மனிதாவதாரப் பரம இரகசியத்தில் திவ்விய கன்னிகையின் பங்கு

தேவ சுதனின் மனிதாவதாரத்தைப் பற்றிய நம் கட்டுரைகளில், இந்த மனிதாவதாரத்திற்கான இரண்டு அடிப்படை நோக்கங்களையும் நாம் இங்கே நினைவுபடுத்திக்கொள்வோம். அவை:

1. கடவுளுக்குத் தகுதியுள்ள ஆராதனை செலுத்தும்படியாக, தேவ சுபாவத்தையும்;, கடவுளுக்கு ஆராதனை செலுத்தக் கூடியதாக இருக்கும்படி மனித சுபாவத்தையும் தம்முள் இணைத்துக் கொண்டுள்ள ஒரு தேவ-மனிதன் படைக்கப்படுவது. அந்த தேவ மனிதரோடு ஒன்றிக்கப்படும் ஒவ்வொரு மனிதனுடையவும் ஆராதனையும், துதியும், நன்றியறிந்த தோத்திரமும், நேசமும் அவர் வழியாகக் கடவுளுக்குத் தகுதியுள்ளவையாக ஆக்கப்படுவது. இந்த முறையில் மனிதர்கள் ஒவ்வொருவரும் அந்த தேவ மனிதர் வழியாக தெய்வீகத்திற்கு உயர்த்தப்படுவது.

2. ஆதிப் பெற்றோரின் வழியாகப் பசாசுக்கும், பாவத்திற்கும், அதன் விளைவுகளுக்கும் அடிமையாகி விட்ட மனுக்குலத்தை மீட்டு இரட்சிக்கும்படி தேவ சுதன் மனித சுபாவத்தை எடுத்துக் கொண்டு, மனுக்குலத்தின் பாவத்திற்குத் தகுதியுள்ள பரிகாரப் பலியை நிறைவேற்றி, மனிதனுக்கு இரட்சணியத்தைப் பெற்றுத் தருவது.

இந்த இரண்டு நோக்கங்களும் நிறைவேறுவதற்கு, தேவ சுதன் ஒரு மனிதனாக உலகில் அவதரிக்க வேண்டும். இதற்கு அவருக்கு ஒரு மனிதத் தாயின் உதவி இன்றியமையாததாக இருந்தது. 

சர்வேசுரன் சர்வ வல்லபராக இருப்பதால், தாமே நேரடியாக ஒரு முழு மனிதனாக இவ்வுலகிற்கு வந்து, இந்தப் பாவப் பரிகாரப் பலியை நிறைவேற்றியிருக்க முடியும் என்ற ஒரு சிந்தனையற்ற வாதம் சிலரால் முன்வைக்கப்படுகிறது. இது எவ்வளவு தவறானது என்பதை நாம் பின்வருமாறு விளக்குவோம்:

ஆதாமின் காரியத்தில் சர்வேசுரன் செய்தது போல, அவர் தம் திருச்சுதனுக்காகவும் ஒரு சரீரத்தைப் படைத்து, அதனோடு ஒரு மனித ஆத்துமத்தைச் சேர்த்திருக்க முடியும். என்றாலும், அப்படி அவர் செய்திருந்தார் என்றால், ஆதாமின் சந்ததியிலிருந்து வந்த ஒரு மனிதனையல்லாமல், ஒரு புதிய மனுஷீகத்தையே அவர் உலகிற்குத் தந்திருப்பார். 

இந்தப் புதிய மனுஷீகத்தின் உண்மைத் தன்மை மற்றும் நிஜத்தன்மை பற்றிய அநேக சந்தேகங்கள் மனிதர்களால், குறிப்பாக, யூதர்களால் எழுப்பப் பட்டிருக்கும். அவர்கள் கிறீஸ்துநாதருடைய தெய்வீகத்தை ஏற்க மறுத்தது போலவே, அவருடைய மனுஷீகத்தையும் கண்டிப்பாக மறுதலித்திருப்பார்கள். அதில் ஒரு வித நியாயமும் இருந்திருக்கும். 

உன்னதமான பாவப் பரிகாரப் பலி நிறைவேற்றப்பட்டு, மனிதன் தேவ திரு இரத்தத்தால் இரட்சிக்கப்பட்டு, தனது பரிசுத்தமும் பாக்கியமுமான ஆதி அந்தஸ்தில் அவன் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்ட பிறகும் கூட, கிறீஸ்துநாதருடைய தெய்வீகத்தையும், மனுஷீகத்தையும் கண்மூடித்தனமாக மறுதலித்த அநேக தப்பறைகளை இன்று நாம் அறிந்திருக்கிறோம். 

இந்நிலையில், ஆதாமின் சந்ததியில் தோன்றாத ஒரு இரட்சகர் கடவுளால் உலகிற்குத் தரப்பட்டிருப்பார் என்றால், ஏராளமானவர்களுடைய அவிசுவாசத்திற்கு அவரே காரணமாக இருந்திருப்பார்.

ஆனால் தேவ திருச்சுதன் ஆதாமின் சந்ததியாகிய ஒரு பெண்ணால் கருத்தரிக்கப்பட்டுப் பிறந்ததன் மூலம், அவர் நம் சொந்த மனித சுபாவத்தைக் கொண்டவராக இருப்பது மட்டுமின்றி, அந்த மனுஷீகத்தைப் பற்றி எழக்கூடிய எந்த விதமான சந்தேகத்தையும் அகற்றி விடுபவராக இருக்கிறார். 

இவ்வாறு தேவ சுதனின் மனிதாவதாரம் வெறும் கற்பனை மட்டுமே, அல்லது அது சுபாவத்திற்கு அப்பாற்பட்டது என்று வாதிடுவதற்கு சாத்தியமே இல்லாமல் போனது. 

மேலும் தம்முடைய மனித சுபாவத்தை எண்பிக்கும்படி நம் ஆண்டவர் சுவிசேஷங்கள் முழுவதிலும் தம்மை உரிமையோடு மனுமகன் என்று அழைத்துக்கொள்வதையும், அப்பெயரை அவர் வலியுறுத்துவதையும் நாம் காண்கிறோம். 

அவர் மகா பரிசுத்த கன்னிமரியாயிடமிருந்து தாம் உற்பவித்துப் பிறந்ததைக் குறித்துக் காட்டுவதன் மூலம், தம்முடைய உண்மையான மனுஷீகத்திற்குத் தொடர்ந்து சாட்சியம் கூறுகிறார். 

அதே சமயத்தில், மரியாயின் மகா பரிசுத்த கன்னிமைக்குப் பங்கம் வராமல் இஸ்பிரீத்துசாந்துவானவரின் சுபாவத்திற்கு மேற்பட்ட ஒரு தெய்வீகச் செயலால் அவர் மரியாயில் உற்பவித்த சத்தியமானது, அவரது தெய்வீக ஆள்தன்மையையும், மகத்துவத்தையும் மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறது.