உத்தரியம்

1250களில் புனித சாமிநாதரிடம் ஜெபமாலை யையும், புனித சைமன் ஸ்டாக்கிடம் கார்மல் உத்தரியத்தையும் தன் அன்பின், பாதுகாப்பின் அடையாளமாய் மாதா தந்தார்கள். ஒருநாள் ஜெபமாலையைக் கொண்டும், உத்தரியத்தைக் கொண்டும் உலகத்தைக் காப்பாற்றுவேன் என்றார்கள்.

புனித மர்கரேட் மரியம்மாளின் ஆன்ம குருவான புனித கிளாட் தெ கொலம்பியரின் கருத்துப்படி மாதாவின் மிகச் சிறந்த பாதுகாப்பை ஒருவன் பெறுவதில் உத்தரியமே முதலிடம் வகிக்கிறது. ஏனெனில் அது மட்டுமே மாதாவின் கீழ்க்காணும் வாக்குறுதியைப் பெற்றுள்ளது.

''உத்தரியம் அணிந்து மரிப்பவர்கள்
நரக நெருப்பில் விழ மாட்டார்கள்.''

மாதாவின் எவ்வளவு பெரிய வாக்குறுதி இது! ''உத்தரியம் மாதாவுக்கு நம் அர்ப்பணிப்பின் அடை யாளம்" என்கிறார் பாப்பரசர் 12 - ஆம் பத்திநாதர். அது மாதாவின் ஆடை. ஒரு அலுவலகத்தின் சீருடை போல் மாதாவின் பிள்ளைகளின் சீருடை உத்தரியம்.

உத்தரியம் என்பது கறுப்பு அல்லது பழுப்பு நிற இரு கம்பளித் துண்டுகளைக் கொண்டது. உடலின் முன் பின்னாக அணியக் கூடியது. கத்தோலிக்கக் குருவிட மிருந்து முறைப்படி உத்தரியம் அணிவோர் அதனைப் பரிசுத்த நிலையில் முத்தம் செய்யும் ஒவ்வொரு முறையும் 500 நாள்பலன்பெற திருச்சபை அனுமதிக்கிறது.

500 நாள் பலன் என்பது 500 நாட்கள் கடும் தவம் செய்வதன் பலன்.

அருள் நிலையிலிருந்து உத்தரியத்திற்குத் தரப்படும் ஒரு முத்தத்தில் இது நமக்குக் கிடைக்கிறது. உத்தரியத்தை நேசிப்போம். மாதாவின் முந்தானைக்குள் மறைந்து கொண்ட பிள்ளைகளாகப் பாதுகாப்பு அடைவோம். ஒருவர் இறந்த அடுத்த சனிக்கிழமைக்குள் மோட்சம் சேர வேண்டுமானால் மூன்று நிபந்தனைகளை அனுசரிக்க வேண்டும்.

1. உத்தரியத்தை எப்பொழுதும் அணிந்திருக்கவேண்டும்.
2. திருமணமானவர்களும், திருமணம் ஆகாதவர்களும் தங்கள் தங்கள் நிலைக்கு ஏற்ப கற்பைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும்.
3. மாதாவின் அமல உற்பவப் புகழ்மாலை (மந்திரமாலை (Office of the Immaculate Conception) என்ற ஜெபத்தை ஜெபிக்க வேண்டும்.

கட்டளை ஜெபம் (Divine Office) ஜெபிக்கக் கடமைப்பட்டவர்கள் புகழ்மாலை சொல்லத் தேவையில்லை. இந்தப் புகழ்மாலை சொல்வதற்குப் பதிலாக ஜெபமாலை ஜெபிக்கும்படி மாற்றிக் கொள்ளலாம்.

பாப்பரசர் 22 ஆம் அருளப்பர் இதை அங்கீ கரித்துள்ளார். இது சனிக்கிழமைலுகை எனப்படுகிறது.