கடவுளும் நாமும் - ஆசாபாசம்

121. ஆசாபாசங்கள் எவை?

வேகமாய் உள்ளத்திலிருந்து கிளர்ந்தெழுந்து, செயலுக்குக் காரணமாகிற தீவிரமான உணர்ச்சிகளாகிய விருப்பு, வெறுப்பு ஆகியவை இரண்டும் ஆசாபாசம் எனப்படும்.

122. இவை இரண்டுக்கும் உதாரணம் கூறு.

இன்பத்தைத் தரும் நிகழ்ச்சிகளிலும், விஷயங்களிலும் பற்றுதல், ஆசை, மகிழ்ச்சி, ஆர்வம், துன்பம் தரும் காரியங்களிலும், நிகழ்ச்சிகளிலும் வெறுப்பு, அருவருப்பு, கோபம், பயம் ஏற்படுவதாகும்.

123. நம்மை பாவத்துக்கு செலுத்தக்கூடிய ஆசாபாசங்கள் எவை? 

(1) நமக்கு விருப்பமான காரியங்களில்:- சாப்பிடவும், குடிக்கவும் ஆசை; சிற்றின்பப் பிரியம் அல்லது காமம், பண ஆசை அல்லது பொருளாசை, மகிமை, கீர்த்தி, அதிகாரம் இவைகளின் மேல் பற்றுதல், விநோதப் பிரியம், இன்ப சுகபோகப் பிரியம்.

(2) நமக்குப் பிரியமில்லாத காரியங்களில்:- துன்ப வருத்தங்கள், முயற்சி முதலியவைகளை வெறுத்தல் ; பிறரை அருவருத்தல், பகை, காய்மகாரம், பொறாமை, கோபம், துன்பம், எடுத்த காரியங்களில் தோல்வி, நஷ்டம் வருமோ என்னும் அச்சமும், சந்தேகமும், அல்லது பிறர் மீதுள்ள பயம்.

124. ஆசாபாசம் எழும்புவதற்குக் காரணம் என்ன? 

அதை கிளர்ந்தெழச்செய்யும் காரியங்களைப் பார்ப்பதால், அல்லது அவற்றைப்பற்றி யோசிப்பதால் உண்டாகிறது.

125. இதை விளக்க சில உதாரணங்கள் கூறுக.

அன்னபானத்தை கண்டதும், அல்லது உணவுப் பொருட்களை முகர்ந்ததும் அவற்றின் மேல்விருப்பம் உண்டாகிறது. காமத்தைத் தூண்டும் பொருட்களைக் கண்டதும் அல்லது தொட்டதும் சிற்றின்பப் பிரியம் உண்டாகிறது. நமக்குப் பிரியமில்லாத அல்லது அருவருப்பான ஆளையோ அலலது பொருளையோ கண்டால் கோபம் உண்டாகிறது. பொருளைக் காணாவிட்டாலும் அந்த நினைவே நமக்கு வெறுப்புண்டாக்கப் போதுமானது.

126. ஆசாபாசம் எழும்பாதபடி தடுக்கக்கூடுமா?

நமது ஐம்புலன்களை அடக்குவதால் தடுக்கலாம்.

127. நமது புலன்களை அடக்குவது எப்படி?

ஆசாபாசத்தை எழுப்பக்கூடிய பொருட்களிடத்தே அவைகளைச் செல்லவிடாமல், வேறு விஷயங்களைக் கவனிக்கும்படி அவற்றைச் செலுத்துவதால் அடக்கலாம். 

128. இதை சில மேற்கோளுடன் விளக்குக.

பாவத்துக்கான ஆசை, அல்லது கோபம் வருவிக்கத் தக்க பார்வைகளிலிருந்து கண்களைத் திருப்பிக் கொள்ளுதல்; அதுபோன்ற காரியங்களைக் கேட்காதபடி செவிப் புலனைத் தடுத்தல்; சிற்றின்ப உணர்ச்சியை உண்டாக்கும் பொருட்களைத் தொடாதிருத்தல், போசனப் பிரியத்தை உண்டாக்கும் உணவு வகைகளை ருசிபார்க்காமல் இருத்தல் ஆகிய போன்றவை.

"கடவுள் நமக்குக் கண்களும், கண் இமைகளும் கொடுத்திருக்கிறார். இமைகள் என்னத்துக்கு? பார்க்காதபடி உன் கண்கள் பார்க்கும்படி; உன் இமைகள், பார்க்காதபடி தடுப்பதற்கு உனக்கு இருக்கின்றன. இவ்வுலகில் பற்பல கெட்ட பொருள்கள் உண்டு. அவைகளைப் பார்க்காதபடி கண் இமைகளையும், நல்ல பொருட்களைப் பார்ப்பதற்குக் கண்களையும் கடவுள் கொடுத்திருக்கிறார். கண் இமைகளைப் பயன்படுத்து; கெட்ட காரியங்களைப் பார்க்காதே! (Bernard Vaughan)

"தன்னைத்தானே அடக்கியாள்வதில், மிகச் சிறந்த வீரச்செயல் யாதெனில் ருசி பார்த்தும் அருந்தாமல் இருப்பது" என்று ஒரு விஞ்ஞானி வர்ணித்திருக்கிறார்.

129. இதன் பொருள் என்ன?

