ஜென்மப் பாவத்தின் விளைவுகள்

ஆதாமையும் ஏவாளையும் கடவுளின் சம்மனசானவர் இன்பவனத்திலிருந்து துரத்தியபோது அவர்களுக்கு நிகழ்ந்த துர்ப்பாக்கிய நிலை, தீமைக்குச் சார்பாயிருக்கும் மனித மனநிலையைத் தத்ரூபமாக வெளிப்படுத்துவதாக இருக்கிறது. 

இன்ப வனத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது, அவர்கள் நண்பகலின் சூரிய ஒளியிலிருந்து தொட்டு உணரக்கூடிய இருளுக்குள் தள்ளப்பட்டதாக அவர்கள் உணர்ந்தார்கள். அவர்களுடைய இருதயங்கள் அவர்களுக்குள் அமிழ்ந்து போயின. அவை பாழ்நிலையிலும், கைவிடப்பட்ட நிலையிலும் மூழ்கி அவற்றில் ஊறிப் போயின. 

எங்கே போவது, என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. தாங்கள் சொந்தமாகக் கொண்டிருந்த சமாதானமும் மகிழ்ச்சியும் நிரம்பிய வாழ்வை அவர்கள் தொலைத்து விட்டார்கள். இனி அது அவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை.

தெய்வீக சத்தியங்களின் காரியத்திலும் அவர்களுடைய மனநிலை இப்படித்தான் இருந்தது. இன்ப வனத்தில் இருந்த வரைக்கும் வரப்பிரசாதத்தின் உயிருள்ள மகிமையொளி அவர்கள் மீது சுடர்வீசிக் கொண்டிருந்தது. பாவத்திற்கு முன்பு வரை, தெய்வீக அறிவின் சூரிய ஒளி அவர்களது அறிவின்மீது தங்கியிருந்தது. 

தெய்வீக சத்தியங்களை அனுபவித்துத் திளைக்கும் மகிழ்ச்சியையும், அவற்றின் மீதான ஆவலையும் அவர்கள் எப்போதும் தெளிவாக உணர்ந்திருந்தார்கள். அது அவர்களுடைய ஆத்துமததில் தங்கியிருந்த ஒளி வெள்ளமாக இருந்தது. அது அவர்களை நிச்சயமாகவும், பாதுகாப்பாகவும் கடவுளிடம் நடத்திச் சென்றது. 

இப்போதோ, இவை அனைத்தையும் அவர்கள் இழந்து விட்டார்கள். இருளிலும் மரண நிழலிலும் தடவித் திரியும் குருடர்களாகத் தாங்கள் இருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.

அவர்களுடைய சித்தத்திற்கு நிகழ்ந்ததும் இதுவேதான். இந்த சத்துவத்தை எந்த இடையூறும் தடையுமின்றி சுதந்திரமாகப் பயன்படுத்தும் பாக்கியத்தை அவர்கள் இழந்து போனார்கள். இன்ப வனத்தில் இருந்த வரை, தேவ சித்தத்திற்கு முற்றிலுமாகப் பணிந்திருந்த அவர்களுடைய சித்தம் சரியானதையும், நீதியானதையும் நோக்கி மிக எளிதாக அவர்களை நடத்திச் சென்றது. 

புண்ணியம் செய்வது அவர்களுக்கு இயல்பாகவும், இனிமையானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் இருந்தது. ஆனால் அவர்களுடைய பாவத்திற்குப் பிறகு புண்ணியத்தை அனுசரிப்பதற்கு ஒரு முயற்சி, ஒரு போராட்டம், அவர்களுக்குத் தேவைப்பட்டது. 

சத்தியத்தைப் பற்றிய தெளிவான உணர்வையும், சந்தேகத்திற்கு இடம் தராத சித்தத்தின் வழிகாட்டுதலையும், மிக எளிதான, சுலபமான புண்ணிய அனுசரிப்பையும் அவர்கள் இழந்து போனது மட்டுமல்ல, மாறாக, தங்கள் கீழான, உடல் சார்ந்த உணர்வுகளின்மீது தாங்கள் கொண்டிருந்த முழு வல்லமையையும், கட்டுப்பாட்டையும் இழந்துபோய்விட்டதையும் அவர்கள் கண்டார்கள். 

இது அவர்களை மிகக் கொடிய திகிலுக்கு உள்ளாக்கியது. இந்த அசுத்த உணர்வுகள் அசுர வல்லமையோடு அவர்களுக்கு எதிராக எழுந்தன. மிக அசுத்தமானவையும், அருவருப்பானவையும், அவர்களுடைய அறிவுக்கும், ஆன்ம உணர்வுக்கும் மிகவும் முரண்பட்டவையுமான காரியங்களை அவை அவர்களுக்குக் காட்டின. 

இப்போது இந்தக் காரியங்கள் தங்கள் அறிவை வசீகரிப்பதையும், இவையே மனிதனின் உண்மையான, ஒரே உண்மையான நன்மை என்று ஏற்றுக்கொள்ளும்படி தங்கள் அறிவை அவை வற்புறுத்துவதையும் கண்டு அவர்கள் நடுங்கினார்கள். இவற்றை ஏற்று அரவணைத்துக்கொள்ளும்படி தங்கள் சித்தமும் அவற்றை நோக்கி இழுக்கப்படுவதை அவர்கள் உணர்ந்து கலங்கினார்கள். 

