விக்ரக ஆராதனை

விக்ரக ஆராதனைகூடாது என்பதற்கு ஒன்றல்ல, இரண்டல்ல, நூற்றுக்கணக்கான வசனங்களை பைபிளில் ஆதாரம் காட்டலாம். ஆனால் எது விக்ரக ஆராதனை என்பதுதான் பிரச்சினை.

விக்ரக ஆராதனைக்கு எதிராகக் காட்டப்படும் மிக முக்கிய வசனம் பத்துக் கட்டளைப் பகுதி. யாத்திராகமம் 20 ஆம் அதிகாரம், அதாவது (வி.ப. 20:3-4). இதில் இரு பகுதி கள் உள்ளன. 1. விக்ரகங்களைச் செய்யவே கூடாது. 2. அவைகளை ஆராதிக்கக் கூடாது.

எனவே தான் பொற்கன்றுக்குட்டியை ஆராதித்தவர்கள் தண்டிக்கப் பட்டார்கள். ஏனெனில் தங்களைக் காத்த கடவுளை விட்டுவிட்டு இல்லாத தெய்வத்தை உருவாக்கினார்கள்.

ஆனால் அதே கடவுள் யாத்திராகமம் 25:17-22இல் தனது பிரசன்னத்தைக் காட்ட இரண்டு பொன் வானதூதர்களை கெரு பிம்களைச் செய்யச் சொல்கிறார். அங்குதான் நான் இருப்பேன் என்கிறார். மோயீசனும், ஆரோனும் இதன் முன் விழுந்து வணங்கினர் (எண்.20:6).

யோசுவாவும் இஸ்ராயேல் மக்களும் விழுந்து வணங்கினர் (யோசுவா. 7:6).

எனவே கடவுளுக்கு எதிரானவை விக்ரகம் - தண்டனைக்கு உரியவை என்றும், கடவுளது பிரசன்னத்தைக் குறிப்பவை விக்ரகம் அல்ல, மாறாக வணக்கத்துக்கு உரியவை என்றும் உணர வேண்டும்.

மேலும் இஸ்ராயேல் மக்களைப் பாம்புக் கடியிலிருந்து குணப்படுத்த வெண்கலப் பாம்பைச் செய்து அதை உற்று நோக்கச் சொன்னார் (எண். 21:4 - 9). ஆண்டவர் இயேசுவையும் உற்று நோக்கச் சொன்னார் (யோவான் 19:37).

எனவே கடவுளைச் சார்ந்தவை விக்ரகங்கள் அல்ல! மேலும் இஸ்ராயேல் மக்கள் ஆராதித்த உடன்படிக்கைப் பேழைக்குள் இருந்தவை பின்வருமாறு: (எபி.9:4)

1. மன்னா - (இன்று நற்கருணை )
2. கற்பலகை - (இன்று பைபிள்)
3. ஆரோனின் கோல் - (இன்று புனிதர்களின் திருப்பண்டம்).

இவை பார்வைக்கு விக்கிரகங்கள் போலத் தோன்றும். ஆனால் தமது பிரசன்னத்தை இவற்றின் வழியாகவே கடவுள் காட்டினார்.

ஆக, திருச்சபை சரியாகத்தான் சொல்லித் தருகிறது. நாம்தான் போலி வழிகாட்டிகளைப் பின் பற்றாமல் இருக்க வேண்டும் (மாற்கு . 13:22 - 23).

மேலும் கடவுள் தாமே விரும்பி சாலமோன் மூலம் கட்டிய ஆலயம் முழுவதும் சம்மனசுக்களின் பிரம்மாண்டமான உருவங்களும், பிற உருவங்களும் நிறைந்திருந்தன (1 அர. 6:23 - 36).

எனவே கடவுளுக்கு எதிரானவை விக்கிரகங்கள்; கடவுளைச் சார்ந்தவை சுரூபங்கள். ஆண்டவர் இயேசுவும் உருவங்களை அங்கீகரித்தார் (லூக். 20:24-25).

மேலும் கத்தோலிக்கம் உருவங்களைத் தெய்வங்களாக அங்கீகரிப்பதில்லை. அதையே பற்றிக் கொண் டிருப்பதும் இல்லை. அவை வணக்கத்துக்குரிய வெறும் அடையாளங்களே!

ஒரு சுரூபம் உடைந்து விட்டால் வேறு சுரூபம் மாற்றப்படும்.

மேலும் புனித அந்தோனியார், புனித குழந்தை தெரேசம்மாள், புனித செபஸ்தியார் போன்றவர்களின் உருவங்கள் நம்மில் நல்ல சிந்தனையையும் பக்தியையும் வளர்க்குமே அல்லாமல் நம்மைக் கெடுப்பதில்லை.