மனிதாவதாரத்தின் அற்புத விளைவுகள்

கடவுளைப் பொறுத்த வரை, மனிதாவதாரத்தின் முதன்மையான, உன்னதமான விளைவு என்னவெனில், இந்த பக்திக்கும், நேசத்திற்கும் உரியதாகிய பரம இரகசியத்தின் வழியாக, அவர் தம் சிருஷ்டிகளிடமிருந்து உண்மையாகவே தமக்குத் தகுதியுள்ள வழிபாட்டையும், மகிமையையும், நேசத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதேயாகும்.

மனிதனைப் பொறுத்த வரை மனிதாவதாரத்தின் விளைவுகள்

மனித அவதாரத்தில் நிகழ்ந்த தேவ-மனித ஒன்றிப்பு நமதாண்டவரின் மனித சுபாவத்தில் இரண்டு தனித்தனிக் கொடைகளைக் குறித்துக் காட்டுகிறது. இவற்றில் முதலாவது, சர்வேசுரனுடைய பரலோகக் காட்சி மற்றும் அவரைச் சொந்தமாகக் கொண்டிருத்தல் ஆகும். இதை ஒரே வார்த்தையில் மகிமைப் படுத்தப்படுதல் என்று நாம் அழைக்கலாம். 

மற்றொன்று தேவ இஷ்டப்பிரசாதம் அல்லது ஆத்துமத்தில் தெய்வீக உயிரைக் கொண்டிருத்தல் என்பது ஆகும். இது தன் இயல்பில் மகிமைப்படுத்தப்படுதலில் இருந்து வேறுபட்டதல்ல, மாறாக, அதற்கு ஒப்பானதுதான். என்றாலும், இவற்றில் ஒன்று முழுமை பெற்றதாக, உத்தமமானதாக இருக்கிறது. இதுவே மனிதனின் இறுதிக்கதியாக இருக்கிறது. 

மற்றொன்று மனித சுபாவத்தில் முளைவிட்டு வளரக்கூடியது, அது மகிமைப்படுத்தப்படுதலை அடைவதற்கான வழியாக இருக்கிறது என்பதுதான் இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாடாகும். ஆனால் இந்த இரண்டுமே தேவ-மனித ஒன்றிப்பில்லாத சாதாரண மனித சிருஷ்டிக்குத் தெய்வீகம் தனிப்பட்ட முறையில் தரப்படுவதையே குறிக்கின்றன. 

இந்த இரண்டையும் இனி படைக்கப்பட இருக்கிற மனிதன், தேவ-மனிதரின் நிமித்தமாக, அவர் வழியாக மட்டுமே பெற்றுக்கொள்வான். இது மனிதனுக்கு, சுபாவத்திற்கு மேற்பட்டதும், சரீரம் சார்ந்த சிருஷ்டிப்பின் வட்டத்திற்குள் உள்ள சகல ஆற்றல்களுக்கும், வல்லமைகளுக்கும் மேலானதுமான ஒரு புதிய ஆற்றலையும், ஒரு புதிய வல்லமையையும் தருகிறது.

இந்தப் புதிய ஆற்றலும், புதிய வல்லமையும், புத்தி, நம்பிக்கை, நேசம் என்கிற, சுபாவத்திற்கு மேற்பட்ட மூன்று சத்துவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சுபாவத்திற்கு மேலான புத்தியானது, அளவற்ற புத்தியாக இருக்கிற தெய்வீகத்தோடு தனிப்பட்ட தொடர்பில் வைக்கப்படுகிறது.  

சுபாவத்திற்கு மேலான நம்பிக்கை, அளவற்ற உண்மைத் தன்மையையும், தனது வாக்குறுதிகளைத் தவறாமல் நிறைவேற்றுவதுமான தெய்வீகத்தோடு தனிப்பட்ட தொடர்பில் வைக்கப்படுகிறது. சுபாவத்திற்கு மேலான சித்தம் அளவற்ற நன்மைத்தனமாயிருக்கிற தெய்வீகத்தோடு தனிப்பட்ட தொடர்பில் வைக்கப்படுகிறது.

