105. மனது அல்லது சித்தம் என்றால் என்ன?
உறுதியாக யாதொன்றை விரும்பவும், வெறுக்கவும் எவ்விதமாய் நடப்பது உசிதமானது என்று தீர்மானிக்கும் உள தத்துவமே மனது என்று சொல்லப்படும்.
106. மனதின் தொழில் என்ன?
சத்தியம், நன்மை இவைகளைத் தேடுவதும், பொய், தீமை ஆகியவற்றை நீக்குவதும் மனதின் தொழிலாகும்.
107. நன்மை என்பது என்ன? அது எத்தனை வகைப்படும்?
தேடுகிறவர்களுக்கு மன நிறைவையும், அவர்களது வாழ்க்கைக்குப் பிரயோஜனமாகவும் இருக்கும் நன்மையுள்ள எதுவும் நன்மை என்று சொல்லப்படும். நன்மை பலவகைப்படும். ஐம்புலன்களுக்கும் திருப்தி அளிக்கக் கூடிய இடம், பொருள், மக்களின் குண நலன்கள், முதலியவை இவ்வுலகத்துக்கடுத்த நன்மைகள் எனப்படும். ஆன்மாவின் தத்துவங்களுக்கு நிறையை அளிக்கத்தக்க மன திம்மதி, தெய்வீக ஒன்றிப்பு (இவ்வுலகிலோ அல்லது மறுவுலகிலோ) ஆகியவை ஞான நன்மை அல்லது ஆன்மீக நன்மைகள் எனப்படும்.
108. உலகுக்கடுத்த நன்மைகளில் மேலும் சிலவற்றைக் கூறுக.
நுண்ணறிவு, திறமை, பேச்சுத்தன்மை. மதிப்புக்குரிய தன்மை, அழகு, உடல் நலம், செல்வம், சுற்றுச்சுழல் முதலியனவாகும்.
109. இவற்றை அடைய உரிமையுள்ளவர்கள் யார்?
நாட்டுக்காகவோ, கடவுளின் சேவைக்காகவோ, வேறு மேலான கருத்துக்காகவோ, இவற்றை முழுவதுமோ அல்லது சிலவற்றையோ மாத்திரம். நேர்ச்சி வாக்குறுதிகள் மூலம் துறந்து விட்டவர்களைத் தவிர மற்ற யாரும் இவற்றை அடைய உரிமையுண்டு.
110. இவ்வுரிமையைக் கொடுக்கக் கடமைப்பட்டவர்கள் யார்?
ஒப்பந்தம். பிறப்புரிமை, பிரஜா உரிமை முதலிய நியாயமான வழியில் கேட்கும் உரிமையாளர்க்குக் கொடுக்க எல்லோரும் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
111. இந்த நன்மைகளை தேடும் விதமென்ன?
கடவுள் மனிதனைத் தனக்காக உண்டாக்கினார்; மற்ற சிருஷ்டிகளை மனிதனுக்காக உண்டாக்கினார். இந்த நன்மைகளின் சிருஷ்டிகர் கடவுள் ஆகவே இவற்றைத் தேடுபவர்கள் கடவுளின் திட்டப்படியும். விருப்பப்படியும் தேடுவது சிறந்தது; இதை வாழ்க்கை சட்டம் என்று கூறலாம்.