சர்வேசுரனைப் பற்றிய அறிவை மனுக்குலம் பெற மாமரி வழியாயிருந்தார்கள்!

ஆதாமின் பாவத்திற்குப் பிறகு, மனிதர்கள் மென்மேலும் பாவத்தின் பாதாளத்தில் விழுந்து மூழ்கிப் போனார்கள். மனிதனுடைய இழிந்த நிலை, இனி மீட்டெடுக்கவே முடியாது என்று தோன்றும் அளவுக்கு அதிகரித்தது. 

பெருவெள்ளத்தின் அழிவுக்குப் பின்னரும், நீதிமானாகிய நோவேயின் சந்ததியாரும் கூட தங்கள் முந்தைய பாவச் சந்ததிகளையே கண்டுபாவிக்கத் தொடங்கினார்கள். கடவுளைப் பற்றிய மெய்யான அறிவும், சிந்தனையும் காணாமல் போயின. மனிதரின் மிகக் கீழான, மிக அருவருக்கத் தக்க உள்ளுணர்வுகளே ஒழுக்க விதிகளாக ஆக்கப்பட்டன. 

மனிதர்கள் இவற்றிற்கு உருவங்கள் தந்து அவற்றைத் தங்கள் தெய்வங்களாக ஆக்கிக்கொண்டார்கள். இவ்வாறு ஏராளமான பொய்த் தெய்வங்கள் தோன்றின.

உணரக் கூடியதையும், சரீரம் சார்ந்ததையும், புலன்கள் சார்ந்ததையும் மட்டுமே நேசிப்பது மனித சுபாவத்தைத் தரந்தாழ்த்துகிறது, அதை இழிவானதாக ஆக்குகிறது. ஆனால் மனுக்குலத்திடம் கொஞ்ச நஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த கடவுளைப் பற்றிய மிக அற்பமான அறிவை, மனிதன் தன் புலன் சார்ந்த அறிவோடு ஒன்றாக்கி, இவ்வாறு புலனின்பத்தைக் கடவுளாக்கி, இத்தகைய ஒரு தெய்வத்தைத் தன் வாழ்வின் வழிகாட்டியாகவும். தன் சொந்தமாகவும் கொண்டிருப்பதே தன் வாழ்வின் நோக்கமாகக் கருதினான். 

இது மெய்யங்கடவுளிடமிருந்து மனிதனை முழுமையாகப் பிரித்தது. அது மனிதனின் முழுமையான மனச் சிதறலாகவும் இருந்தது. இதன் முடிவு அறிவின் மரணமும், நல்லொழுக்கத்தின் மரணமும், அதன் விளைவான நித்திய மரணமுமேயன்றி வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

இவ்வாறு மனிதன் ஜுப்பிட்டர், ஜுனோ என்னும் தெய்வங்களில் சரீர இன்பத்தைத் தெய்வமாக்கினான். சுபாவத்திற்கு எதிரான அருவருக்கத் தக்க காரியங்களை ஆதோனிஸில் தெய்வமாக்கினான். கட்டுப்படுத்தப்படாத மிகப் பெரும் காம இச்சையை வீனஸிலும், அதீதமான புலன் இன்பத்தை பாக்கஸிலும், மிருக சக்தியைச் செவ்வாயிலும் தெய்வங்களாக்கினான். 

இன்னும் ஓராயிரம் மிகக் கீழ்த்தரமான காரியங்களும் இவ்வாறு அவனால் தெய்வங்கள் ஆக்கப்பட்டன. நம் நாட்டில் மனித மனதின் அசுத்தங்கள் மட்டுமின்றி, மனிதன் எதற்கெல்லாம் பயந்தானோ அவையும் தெய்வங்களாக்கப்பட்டன. இவ்வாறு, இந்தப் பாவங்களைச் செய்வதன் மூலம் இந்தப் பொய்த் தெய்வங்களுக்கு வணக்கம் செலுத்தத் தன்னால் முடியும் என்று நம்ப அவன் முற்பட்டான். 

அதனால் தப்பறை மற்றும் அசுத்தமான கீழாங்கிஷ நிலையின் அடிவாரத்தில் அவன் மூழ்கிக் கிடந்தான். அவனுடைய ஆத்துமம் அவனுடைய இச்சைகளின் கீழ் செத்துக் கிடந்தது.

