையும் அவருக்குச் செலுத்துவதும், இப்போது “தம் சொந்த இனமாக இருக்கிற” மனுக்குலத்தைத் தம்முடைய தெய்வீகத்தில் பங்குபெறச் செய்வதன் மூலம் அவர்களும் கடவுளுக்குத் தகுதியுள்ள ஆராதனை, மகிமை, துதிபுகழ்ச்சியைச் செலுத்தச் செய்வதுமே தேவ சுதனானவரின் மனித சுபாவத்தின் முதல் நோக்கமாக இருந்தது.

மனிதர்களின் மாசற்ற கன்னிமைப் பிறப்பு

இவ்வாறு, தேவ திட்டத்தின்படி, கடவுளின் ஏக சுதன் பாவ மாசற்றதாக இருக்கும் மனுக்குலத்தின் மத்தியில் வந்து பிறந்து, மனிதர்களைத் தேவ சுபாவத்திற்கு உயர்த்துவதைத் தம் நோக்கமாகக் கொண்டிருந்தார். 

இதற்காக மனிதர்கள் எந்த விதமான அசுத்த உறவின் வழியாகவும் அன்றி, முழுக்க முழுக்க இஸ்பிரீத்துசாந்துவானவரின் வல்லமையால், ஆத்துமத்திலும் சரீரத்திலும் கன்னியராக இருக்கிற தாய்மாரிடம் இருந்து பிறந்து, பாவ மாசு அணுகாதவர்களாக, இவ்வுலகிலேயே சகல பரிசுத்தமான இன்பங்களையும் அனுபவித்தபடி எந்த நோய்நொடியோ, துன்பங்களோ இன்றி, கடவுளால் ஒளிர்விக்கப்பட்ட புத்தியோடும், கடவுளின் திருச்சித்தத்தோடு இரண்டறக் கலந்திருக்கும் சித்தத்தோடும், எந்தத் திரை மறைவு ஒளிவுமற்ற அறிவோடும் சிறிது காலம் (ஆதாம் 910 வருடங்கள் வாழ்ந்தார்!) இவ்வுலகில் வாழ்ந்த பின், மரணத்தைச் சுவை பாராமலே நித்திய மோட்சத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்படியாக உலகில் படைக்கப்பட இருந்தார்கள். 

இது அநேகருக்குப் புதிதாகத் தோன்றலாம். ஆனால் ஒரு பரம இரகசியமான காரியத்தை ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கு இதில் ஆச்சரியம் ஏதும் ஏற்படாது. 

ஆதியிலே மனிதப் பிறப்புக்கென கடவுள் ஒரு திட்டத்தை ஏற்படுத்துவார் என்றால், அதே திட்டத்தைத்தான் அவர் தாம் மனிதனாகும்போது பயன்படுத்துவார் என்பது விவாதங்களுக்கு அப்பாற்பட்ட உண்மையாக இருக்கிறது. 

தேவனும் மனிதனுமான நம் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதர் தமது பிதாவின் சித்தப்படியே அமல உற்பவமும், அமல உற்பவியுமான மகா பரிசுத்த கன்னிகையிடம் இஸ்பிரீத்துசாந்துவின் வல்லமையாலும், சர்வேசுரனுடைய வல்லமையின் நிழலிடுதலாலும் கர்ப்பமாய் உற்பவித்துப் பிறந்தார் என்று அப்போஸ்தலர்கள் தங்கள் விசுவாசப் பிரமாணத்தின் மூலம் நமக்குக் கற்பிக்கிறார்கள். 

இது உன்னதப் பரம இரகசிய வேத சத்தியம் என்று நாம் முழு மனதோடு ஏற்று விசுவசிக்கிறோம்.  அப்படியிருக்க, மற்ற மனிதர்களின் பிறப்புக்கு, கடவுள் அளவற்ற விதமாக நேசிக்கிற மிகப் பரிசுத்த கன்னிமையை ஆண் பெண்ணாகிய இருபாலாரிடமிருந்தும் அகற்றுகிற அசுத்த உறவையும், மனித வல்லமையையும் அவர் கருவிகளாக ஏற்படுத்தியிருப்பார் என்று யார் சொல்லத் துணியக்கூடும்?

