கடவுளும் நாமும் - வீண் தீர்மானம்

79. வீண் தீர்மானம் ஆவதென்ன?

(1) தக்க முகாந்தரமின்றி அற்ப சொற்ப அடையாளத்தைக் கொண்டும்,

(2) ஒருவன் இன்னென்ன குற்றங்களைக் கட்டிக் கொண்டானென்றும், அல்லது இன்னென்ன தீய குண முள்ளவனென்றும், 

(3) மனது பொருந்தி,

(4) மனதுக்குள்ளேயே உறுதியாகத் தீர்ப்பு செய்வது வீண் தீர்மானமாகும்.

80. வீண் தீர்மானம் செய்வது பாவமா?

பிறர் தன்னை மதிக்க வேண்டுமென்று எதிர்பார்க்க ஒவ்வொருவனுக்கும் உரிமையுண்டு. அயலார் மீது சரியான ஆதாரமின்றி, மனதுக்குள்ளேயே உறுதியாகத் தீங்கு நினைக்கிறவன் அந்த உரிமையைப் பறித்துக்கொள்ளுவதனால், நீதிக்கும், பிறர் சிநேகத்துக்கும் விரோதமான பாவம் கட்டிக்கொள்ளுகிறான். "ஒருவரையும் குற்றவாளிகளாகத் தீர்க்காதேயுங்கள்" (லூக். 6/37) என்பது கிறிஸ் துவின் பொன்மொழி.

81. அது எப்படிப்பட்ட பாவம்?

மேற்கூறிய நான்கு காரியங்கள் எல்லாம் கனமான விஷயத்தில் ஒருங்கே சேர்ந்திருந்தால், அவ்வித வீண் தீர்மானம் கனமான பாவமாகும். இந்த நான்கில் ஏதேனும் ஒன்று குறைந்தால் கனமான பாவமாகாது.

82. வீண் தீர்மானம் செய்கிறவர்கள் யார்?

(1) தக்க காரணமின்றி, மனது பொருந்தி பிறர் மீது மன வெறுப்புக்கு இடங்கொடுக்கிறவர்கள்,

(2) பிறத்தியான் ஒரு கிரிகை செய்யும் போது உதவாத நோக்கத்தோடு அதைச் செய்தான் என்றும்,

(3) அவனுடைய நியாயங்களைக் கேட்காமல் அவனைக் குற்றவாளி என்றும்,

(4) அவன் ஓரு குற்றத்தைச் செய்ததினாலே அதை வழக்கமாய்ச் செய்வான் என்றும் தீர்மானிக்கிறவர்கள்.

83. கெடுதலான சந்தேகம் என்றால் என்ன?

தக்க காரணமின்றி, பிறனுடைய நடத்தையைப்பற்றி வீண் சந்தேகத்துக்கு மனது பொருந்தி இடம் கொடுக்கிறது.

84. பிறரைப்பற்றிய வீண் தீர்மானம் செய்யாமல், அவன்மீது தக்க முகாந்தரமின்றி தவறான சந்தேகத்துக்கு இடம் கொடுத்தால் பாவமா? 

இதில் தவறுவது சாதாரணமாய் அற்ப குற்றமாக இருக்கும்.

85. பிறர் மனதிலே கெட்ட அபிப்பிராயம் கொள்ள நமக்கு வரக்கூடிய ஆபத்துகளை நீக்கி எச்சரிக்கையாக இருக்கும்படி சில ஏற்பாடுகளைச் செய்து கொள்வது பாவமா? 

இல்லை. அது குற்றமாகாதது மின்றி, புத்திசாலித்தனமாக இருக்கும். உதாரணம்- அவர்களிடம் அதிகப் புழக்கம் இல்லாது இருப்பது.