சீமோன் த மோன்போர்ட் - திருப்பலி

புகழ்பெற்ற போர்த் தளபதியும், வீரநாயகருமாகிய சீமோன் த மோன்போர்ட், ஒருமுறை மூரே பட்டணத்தில் எதிர்பாராத விதமாக, ஆரகான் அரசனின் தலைமையிலும், தூலுஸ் மாகாணப் பிரபு ரேமண்ட் என்பவனின் தலைமை யிலும் அணிவகுத்து வந்த 40000 வீரர்களைக் கொண்ட ஒரு பெரும்படையால் சுற்றி வளைக்கப்பட்டார்.

இவருடைய படையிலோ வெறும் 800 குதிரை வீரர்களும், மிகக்குறை வான காலாட்படை வீரர்களும் மட்டுமே இருந்தார்கள். ஆல்பிஜென்ஸியப் பதிதர்களின் விருப்பப்படி சீமோனின் மீது வெற்றி கொள்ளும் நோக்கத்தோடு ரேமண்ட் அவர் மீது படையெடுத்து வந்திருந்தான். சீமோனின் இராணுவ அதிகாரிகள் வந்து, தாங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளதாக அவருக்கு அறிவித்தபோது, அவர் பூசை கண்டு கொண்டிருந்தார்.

"முதலில் பூசை முடியட்டும். அதன்பின் நான் உங்களோடு வந்து சேர்ந்து கொள்வேன்'' என்று எந்த கலக்கமும் மின்றி அவர் பதிலளித்தார்.

பூசை முடிந்த பிறகு அவர் தமது படைகள் ஏற்கெனவே ஒன்றாகக் கூட்டப்பட்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்றார். கடவுளில் தங்கள் நம்பிக்கையை வைக்குமாறு அவர் அவர்களுக்கு அறிவுறுத்தினார். அதன்பின் பட்டணத்து மதில்கள் திறக்கப்பட ஆணையிட்டார். அவை திடீரென திறக்கப்பட்டவுடன், நெருங்கிவந்து கொண்டிருந்த எதிரிப் படைக்குள், வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப் போல மின்னல் வேகத்தில் ஊடுருவிச் சென்ற அவருடைய படை, சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் எதிரிப்படையை நிலைகுலையச் செய்தது. சற்று நேரத்திற்குள் சீமோன், ஆர்கானின் அரசனைத் தாக்கி வீழ்த்த, எதிரிப்படைகள் சிதறியோட, அன்று ஒரு மகிமையான வெற்றி, நற்கருணை நாதரால் அவருக்கு முடியாகச் சூட்டப்பட்டது.

பேரரசர் லோத்தேர் தம் படைகளுடன் போர்க் களத்தில் இருந்த போதும் கூட, ஒவ்வொரு நாளும் மூன்று பூசைகள் கண்டார் என்று பரோனியஸ் அறிவிக்கிறார்.

முதலாம் உலகப் போரின்போது, பிரெஞ்ச் மற்றும் பிரிட்டிஷ் படைகளின் தளபதி மார்ஷல் ஃபாக் என்பவர், தமது நிலை மிக மோசமானதாக இருந்த போதிலும், தினமும் பூசை கண்டுவந்தார்.

ஜெர்மனியின் பேரரசர் ஓத்தோம் என்பவர் ஒரு நாள் மிக அதிகாலையில் வார்ம்ஸ் நகரிலிருந்த தம் அரண்மனையில் ஒரு ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, தமது முக்கிய அதிகாரிகளும், ஆலோசகர்களும் அக்கூட்டத் திற்கு வரும்படியாக அழைத்தார்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு பெற வேண்டிய இளவரசர்களில் ஒருவராகிய பொஹீமியாவின் பிரபுவுக்கு ஒவ்வொரு நாளும் பூசை காணும் வழக்கம் இருந்தது. ஆகவே அவர் அரசரின் அரண்மனைக்கு வந்து சேர தாமத மாகிவிட்டது.

இந்தத் தாமதத்தால் பேரரசர் கடுங்கோபத்திற்கு உள்ளானார். பொஹீமியாவின் பிரபுவுக்காகக் காத்திராமல், அவர் கூட்டத்தை உடனே தொடங்கிவிட்டார். அந்தப் பிரபு வரும்போது கூடியிருப்பவர்கள் யாரும் அவரை வரவேற்கவோ, அவருக்கு வணக்கம் செலுத்தவோ கூடாது என்று பேரரசர் கட்டளையும் தந்தார்.

சற்று நேரத்திற்குப் பிறகு, பொஹீமியாவின் பிரபு ஆலோசனை மண்டபத்திற்குள் நுழைந்தார். அப்போது கூடியிருந்த அனைவரும் அதிசயிக்கும் விதமாக, முதலில் திகைத்துப் போனவராகத் தோன்றிய பேரரசர், அவசரமாக தம் சிம்மாசனத்திலிருந்து எழுந்து. பொஹீமியாவின் பிரபுவுக்கு சகல வித மரியாதைகளையும் செலுத்தலானார். மிக முக்கியமான அரசாங்கக் காரியங்கள் விவாதிக்கப் பட்டபோது, தம்மிடம் நிகழ்ந்த இந்தத் திடீர் மாற்றத்தைக் கண்டு, தம் ஆலோசனைச் சபையினர் வியந்து போயிருப்பதைக் கவனித்து, அதற்கான காரணத்தை அவர்களுக்கு விளக்கினார்:

"அவர் உள்ளே வந்தபோது, அவருக்கு இரு பக்கங்களிலும் துணைக்கு வந்த இரண்டு தேவதூதர்களை நீங்கள் காணவில்லையா? அதனால்தான் என் கோபத்தை வெளிப்படுத்த நான் துணியாமல், அதற்கு நேர்மாறாக அவருக்கு உரிய மரியாதையைச் செலுத்தினேன்!''

விசுவாசிகளில் மிகத் தாழ்ந்தவர்களுக்கும், பக்தியோடு பூசை கண்ட எந்த அந்தஸ்தினருக்கும் கூட இதுபோன்ற அற்புதமான உபகாரங்கள் அருளப்பட்டிருக்கின்றன.