உத்தரிக்கிற ஸ்தலம்

இதைப் பற்றிய சிந்தனை அநேகமாய் அற்றுப் போயிற்று என்றே சொல்லலாம்.

உத்தரிக்கிற ஸ்தலத்தை மோட்சத்திற்கான waiting room (காத்திருக்கும் அறை) என்றே பலர் நினைக்கிறார்கள். மாறாக, நரக வேதனைக்கு எந்த வகையிலும் குறைவில்லாத வேதனை அது என்பதே புனிதர்கள் பலரின் போதனையும் அனுபவமும் ஆகும்.

அது எத்தனை காலம் நீடிக்கும் என்பதும் நாமறியோம். ஆனால் பாத்திமாவில் மாதா சொன்ன ஒரு விவரம் நம்மை நடுங்க வைக்கிறது. பாத்திமா காட்சிகளின் போது சிறுமி லூசியா 1917 மே 13 ஆம் நாள் மாதாவிடம், ''இறந்து போன அமெலியா என்ற 20 வயதுப் பெண் எங்கே இருக்கிறாள்?'' என்று கேட்க, "அவள் உத்தரிக் கிற ஸ்தலத்தில் இருக்கிறாள்; உலக முடிவு வரை இருப்பாள்'' என்று மாதா பதில் சொன்னார்கள்.

ஒருவேளை நம் உறவினரில் இறந்து போனவர்கள் இந்த நிலைக்கு ஆளாகியிருந்தால்! அவர்களைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை அல்லவா? பாவமன்னிப்பு நரகத்திற்கு ஒருவனைத் தப்புவிக்கும். ஆனால் பாவப் பரிகாரம் இவ்வுலகில் செய்யப்பட வில்லை எனில் பல ஆண்டுகள் உத்தரிக்கிற ஸ்தலத் தில் வேதனைப்பட நேரிடும்.

பாவசங்கீர்த்தனத்தில் கிடைப்பது பாவமன்னிப்பு. ஆனால் பாவத்திற்காகப் பரிகாரம் இவ்வுலகில் நாம்தான் செய்ய வேண்டும். உதாரணமாக ஒருவரைப் பற்றி அவதூறு சொல்கிறோம். பின் மனம் வருந்தி பாவசங்கீர்த்தனம் செய்கிறோம். பாவமன்னிப்புப் பெறுகிறோம். ஆனால் சொன்ன அவதூறை நீக்க முயற்சி எடுத்திருக் கிறோமா? அல்லது யாரைப் பற்றி அவதூறு சொன்னோமோ அவரிடம் மன்னிப்பு கேட்கிறோமா? இல்லையே. வெறும் பாவசங்கீர்த்தனத்தோடு நிறுத்திக் கொள்கிறோம். விளைவு! பாவமன்னிப்பு மட்டும் பெறுகிறோம். பாவப்பரிகாரம் செய்யப்படவில்லை .

எனவே உத்தரிக்கிற ஸ்தலத்தில் கடுமையாகப் பரிகாரம் செய்ய நேரிடும். இவ்வுலகில் பரிகாரம் செய்வது எளிது. உத்தரிக்கிற ஸ்தலத்தில் அது மிகக் கடினம். எனவே அவர்களுக்கு உதவுவது நம் கடமை. லூக்.16:1-9 இதை நமக்குத் தெளிவாக்குகிறது.

கடவுளிடம் கடன்பட்ட உத்தரிக்கிற ஆன்மாக்கள் கடனை நாம் நம் பரிகாரத்தால் தீர்க்க முடியும். விளைவு! ஒரு நாள் நாம் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கும்போது, நம்மால் விடுவிக்கப்பட்ட ஆன்மாக்கள் நிலையான உறைவிடமாகிய மோட்சத்தில் நம்மை வரவேற்க தங்கள் ஜெபத்தால் நமக்கு உதவுவார்கள் (லூக். 16:9).

மரித்த நம் முன்னோரை நவம்பர் 2 அன்று மட்டும் நினைவு கொள்ளாமல் ஆண்டு முழுவதும் நினைவில் கொண்டு வந்து அவர்களுக்காகப் பரிகார முயற்சிகள் செய்வோம். ஒரு நாள் நாமும் இறக்கும்போது உலகம் நம்மை மறந்தாலும், நம்மால் விடுவிக்கப் பட்ட ஆன்மாக்கள் நமக்காய்ச் செபிக்க மறக்க மாட்டார்கள்.

உத்தரிக்கிற ஸ்தலம் திருச்சபையின் தீர்க்கமான விசுவாச சத்தியம். ஆயர்கள் தங்கள் மந்தைக்கு உத்தரிக்கிற ஸ்தலம் பற்றிய போதனை களை அளிக்க வேண்டும் என்கிறது திரிதெந்தின் சங்கம் (25ஆம் அமர்வு, 04.12.1563).

உத்தரிக்கிற ஸ்தலம் பற்றிய பைபிள் குறிப்புகள் : ரூத் 2:20, 2 மக்கபே. 12:43 46; மத். 5:25 26; லூக். 16:1 9 ; 1 கொரி. 3:15; 1 அரு. 5:16 17.