இந்தப் புதிய ஆற்றலும் வல்லமையும் முழு வளர்ச்சி பெற்று, தனது இறுதி முழுமையை – உத்தமதனத்தை – எட்டும்போது, அது பரலோக ஒளியையும், பரலோகத்தையுமே சொந்தமாகக் கொண்டிருத்தல் எனப்படுகிறது – அதுவே மகிமைப்படுத்தப்படுதல் அல்லது உத்தமதனத்தை அடைதல் ஆகிறது. 

நமதாண்டவரின் மனித சுபாவம், தேவ-மனித ஒன்றிப்பின் பலனாக, தொடக்கத்திலேயே அர்ச்சிப்பையும் மகிமைப்படுத்தப்படுதலையும் அவற்றின் பரிபூரண முழுமையில் சொந்தமாகக் கொண்டிருந்தது. எல்லா ஐக்கியங்களிலும் அதிக அந்நியோந்நியமான இந்த ஒன்றிப்பின் தன்மையைப் பற்றிச் சிந்திக்கும்போது இதை யாரும் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். 

இந்த ஒன்றிப்புக்கு மேலாக அளவுக்குட்பட்ட ஒரு சுபாவத்தை உயர்த்தக் கடவுளாலும் கூட முடியாது!!

கடவுள் மனிதாவதாரத்தைச் செயல்படுத்தத் தீர்மானித்திருக்கவில்லை என்றால், சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்கள்; அனைவரும் தங்கள் உச்சபட்ச உத்தமதனத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும், ஒரு சுபாவமான, இயல்பான முடிவையே அடைந்திருப்பார்கள். 

ஆனால் தமது அளவற்ற மகத்துவத்திற்குத் தகுதியுள்ள மகிமையைச் சிருஷ்டிகள் தமக்குச் செலுத்தும்படியாக, அந்தப் பரம இரகசியத்தை நியமம் செய்து, அதன் விளைவாக பொது சிருஷ்டியாகிய கிறீஸ்துநாதரை ஓர் அளவற்ற மகிமைக்கு உயர்த்தக் கடவுள் தீர்மானித்தவுடன், படைக்கப்பட்ட மனிதர்களைப் பொது சிருஷ்டிப்பாகிய தேவ மனிதனின் உயர்த்துதலில் பங்கேற்கச் செய்யவும், அவர்கள் மீது அர்ச்சிப்பையும் மகிமைப்படுத்தப்படுதலையும் பொழிவதன் மூலம் தம்மோடு அவர்கள் அனைவரையும் இணைத்துக்கொள்ளவும் கூட அவர் தீர்மானித்து விட்டார். 

இவ்வாறு படைக்கப்பட்ட மனித ஆட்களின் இறுதிக்கதி சுபாவத்திற்கு மேற்பட்டதாக ஆனது. அதாவது, அது பரலோக தேவ காட்சியிலும், கடவுளைச் சொந்தமாகக் கொண்டிருப்பதிலும் முழுமை அடைந்தது.

ஆகவே, சகோதரரே, கடவுளுக்குரிய, தகுதியான ஆராதனையும் மகிமையும் அவருக்குச் செலுத்தப்படுவதும், கிறீஸ்துநாதருடைய ஆராதனையோடும் மகிமையோடும் ஒன்றிக்கப்படுகிற மனிதர்களின் ஆராதனையும் மகிமையும் கடவுளுக்கு உகந்த. பிரியமுள்ள, தகுதியான ஆராதனையும் மகிமையுமாக ஆவதுமே மனித அவதாரத்தின் முதன்மையான, முக்கியமான நோக்கமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

அடுத்த கட்டுரையில், இரண்டாவதான ஒரு நோக்கம் எப்படி நுழைந்தது என்று பார்ப்போம்.