ஆம் என் சகோதரரே! நீங்களும் நானும், இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் இஸ்பிரீத்துசாந்துவானவரின் திவ்ய வல்லமையால், பாவமே அறியாத கன்னியராகிய பெண்களிடமிருந்து பாவ மாசற்றவர்களாக உற்பவித்துப் பிறப்பதும், பாவ மாசற்றவர்களாகவே வாழ்ந்து, மரணமடையாமல் பரலோகம் செல்வதுமே நம் ஒரே தந்தையாக இருக்க விரும்பிய நம்முடைய நேச பிதாவானவரின் திருச் சித்தமாக இருந்தது. 

ஆதியாகமத்தின் முதல் இரண்டு அதிகாரங்களிலும் இதற்கான சான்றுகள் நிறைய இருக்கின்றன. “கடவுள் தம்முடைய சாயலாக மனிதனைப் படைத்தார். தேவ சாயலாகவே அவனை சிருஷ்டித்தார்” (ஆதி.1:27) என்ற வேதவாக்கியம் இதன் முதலாவது நிரூபணமாக இருக்கிறது. 

மாசு மறுவற்ற பரிசுத்ததனமும், நித்தியத்திற்கும் அழியாமையும்தான் கடவுளின் சாயலாக இருக்கின்றன. இந்தச் சாயலைக் கொண்டுதான் கடவுளின் வல்லமையால் மனிதன் சிருஷ்டிக்கப்பட்டான். 

ஆதாமின் பாவத்திற்குப் பிறகு மனிதப் பிறப்புக்குக் காரணமாகி விட்ட சரீர அசுத்த உறவோ கடவுளின் பார்வையில் “அக்கிரமமும் பாவமுமாக” இருக்கிறது. இதைப் பற்றியே சங்கீதக்காரராகிய தாவீதரசர்: “நானோ அக்கிரமத்தில் ஜென்மித்தேன்;, என் தாயார் பாவத்தில் என்னைக் கர்ப்பந்தரித்தாள்” (சங்.50:6) என்கிறார். 

அப்படியிருக்க, இந்த அக்கிரமத்திலும், பாவத்திலும் மனிதர்கள் ‘கர்ப்பந்தரிக்கப்படுவது’ எப்படி கடவுளின் திருச்சித்தமாக இருந்திருக்க முடியும்? கடவுள் பாவத்தை சித்தங்கொள்ள முடியும் என்று சொல்வது அளவற்ற தேவநிந்தையும், தேவதூஷணமுமாக இருக்கிறது! 

இதுவுமன்றி, பேரின்பத்தின் உறைவிடமாயிருப்பவரும், கடவுளில் ஆத்துமம் கொள்ளும் ஆழ்ந்த பரவச நிலையை மனித சிருஷ்டிப்பின் ஆதாரமாக ஏற்படுத்தியவருமான கடவுள், சிற்றின்பத்தையும், சரீரம் கொள்ளும் கீழ்த்தரமான இச்சையின் இன்பத்தையும் மனிதப் பிறப்புக்கு ஆதாரமாக ஏற்படுத்தினார் என்று சொல்லத் துணிபவன் யார்?

அடுத்து, “ஆதாமும் அவன் துணைவியுமாகிய இருவரும் நிர்வாணமாயிருந்தார்கள். இருந்தாலும் அவர்கள் வெட்கம் என்பதை அறியாதிருந்தார்கள்” (ஆதி.2:25) என்ற வேத வாக்கியமும் மேற்கூறிய சத்தியத்தை எண்பிக்கிறது. 

ஆதாமும் ஏவாளும் நிர்வாணிகளாயிருந்தும் வெட்கத்தை அறியாதிருந்தார்கள் என்றால் அதன் அர்த்தமென்ன? நிர்வாணத்திலும் வெட்கமறியாதிருப்பவர்கள் யார்? குழந்தைகள்தானே? ஏனெனில் குழந்தைகளின் கண்களிலும், மனதிலும் அசுத்தமில்லை. அவற்றில் மாசற்றதனமே அரசாள்கிறது. 

