கடவுளும் நாமும் - பாவம்

116. ஆன்மீக தீமை அல்லது பாவம் என்றால் என்ன? 

தேவகட்டளையை மீறுவது பாவம். சிருஷ்டிகராகிய இறைவனுக்காகப் படைக்கப்பட்ட மனிதன், அவரது சொற்படி கேட்டு, அவரோடு ஒன்றித்து வாழவேண்டியது அவனது கடமை. அப்படியின்றி அவன் இறைவனைவிட்டு விட்டு, ஏதேனும் ஒரு படைப்புப்பொருள் மேல் (மனிதன், பொருள்) பற்று வைத்து, அதைச் சார்ந்து நின்று இறைவனை எதிர்த்து நிற்கும் நிலை பாவ நிலை எனப்படும்.

117. கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட ஆன்மா கடவுளை எதிர்க்க முடியுமா? 

ஆதியில், சாத்தானை நம்பி தேவகட்டளையை மீறிய ஆதித்தாய் தந்தையரின் பாவத்தோஷம், மனுக்குலம் முழுவதையும் பாதித்துவிட்டது. பாவ நாட்டத்துடன் தான் எல்லா மனிதரும் பிறக்கின்றனர். தனக்குள்ள மனச் சுதந்திரத்தை உபயோகப்படுத்தி, பாவ நாட்ட நேரத்தில், தேவகட்டளையை மீறவும், அல்லது மீறாது தேவகட்டளையை அனுசரிக்க வேண்டிய தீர்மானம் செய்வதும் மனிதனேயாவான். கடவுள் இந்த சுதந்திரத்தைப் பெரிதும் மதிப்பதால், அவனை வற்புறுத்தி பாவத்தையோ, புண்ணியத்தையோ அவன் தன் விருப்பத்துக்கு மாறாகச் செய்யும்படி கட்டாயப்படுத்தமாட்டார். ஆனால், அவனுக்குப் போதிய அளவு அறிவையும், உதவியையும் கொடுப்பார் என்பது உறுதி. தனனலங்கருதுபவனே கடவுளை எதிர்த்து நிற்பான்

118. தேவகட்டளை என்றால் என்ன?

மனிதன் இவ்வுலகில், நன்முறையில் வாழவும், மறுவுலகில் நித்தியத்துக்கும், இன்பவாழ்வு அடையவும், அதற்குரிய வழிவகைகளாக கடவுள் அவனுக்குக் கொடுத்துள்ள விதிகளே தேவகட்டளையாகும். இவற்றை இறைவன் கற்பித்து, அனுசரிக்கும்படி கூறியிருப்பதால், இவற்றை தேவ கட்டளை என்று கூறுகிறோம்

119. இந்தவழியைக் கடவுள் தான் காட்ட வேண்டுமா? 

ஆம். ஏனெனில், இவ்வுலக வாழ்க்கையில் நம்மைப் பராமரிப்பவர் அவரே. மறுவுலக வாழ்வில் நமது பேரின்பமாக இருப்பதும் அவரே. எனவே, அதற்குரிய வழியை, அவரே காட்டுதல் பொருத்தமான தேயாகும்.

சரீரத்தின் அதம தத்துவங்கள். 

120. சரீர தத்துவங்கள் யாவை?

உடல் உறுப்புகள், ஆசாபாசங்கள், உறுப்புகளின் அசைவு முதலிய செயல்கள் ஆகியவை சரீர தத்துவங்களாகும்.