கடவுளே நேரடியாகத் தேர்ந்து கொண்ட ஆபிரகாமின் சந்ததியாகிய இஸ்ராயேல் மக்களினமும் கூட பல முறை இந்த விக்கிரகங்களின் வழிபாட்டுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து, அதனால் கடவுளின் கடுங்கோபத்திற்கு ஆளானதை நாம் பழைய ஏற்பாட்டில் பல முறை வாசிக்கிறோம்.

மெய்யங்கடவுளை அறிந்து, அந்த அறிவின் பலனாக அவரை நேசித்து, அந்த நேசத்தின் தூண்டுதலால் அவருக்கு ஊழியம் செய்து, அதனால் இரட்சணியம் அடைய வேண்டியவனாக மனிதன் இருக்கிறான். 

ஆனால், மேற்கூறிய நிலையில், உண்மையான தேவ அறிவுக்கு மனுக்குலம் திரும்பக் கொண்டு வரப்படுவது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லை என்று தோன்றியது. 

ஏனெனில் மனிதன் சுபாவப் படி சடப்பொருளான சரீரத்தோடும், அரூபப் பொருளான ஆத்துமத்தோடும் படைக்கப்பட்டிருந்ததால், சுத்த அரூபியாக மட்டுமே இருக்கிற கடவுளை விசுவசிப்பதும், அவரை நேசிப்பதும் அவனுக்கு மிகக் கடினமான செயலாக இருந்தது. 

சில திருச்சபைத் தந்தையர் கூறுகிறபடி, விக்கிரக வழிபாடு முற்றிலுமாக ஒரு வழிதவறுதலாக இருந்தது மட்டுமின்றி, அது ஓர் அந்தரங்க உணர்வாகவும் இருந்தது. கண்ணுக்குத் தெரியாத கடவுளை அறிந்து நேசித்து சேவிக்க மனிதனால் இயலவில்லை. தனது உணர்வுகளுக்குள் நுழைய வல்லவரும், தன்னைக் கண்டு பரிதாபப்படக் கூடியவருமான ஒரு கடவுளை அவன் தேடினான்;. தான் தொட்டு உணரக்கூடிய ஒரு கடவுளுக்காக அவன் ஏங்கினான்;. அவர் பேசுவதைக் கேட்க விரும்பினான். இப்போது, மனிதாவதாரத்தின் மூன்றாவதான ஒரு நோக்கம் படிப்படியாக நம் கண்முன் விரிவதைக் காணுங்கள்!

இந்நிலையில், மனுக்குல இரட்சணியத்திற்கு ஒரே ஒரு சாத்தியமான வழிதான் இருந்தது. அது: ஒரு காணக்கூடிய கடவுள், ஒரு தேவ-மனிதன், ஓர் எம்மானுவேல் ஆவார். 

இவ்வாறு, மனிதனின் சுபாவமான அக உணர்வுகள் மற்றும் அவனுடைய பலவீனத்தின் வழியாகவே, தம்மைப் பற்றிய அறிவுக்கும், தம் மீதான நேசத்திற்கும் அவனைத் திருப்பிக்கொண்டு வர கடவுள் சித்தங்கொண்டார். 

ஆகவே, தம்முடைய ஏக பேறானவரும், தமது அளவற்ற இலட்சணங்களின் அதே பொருண்மையுள்ள சாயலும், தாம் அனைத்தையும் யார் வழியாகப் படைத்தாரோ, அந்த வார்த்தையானவருமாகிய தம் திருச்சுதன் மாம்சத்தைத் தம்மோடு இணைத்துக்கொண்டு, காணக்கூடிய கடவுளாக, தேவ-மனிதனாக ஆக வேண்டும் என்றும், மெய்யானதும், சந்தேகத்திற்கு இடம் தராததும், தொட்டுணரக்கூடியதும், தயாள இரக்கமுள்ளதும், மனிதனுடைய பாவமில்லாத உணர்வுகளைத் தானும் உணரக் கூடியதும், துன்புறக் கூடியதுமான அந்த மனுஷீகத்தைக் கொண்டு தம்முடைய தெய்வீக அறிவிற்கும், நேசத்திற்கும் மனிதனைக் கவர்ந்திழுக்க வேண்டுமென்றும் கடவுள் தீர்மானித்தார்.