ஆதாமும் ஏவாளும் தங்கள் சரீரத்தின் எந்த ஒரு தூண்டுதலுக்கும் அளவற்ற விதமாக மேலே உயர்த்தப்பட்டிருந்தார்கள். தீமையின் தூண்டுதல் தன்னைத் தாக்கும் வரை அவர்களுடைய உடல்கள் தங்கள் எஜமானராகிய கடவுளுக்கும், தத்தம் ஆத்துமத்திற்கும் பரிபூரண மகிழ்ச்சியோடு பணிந்திருந்தன. 

அவர்கள் இருவரும் தேவசிநேகத்தின் பரிபூரண பேரின்பக் கடலில் அமிழ்த்தப்பட்டு, கடவுளோடு உரையாடுபவர்களாகவும், அவருடைய அன்பை அனுபவித்து மகிழ்பவர்களாகவும், அவருக்குத் தங்கள் முழு அன்பைத் தந்து மகிழ்பவர்களாகவும் இருந்தார்கள். 

பாவத்தைப் பொறுத்த வரை, அதை சற்றும் அறியாதவர்களாகவும், அதிலிருந்து தொலைதூரத்திற்கு அகற்றப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். இந்நிலையில் “நீங்கள் பெருகிப் பலுகிப் பூமியில் நிறைந்து அதனைக் கீழ்ப்படுத்துங்கள்” என்ற ஆண்டவரின் வார்த்தைகள் சரீர இன்பத்தால் வரும் மனித இனப் பெருக்கத்தைக் குறிப்பதாக யார் தேவதூஷணம் சொல்ல முடியும்? 

மேலும் ஆதாம் ஏவாள் என்னும் இரு “குழந்தைகளிடம்” இச்சை உணர்வு இருந்திருக்க முடியும் என்று யார் கூற முடியும்? அவர்களோ தீமையை அறியச் செய்யும் மரத்தின் கனியை இன்னும் சுவைக்காதவர்களாக, தங்கள் ஆன்மாவில் குழந்தைகளாகவே இருந்தார்கள்.

எனவே ஆண் துணையின்றிக் கடவுளின் வல்லமையால், கன்னியரான பெண்களிடமிருந்து பிறக்கும் மனிதர்கள் மத்தியில் வந்து பிறந்து, கடவுளுக்கும் தாமும் அவர்களும் தகுதியுள்ள ஆராதனை மகிமை செலுத்தச் செய்வதே தேவ சுதனுடைய மனிதாவதாரத்தின் நோக்கமாக இருந்தது.

இவ்வாறு தேவ சுதன் மனித சுபாவத்தில் சுருக்கப்பட்டு, ஆறடி சரீரம் ஒன்றினுள் சிறைப்படுத்தப் பட்டு, அதன் மூலம் சிருஷ்டிப்பை ஓர் அளவற்ற மகத்துவத்திற்கு, மகிமைப்படுத்தப்படுதலுக்கும் அர்ச்சிப்பிற்கும் உயர்த்த அவர் சித்தம் கொண்டார். 

படைக்கப்பட்ட மனிதர்களைத் தேவ மனிதனோடு ஒன்றிக்கும்படியாக, அவர் அந்த அர்ச்சிப்பையும், மகிமைப்படுத்தப்படுதலையும் விரிவுபடுத்த சித்தம் கொண்டார். 

இவ்வாறு படைப்பு முழுவதும் அர்ச்சிக்கப்பட்டு, மகிமைப்படுத்தப்பட்டு, வார்த்தையானவருக்குள் அடங்கியிருக்க வேண்டுமென்று அவர் சித்தம் கொண்டார். 

இவ்வாறு, இந்த அர்ச்சிப்பினாலும், மகிமைப்படுத்தப்படுவதாலும் வார்த்தையானவரோடு ஒன்றிக்கப்பட்ட, படைக்கப்பட்ட மனிதர்கள் கடவுளுக்கு மெய்யாகவே தகுதியுள்ள ஒரு பாடலை அவரை நோக்கி எழுப்ப தேவ உதவியைப் பெற்றுக் கொண்டார்கள்.