நல்லது. மேலானது, சிறந்தது.

125. நாம் கடின முயற்சியுடன் அடையக்கூடியவற்றில் நற்குணபான்மையிலும் சிறந்தது ஏதாவது உண்டா ? 

உண்டு. நற்குணபான்மையில் மேலானது. உயர்ந் தது என்று சிறந்த நற்குணபான்மைகளும் உண்டு. 

126. உயர்ந்த மனிதன் மக்களுள் சிறந்தவன் எனக் கருதப்பட வேண்டுமாகில் அவனது வாழ்க்கை எவ்வாறு இருக்கவேண்டும்? 

சகல பாவங்களையும், தீய வழிவகைகளையும் விலக்கி, கடவுளுடைய கற்பனைகளையெல்லாம் அனுசரிப்பதுமின்றி. தனது உள் தத்துவங்களை சிறந்த முறையில் உபயோகித்து அற்ப சொற்ப குற்றங்குறைகளையும் தவிர்த்து, மனிதனால் செய்யக்கூடிய உயர்ந்த நற்கிரிகைகளைச் செய்து தனது வாழ்க்கையை விளங்கச் செய்ய வேண்டும்.

127. மனிதருள் யாரும் மேற்கூறியவாறு உயர்ந்த முறையில் வாழ முடியுமா? 

ஆம். யாரும் தனது உள் தத்துவங்களையும், புலன் களையும் தனக்கு இயல்பாக அமைந்துள்ள சக்திகளைக் கொண்டு ஆண்டு நடத்தி உயர்ந்தவனாகிவிட முடியும் என்று கூறமுடியாது. ஆனால் கடவுளின் விசேஷ உதவி யில் நம்பிக்கைவைத்து அதற்காக முயன்று உழைத்து மேன் மேலும் புண்ணியத்தில் வளர யாவராலும் கூடும்.

128. உத்தம தனம் அல்லது புனிதத்தன்மை அடைய எவ்விதம் முயற்சி செய்ய வேண்டும்? 

ஒரு சிறந்த மனிதனின் உயர்ந்த தன்மையை நமது சிந்தனையில்வைத்து, எண்ணிப்பார்த்து, அந்த உயர்ந்த தன்மையை நாமும் அடைய வேண்டும் என்று விரும்புவதி னால் புனிதத்தன்மையை அடைவதற்கு முயற்சி செய்வது போலாகும்.

நாம் ஏதேனும் ஒரு புண்ணியத்தில் தேர்ச்சி அடைய வேண்டும் என விரும்பினால் அப்புண்ணியத்தினால் சிறந்து விளங்கிய ஒரு மகானை அதாவது ஒரு புனிதரை. நமது மாதிரிகையாக வைத்துக்கொண்டு அதன்படியே எப் போதும் நடக்க முயற்சிக்க வேண்டும்.

129. ஒரு புனிதன் ஆக அல்லது நீதிமான் ஆக இயல்பிலேயே நமக்கு ஆசை உண்டோ ? 

உண்டு; "உற்றவிடத்து உன்ன தமேற் சிந்தை கொள்வோம்"- என்பது இதற்கு எடுத்துக்காட்டாகும். நம்மைச் சேர்ந்தவர்கள், சிறந்த புண்ணியங்களும், நற்குணங்களும் உள்ளவர்கள் என்று கண்டால், அவர்களுடைய அந்த நற்பண்புகளைப் பாராட்டிப் புகழ்ந்து, அவர்களைப்போல் நாமும் ஆகவேண்டும் என்று ஆசை கொள்ளுகிறோம்.

130. இந்த ஆசை உண்டாவதற்குக் காரணம்என்ன ?