இந்தத் தீமையை எதிர்த்து நிற்கத் தங்களிடம் பலமில்லை என்பதையும் அவர்கள் கண்டார்கள். இருள் அவர்களுடைய மனங்களை மூடி மறைத்தது. புலனின்பம் தரும் பொருட்களின் மீதான ஒரு வலிமையான, துடிப்பான நாட்டம் சித்தத்தைத் தரம் தாழ்த்தியது. 

தங்கள் ஆத்தும சுபாவம் வெறும் மாம்ச நாட்டத்திற்கு வழிவிட்டு ஒதுங்கி விட்டதையும், உணரக்கூடியதற்கு மேலான எதையும் நாடத் தங்களால் இயலாதிருப்பதையும் அவர்கள் உணர்ந்தார்கள்.

எல்லாம் ஏறக்குறைய முடிந்து போயிற்று. இனி மனுக்குலம் இரட்சிக்கப்பட ஒரே ஒரு சாத்தியமான வழி இருந்தது. அது: ஒரு காணக்கூடிய கடவுள், ஒரு தேவ-மனிதன், ஓர் எம்மானுவேல் ஆவார். 

சரீரம் சார்ந்ததும், உணர்வு சார்ந்ததுமானதைத் தவிர வேறு எதையும் உணரவோ நேசிக்கவோ இயலாதவனாக மனிதன் இருந்தான். 

ஆகவே, தமது ஏக பேறானவரும், வார்த்தையானவரும், தமது அளவற்ற இலட்சணங்களின் அதே பொருண்மையுள்ள சாயலும், தாம் அனைத்தையும் யார் வழியாகப் படைத்தாரோ அந்த சர்வேசுரனுமாகிய தம்முடைய திருச்சுதன் மாம்சமாகிய பருப்பொருளைத் தம்மோடு இணைத்துக்கொண்டு, மனிதனாக அவதரிக்க வேண்டும் என்றும், மெய்யானதும், சந்தேகத்திற்கு இடம் தராததும், காணக்கூடியதும், தொட்டுணரக்கூடியதும், தயாள இரக்கமுள்ளதும், துன்பப்படக் கூடியதுமான அந்த மனுஷீகத்தைக் கொண்டு தமது தெய்வீக அறிவுக்கும், அன்புக்கும் மனிதனைக் கவர்ந்திழுக்க வேண்டும் என்றும் கடவுள் தீர்மானித்தார்.

இவ்வாறு மனிதாவதாரத்தின் இரண்டாவது நோக்கம் உருவானது. அது கடவுளே மனிதனாகி, மனிதனுடைய பாவத்திற்காக கடவுளுக்குத் தகுதியுள்ள பரிகாரம் செய்து, மனிதன் இழந்துபோன தேவ உயிரையும், தேவசிநேக வரத்தையும், மோட்ச பாக்கியத்தையும் அவனுக்குப் பெற்றுத் தருவதே அந்த நோக்கம் ஆகும்.

ஆகவே, தேவ திருச்சுதனானவரின் மனிதாவதாரப் பரம இரகசியத்திற்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன என்று கண்டோம். 

1. கடவுளுக்குத் தகுதியுள்ள ஆராதனையையும், மகிமையையும், நேசத்தையும் செலுத்த வல்லவர்களாக மனிதர்களை ஆக்கும்படியாக, தாமே தேவ-மனிதனாகி, மனிதர்களைத் தம் தெய்வீகத்தோடு இணைத்துக்கொள்வது.

2. மனிதன் பாவம் செய்தபின், துன்பத்தின் மூலம் அவனுடைய பாவத்திற்குத் தகுதியுள்ள பரிகாரம் செய்யும்படியாக, அவர் தம்மைத் துன்பப்படக் கூடியவராக ஆக்கிக்கொள்வது. ஏனெனில் தேவ சுபாவம் அரூப சுபாவம் என்பதால், அதில் துன்புறக்கூடிய சடப்பொருள், அதாவது மனித சரீரம் என்பது இல்லை. எனவே கடவுள் துன்பப்பட இயலாதவராக இருக்கிறார். மனிதனுக்காகப் பாடுபடவும், தம்மைப் பலியாக்கவும், சாகவும் அவருக்கு மனித சுபாவம் அவசியம்.

ஆகவே, ஜென்மப் பாவத்திற்குப் பிறகு, மனிதாவதாரத் திட்டத்தில் கடவுளால் ஒரு புதிய மாற்றம் செய்யப்படுகிறது. இது வரை மகிழ்ச்சியும், சமாதானமும், நேசமும் நிறைந்ததாக இருந்த பரலோகப் பாதை இப்போது பரிகாரப் பாதையாக மாறுகிறது. மலர்கள் அடர்ந்த நறுமணம் மிக்க அந்தப் பாதை துன்பங்களாகிய முட்கள் நிறைந்த தவப் பாதையானது.