நம் ஆண்டவர் வந்தார்! மனிதன் இது வரை அருவருத்து வந்த சரீர பரிசுத்ததனத்தையும், கன்னிமையின் மகத்துவத்தையும், மனிதத்தன்மையையும், பிறர்சிநேகத்தையும் போதித்தார். அவருடைய சீடர்கள் அன்றைய மனிதனின் சிந்தனைக்கு எதிரானவற்றை போதித்து, அவர்கள் மீது வெற்றி கொண்டார்கள். 

கிறீஸ்தவ வேதம் காட்டுத் தீ போலப் பரவியது. விக்கிரங்கள் தகர்ந்து விழுந்தன, அசுத்தங்களில் விழுந்து கிடந்தவர்கள், இன்று சுரங்கக் கல்லறைகளில் சிலுவையில் அறையுண்டு பரிதாபமாக மரித்த ஒரு யூதரில் தங்கள் உண்மையான சர்வேசுரனைக் கண்டுகொண்டார்கள். அவருக்காக சிலுவையில் அறையப்படவும், சகல கொடூர கலாபனைகளுக்கும் உட்படவும் மகிழ்ச்சியோடு முன்வந்தார்கள்.

இந்த தேவ அறிவை மனிதன் பெற்றுக்கொண்டது எவ்வாறு நிகழ்ந்தது? பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஒளிரும் மேகம், செங்கடல், மனிதனின் கண்களுக்கு முன்பாகப் பிரிந்தது, மேகத் தூண், நெருப்புத் தூண், பற்றியெரிந்ததாகத் தோன்றிய சீனாய் மலை, மன்னா, பாறையிலிருந்து குடிநீர், சுடர் விட்டெரிந்த மோயீசனின் முகம் என்று, மெய்யான சர்வேசுரன் ஒருவர் இருப்பது பற்றிய பல அடையாளங்கள் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டதும் கூட அவனுக்குப் போதவில்லை. இரத்தமும், சதையுமாக, “நம்முடனே கூட வாசமாயிருக்கக்கூடிய” ஒரு கடவுளைக் காண அவன் ஏங்கிக் கொண்டிருந்தான்.

மனுவுருவான வார்த்தையானவரில் மனிதனுடைய இந்த ஏக்கம் திருப்தி செய்யப்பட்டது. கண்காணாதவராக இருந்த கடவுள் இப்போது சேசுக்கிறீஸ்துநாதரில் மனிதர் மத்தியில் வசிக்கிற கடவுள் ஆனார். அவர் வழியாக சர்வேசுரனைப் பற்றிய அநேக சத்தியங்கள் மனிதனுக்கு வெளிப்படுத்தப்பட்டன. 

ஆயினும், கண்காணாத கடவுளைப் பற்றிய இந்த அறிவையும், தேவ சிநேகத்தையும் தான் பெற்றுக் கொண்டதற்காக உலகம் ஒரு மகத்தான சிருஷ்டிக்குக் கடன்பட்டுள்ளது. அந்த சிருஷ்டி, அவதரித்த வார்த்தையானவராகிய சர்வேசுரனுடைய மாசற்ற திருமாதாவாகிய மாமரியே. ஏனெனில் அவர்களே தன் இரத்தத்தால் தன் உதரத்தில் தேவ-மனிதனை உருவாக்கினார்கள். அவர்களே மனித சுபாவத்தால் அவரை உடுத்தினார்கள். 

“கசப்பான கடல்” என்பது மாமரி என்னும் திருப்பெயரின் பொருள். “இரட்சகர்” என்பது சேசு என்னும் திருப்பெயரின் பொருள். சேசுநாதரின் மிகக் கொடிய திருப்பாடுகளும், மாமரியின் வியாகுலங்களுமாகிய கசப்பான கடல் இல்லாதிருந்திருந்தால், சேசு என்னும் இரட்சணியம் நமக்குக் கிடைத்திருக்க வாய்ப்பேயில்லை. 

மாமரி இல்லையெனில் நமக்கு இரட்சணியம் இல்லை. ஒரு கன்னித்தாயாரிடமிருந்து தமது மனித சுபாவத்தை எடுத்துக் கொள்ளும்படி கடவுள் செய்ததாகிய இந்தப் பரம இரகசியத்தைப் பற்றி அடுத்த கட்டுரையில் நாம் விளக்கமாகப் பார்ப்போம்.