கடவுளே, இதை நமது மனதில் பதித்திருக்கிறார். ஏனெனில் கடவுள் சிறந்த நன்மைத்தன முள்ளவர். நம்மால் இயன்ற மட்டும், முயன்று, அவரைப் போல் இருக்க வேண் டும் என்பது அவருடைய விருப்பம் நம்மைப் புனிதர் களாக உண்டாக்கவில்லை. ஆனால் நாம் அதற்காக வருந்தி உழைக்க வேண்டும் என்று நம்மை இவ்வுலகில் வைத்திருக் கிறார். " உங்கள் பரமபிதா உத்தமராயிருப்பது போல, நீங்களும் உத்தமராயிருங்கள்" என்பது கிறிஸ்து பெருமா னின் ஆவல். நமக்கு புனிதத் தன்மையின் மேல், விருப்பம் உண்டாகும்படி நம்மைவிட சிறந்ததை நேசித்து, தேடும் படியான ஆர்வத்தை நமது ஆன்மாவில் அமைத்திருக்கிறார்.

131. இந்த ஆர்வத்தை செயல்படுத்த ஒருவன் செய்யவேண்டியது என்ன? 

(1) தன்னிடம் ஏதேனும் குற்றங்குறைகள் கண்டால், அது பாவம் இல்லாவிடினும், அதை நீக்கத் தன்னால் இயன்றவரை முயற்சி செய்ய வேண்டும்.

(2) ஒரு நற்கிரிகை செய்ய சமயம் வாய்க்கும் போது அதைச்செய்யத் தனக்குக்கடமை இல்லாவிட்டாலும், அதைச் செய்யவேண்டும்.

(3) எல்லா விஷயத்திலும் மேலானதையே செய்து பழகவேண்டும். ''உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என் னும் பொன் மொழியை நினைவில் வைத்துச் செயலாற்ற வேண்டும். 

132. இவற்றைச் சில எடுத்துக்காட்டுகளால் விளக்குக. 

(1) நாகரீகமற்ற பேச்சு. பண்பாடற்ற செயல்கள், மூர்க்கம். முரட்டுத்தனம், கயமை தன்னலம் பாராட்டுதல், அசட்டைத்தனம், கவனக்குறைவு - இவைகளை நீக்க வேண்டும்.

(2) பிறர் நம்மைக் கேட்காமுன்பே அவர்களுக்கு உதவிசெய்தல், பிறருக்காக உபகாரமாக எந்த விதமான தொழிலையும் செய்ய முன் வருதல் ; பலக்குறைவானவர்களை யும், சக்தியற்றோரையும் ஆதரித்தல் ; பொறுமையுடன் சகல துன்பதுயரங்களையும் சகித்துக்கொள்ளல் ; நம்மால் இயன்ற அளவு கடவுளைத்துதித்து ஆராதித்தல் முதலியன.

(3) குற்றம் செய்த பிள்ளையை நீதியின்படி தண்டித் துத் திருத்துவது நலமாயிருக்கலாம்; வேறுசமயம் இரக்கப் பட்டு மன்னிப்பது ஏற்ற தாயிருக்கலாம்; வியாதிக்காரரைக் கவனிக்கும்படியாக, ஒருவனுக்கு சம்பளம் கொடுத்து உதவுவதைவிட, தானே அந்த நோயாளியைப் பேணி. மருந்து கொடுத்து பாதுகாப்பது, சிலசமயங்களில் சிறந்த பிறர் சிநேக கிரிகையாகலாம் ; பிறர் சொல்வதைப் பொருட்படுத்தாமல் நமது தீர்மானப் படியே நடப்பது சில வேளைகளில் நலம் ; வேறுசிலசமயங் களில் பிறர் சொல்வதைக் கேட்டு நடப்பது, அதைவிட சிறந்ததாக இருக்கும். எனவே இடம், பொருள் முதலியன கருதி, எது மிகவும் சிறந்ததோ அதைச் செய்யவேண்டும். இத்தகைய வாழ்வைத்தான் வாழ்வாங்கு வாழ்தல்"என்று அறிஞர் கூறுகிறார்கள். இங்ஙனம் வாழ்பவனை, அவன் இவ்வுலகத்தில் வாழ்பவனாயினும், வானுல வாசியைப்போலப் புகழுடன் போற்றப்படுவான்.