ஏதேனும் ஒரு உண் பொருளை ருசி பார்த்தபின் சாப்பிடாமல் இருப்பகைவிட ருசி பார்க்காமல் இருப்பது எளிது. இப்படியே மற்ற நான்கு புலன்களைப் பற்றியும் கூறலாம்.

130. கெட்ட பொருட்களிலிருந்து நமது புலன்களைப் பாதுகாப்பது எப்போதும் சாத்தியப் படக்கூடியதா? 

முழுவதும் கூடுமான காரியமல்ல இது. ஆனால் ஆசாபாசம் எழும்பத் துவக்கினவுடன், அது எவ்வளவுதான் நமக்கு இன்பமளித்த போதிலும், நம்மால் இயன்றவரை அப்பொருட்களிலிருந்து விலக முயற்சி செய்யவேண்டும்.

131. ஒருபோதும் ஆசாபாசம் எழும்பாமல் தடுக்கக்கூடுமா? 

எப்போதும் அது எழும்பாமல் தடுப்பது நம்மால் ஆகும் செயலல்ல. ஆனால் அது எழும்பியவுடன, அதை அடக்கிக் கட்டுப்படுத்திப் பாவத்துக்கு வழியாகாதபடி தடுக்கக்கூடும்

132. ஆசாபாசத்தை அடக்குவது கடினமா?

மிகவும் தீவிரமாக ஆசாபாசம் எழும்பிவிட்டாலும் அதற்கு இடங்கொடுத்து. அது நம்மை மேற்கொள்ளும்படி விட்டுவிட்டால், பிறகு அதை அடக்குவது கடினம்; ஆனால், ஆரம்பத்தில் அது எழும்பினவுடன் அடக்குவது சற்று எளி தாகவே இருக்கும் 

133. ஆசாபாசத்தை ஆரம்பத்தில் அடக்குதல் எளிதாதல் எப்படி? 

ஏனெனில் சாதாரணமாய், அது அமைதியாக ஆரம் பித்துவா தீவிரம் கொண்டு இறுதியில் அடக்குவதற்குக் கடினமாகவிடுகிறது. இதனால் துவக்க நிலையில் இருக்கும் போதே அதை அடக்கியாளுவது எளிது. இதுபற்றியே வள்ளுவரும், இளைதாக முண்மரம் கொள்க! களையுநர் கைகொல்லும் காழ்த்த விடத்து" என்று கூறியுள்ளார். அதாவது முள் மரம் சிறிய செடியாக இருக்கும் போதே பிடுங்கி எறிந்து விடுதல் நலம்; ஏனெனில் அது மரமாகிவிட்டால் அதை அழிக்க வருகிறவர்களின் கையைப் பதம் பார்த்துவிடும் என்பது பொருள். ஆசா பாசத்தின் நிலையும் இப்படித்தான்! 

134. ஆசாபாசம் எழும்பின பிறகு அதை அடக்குவது எவ்விதம்? 

(1) அதை எதிர்த்து நிற்கும் மனத்திடனைக் கையாள வேண்டும்.

(2) அதைத் தூண்டும் பொருட்களிலிருந்து விலக வேண்டும்.

(3) வேறு ஏதாவது நல்ல காரியத்தின் மேல் நமது சிந்தனையைச் செலுத்த முயற்சிக்க வேண்டும்.

(4) தவறான செயலைச் செய்வதற்கு உடலுறுப்புகள் முயற்சி செய்யாதபடி தடுக்கவேண்டும்.

(5) நாம் மனவுறுதியாயிருக்கும்படி கடவுளைப் பிரார்த்திக்கவேண்டும். 

135. கெட்டசெயலில் உடல் பிரவேசித்துவிட்டால் நாம் எனன செய்ய வேண்டும்? 

உடனே அதை அடக்கி, நமது உள்ளத்தைத் திடப் படுத்திக்கொண்டு அதை மறந்து போவதற்கு ஏதுவான வேறு எந்தக் காரியமாகிலும் செய்யவேண்டும்.

136. ஆசாபாசத்துக்கு இடங்கொடுத்தால் என்ன நேரிடும்?

நாம் ஒருதடவை ஆசாபாசத்துக்கு இடங்கொடுத்தால். மறுதடவை அது, அதிக தீவிரமாய் எழும்பும். இவ்விதமாக அடிக்கடி அதற்கு உடன்படுவதால், அது நமக்கு ஒரு ''பழக்கம்'' ஆகிவிடும்.

137. பழக்கம் என்பது என்ன?

ஆசாபாசம் அடிக்கடி வேகமாகவும், விரைவாகவும் எழும்பி. உடனே செயல்படும் தன்மை ஏற்படக் காரணமாயிருப்பதைத் தான் பழக்கம் என்கிறோம்.

138. ஒரு பழக்கம் ஏற்பட்ட பின் அதைத் தள்ளி விடக்கூடுமா?

கடினமான முயற்சியால் ஆகும் காரியமேயன்றி எளிதல்ல.

139. இதிலிருந்து நாம் அறியக்தக்கது என்ன?

ஆசாபாசத்தைத் துவக்கத்திலேயே அடக்கி, அது முதிர்த்து பழக்கமாகி விடாதபடிக்கு தடுக்க முயலவேண்டும். இவ்விதம் செய்தால், நல்லவழியில் நடப்பது எளிதாயிருக்கும். இவ்விதம் செய்யாமல் அசட்டையாக இருந்தால், நல்ல வழியில் நடக்க நாம் எப்போதும் போராடிக்கொண்டே இருக்கவேண்டும்.