கடவுளும் நாமும் - தீமை

112. தீமை என்றால் என்ன?

நன்மையைத் தேடுபவர்கள், அதை அடைய முடியாதபடி தடையாக இருப்பதே தீமை எனலாம். இவ்வுலக வாழ்வில் ஏற்படும் இடையூறுகளை, இவ்வுலகுக்கடுத்த தீமையென்றும், மறுவுலக வாழ்வை அடைய முடியாதபடி தடுக்கக் கூடியதை ஆன்மீக தீமை அல்லது பாவம் என்று சொல்லலாம்.

113. உலக வாழ்வுக்கடுத்த தீமை யாவை?

ஐம்புலன்களும் விழையும் இன்பம் கிடைக்காததினால் ஏற்படும் ஏமாற்றம், அயர்வு, களைப்பு, நோய், வறுமை, அறியாமை, மடமை, அவகீர்த்தி, திக்கற்ற நிலை, உறுப்புக் குறைகள், புலக்குறைவு முதலியனவாகும்.

114. இந்த தீமைகளுக்குக் காரணம் என்ன?

இந்த தீமைகளின் காரணத்தை, உள்ளவாறு கடவுள் ஒருவரே அறிவார். தீமையை அனுமதிப்பவர் அவரே, அந்தத் தீமையைக் கொண்டும், அதன் வழியாகவும், தான் விரும்பும் நன்மையை அடையக்கூடியவர் அவர் ஒருவரே! ஏனெனில், கடவுள் ஒருவரே தீமையின் வழியே நன்மையை விளைவிக்கும் ஆற்றல் உடையவர்"- என்பது அறிஞர் கண்ட அனுபவ உண்மை. நாம் சொல்லக்கூடியது எல்லாம் இதுதான். அதாவது;

(1) கடவுள் ஒருவனுக்கு தீமைநேர அனுமதிக்கும் போது அவனைத் தண்டித்து, நரகில் தள்ள வேண்டுமென்ற தீய கருத்துடன் அவனுக்குத் தீமையை அனுப்ப மாட்டார். அதைக்கொண்டு அவனோ அவனைச் சுற்றியுள்ளவர்களோ, தங்களின் உண்மை நிலையை அறிந்து, தங்களைத் திருத்திக்கொண்டு, கடவுளை அதிகமாக நேசிக்க வேண்டும் என்பதற்கே. அதை அனுமதிக்கிறார் என்று உறுதியாகச் சொல்லலாம் சிலர் கூறுவதுபோல, இது முன் வினைப்பயன் இல்லை, அவ்வாறு நினைப்பது தவறாகும்.

(2) ஒருவன் மேல் வைத்த இரக்கத்தின் பயனாக, அவனுக்குத் துன்பத்தைக் கொடுத்து. அவன் அதனால் தன் குற்றங்களுக்கு இவ்வுலகிலேயே பரிகாரம் செய்யவும் திருவுளமாயிருக்கலாம் அல்லது பிறருடைய குற்றங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுக்கும்படியும் அனுமதித்து இருக்கலாம்.

(3) அவனது விசுவாசத்தை சோதித்து அறியும் கருவியாகவும், துன்பத்தைக் கொடுத்திருக்கலாம்.

115. இவ்வாறு துன்பங்கள் வந்தபோது நாம் செய்யவேண்டியது என்ன? 

ஒருவன் எந்த நன்மையையும் தானாக சம்பாதித்துக் கொள்ள முடியாது. ஆதலால் அதைப்பற்றி பெருமைப் படுவதற்கு இடமில்லாதது போல துன்பம் வந்த காலத்திலும், தனது சொந்தக் குற்றத்தினால் வந்திருக்க வேண்டு மென்று தன்னையே வருந்திக் கொள்ள வேண்டியதில்லை. பிறர் தனக்கு, மனம் பொருந்தி தீங்கு செய்ததாகக் காணும் போது கூட, கடவுளது சித்தமில்லாமல் நடந்திருக்காது. ஆதலால் அவர்களை விரோதித்துப் பழிவாங்க நினைக்கவும் கூடாது. பிறரைக் குறை கூறுவதிலும் பயனில்லை. 

ஆகவே துன்பம் முடிவடையும் வரை சகிப்புத்தன்மையுடன் பொறுமையாக இருந்து குறையை நியாயமான வழியில், நீக்கிக் கொள்ளத் தன்னால் இயன்ற அளவில் முயற்சி செய்தல் நல்லது. துன்பத்தை அனுப்பும் இறைவன் இரக்கமுள்ளவர் என்றால் அவரைப்பற்றி முறையிட்டுத் தகாதவிதமாகப் பேசுதல் தேவ தூஷணமாகும்.