குழந்தை / முழுக்கு ஞானஸ்நானம்

கத்தோலிக்கரை ஏமாற்றவும், பயமுறுத்தவும் பயன்படுத்தப்படும் மற்றொரு அஸ்திரம் முழுக்கு ஞானஸ்நானம்.

ஆனால் பைபிளில் ஒரு இடத்தில் கூட ஆற்றில் முழுகி எழுந்தார்கள் என்று குறிப்பிடப்படவில்லை. ஒரு வாதத்திற்கு ஆற்றில் மூழ்கி எழுந்ததாக வைத்துக் கொண்டால், ஏசுவைப் போல் ஞானஸ்நானம் பெறுவதாகச் சொல்பவர்கள் யோர்தான் ஆற்றில் முழுகாமல் தொட்டியில் மூழ்கி எழுவது தவறல்லவா?

எனவே தவறான ஒன்றைச் சொல்லி கத்தோலிக்கரைக் குழப்புகிறார்கள். இதற்கு இவர்கள் உதாரணம் காட்டுவது யோவான் ஸ்நாபக அருளப்பர் கொடுத்து ஆண்டவர் பெற்ற ஞானஸ்நானம். ஆனால் அந்த ஞானஸ்நானம் தேவையற்றது என அதைக் கொடுத்த யோவானே கூறுகிறாரே (மத். 3:13-15; யோவான் 1:32-34).

இயேசு ஞானஸ்நானம் பெற்றதும், விருத்தசேதனம் பெற்றதும், சிலுவையில் அறையப்பட்டதும் அவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே! புதியவற்றைத் தொடங்கவே!

மேலும் அப். பணி.19:3 - 5 இன்படியோவானின் ஞானஸ்நானம் தேவையற்றது. மேலும் 1 பேதுரு 3:21இன்படி ஞானஸ்நானம் உடலின் அழுக்கைப் போக்குவதற்கு அல்ல. எனவே முழுகிக் குளிக்க வேண்டியது இல்லை.

எசே. 36:25 இன் படி ஞானஸ்நானத்தில் நம்மைத் தூய்மைப்படுத்துபவர் கடவுள். எனவே அவர் நம்மீது தெளித்தாலே போதும்; நாம் தூய்மை ஆவோம்.

மேலும் குழந்தை ஞானஸ்நானம் அவசியம்; ஏனெனில் ஒவ்வொருவனும் பிறக்கும்போதே பாவத்தில் பிறக்கிறான் தி. பாடல் . 51:5 அல்லது சங். 50:5).

அப்படியானால் அவன் வயது முதிர்ந்து ஞானஸ்நானம் பெறும் முன் இறந்து போனால் அவனது கதி என்ன? எனவே குழந்தை ஞானஸ்நானம் அவசியம்; அது குழந்தைகளுக்கு உரியது (அப். பணி. 2:3839).

விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்படைவான் என்பது நற்செய்தி அறிவிக்கப்படும்போது விசுவசிக்க வேண்டிய பெரியவர்களைக் குறிக்குமே யல்லாது குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கிடையாது என்று அர்த்தமல்ல!

ஆண்டவர் இயேசு பெரியவர் ஆகட்டும் என்று மாதாவும் சூசையப்பரும் காத்திருக்காமல் சிறு வயதிலேயே விருத்தசேதனம் செய்விக்கவில்லையா?

நமது பிள்ளைகள் பெரியவராகி அவர்கள் விருப்பம் போல் படிக்கட்டும் என்று விட்டு விடாமல் சிறு வயதிலேயே நம் விருப்பப்படி பள்ளியில் சேர்ப்பதில்லையா?

எனவே சிறு வயது ஞான ஸ்நானம் என்பது நல்ல கிறிஸ்தவக் குடும்பங்களின் கடமையாகும். இதைச் செய்வது தவறல்ல! செய்யத் தவறுவதுதான் தவறாகும். மேலும் மத். 19:14ன்படி குழந்தைகளுக்கு மீட்பு கிடைப்பதைத் தடுக்கலாகாது!

நாம் அறியாமல் பிறப்பில் வந்த ஜென்மப் பாவம், அறியாத குழந்தைப் பருவத்தில் போக்கப்படுவதே சரி!