285. பாவசங்கீர்த்தனம் என்பது என்ன?
ஆயரால் அங்கீகரிக்கப்பட்ட குருவானவரிடத்தில் பாவப்பொறுத்தல் அடையவேண்டும் என்கிற கருத்துடன், தான் செய்த பாவங்களை வெளிப்படுத்துவதே பாவசங்கீர்த்தனமாம்.
286. தான் செய்த பாவங்களை எல்லாம் குருவானவரிடத்தில் சொல்ல வேண்டியதா?
இன்னும் சங்கீர்த்தனம் செய்யாத சகல சாவான பாவங்களையும் ஒன்றும் ஒளியாமல் அகத்தியமாய்ச் சொல்லவேண்டும். அற்ப பாவங்களையோ வெனில் வெளிப்படுத்துவது பிரயோசன மென்றாலும் அது கடமையல்ல.
287, பாவ சங்கீர்த்தனத்தில் ஏதோ ஒரு சாவான பாவத்தை மறைக்கிறவர்களுக்கு மன்னிப்பு கிடைக்குமா?
இல்லை. அது கள்ளப் பாவசங்கீர்த்தனமாகும். ஆனதினால் சொல்லப்பட்ட மற்ற பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைக்காதது மன்றி தேவ துரோகம் என்கிற ஒருகனமான பாவமும் உண்டாகும்.
288. நினைப்பில்லாமல் ஒரு சாவான பாவத்தை மறந்திருந்தால் பாவ சங்கீர்த்தனம் கள்ளப் பாவ சங்கீர்த்தனமாகுமோ?
ஆகாது. ஆனால் அடுத்த பாவ சங்கீர்த்தனத்தில் மறந்துபோன பாவத்தை வெளிப்படுத்துவது கடமை.
289. தன் பாவங்களைச் சொன்ன பிறகு பாவ மன்னிப்பை அடைவதற்கு இன்னமும் தேவையானதென்ன?
இன்னமும் இயேசுநாதருடைய பெயராலே குருவானவர் கொடுக்கும் பாவப் பொறுத்தல் ஆசீர்வாதம் தேவை.
290, பாவப்பொறுத்தல் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு அபாத்திரவான்களாயிருக்கிறவர்கள் யார்?
பிரதான வேத சத்தியங்களை அறியாதவர்களும். பிறரோடு பகையாயிருக்கிறவர்களும். செய்த திருட்டு, அநியாயம். அவமானம் முதலிய பொல்லாப்புகளுக்குக் கூடின பரிகாரம் செய்ய மனதில்லாதவர்களும். சாவான பாவ அந்தஸ்தையும் அதற்கு ஏதுவான சமயங்களையும் விலக்க மனமில்லாதவர்களும் பாவப்பொறுத்தல் ஆசீர்வாதம்பெற அபாத்திரவான்களா யிருக்கிறார்கள்.
291. பாவசங்கீர்த்தனம் செய்து முடித்தபின் செய்ய வேண்டியது என்ன?
சர்வேசுரனுக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்யவும், கூடிய சீக்கிரம் அபராதக் கட்டளையைத் தீர்க்கவும், குருவானவர் கற்பித்த புத்திமதிகளை கவனித்து அனுசரிக்கவும் வேண்டியது.
292. குரு கட்டளையிட்ட அபராதத்தை தீர்க்கிறது என்பது என்ன?
பாவ உத்தரிப்புக்காக குருவானவர் கட்டளையிட்ட செபம். தபம், தான தருமம் முதலிய நற்கிருத்தியங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதாம்.
293. குருவானவர் இட்ட அபராதக் கட்டளையைத் தீர்த்தபிறகு, இன்னமும் பாவங்களுக்கு உத்தரிக்க வேண்டுமோ?
ஆம். அந்த அபராதத்தை தீர்த்த பிறகு, அநேகமாய் நம் பாவங்களுக்குரிய - அநித்திய தண்டனைக்கு சரியான பரிகாரம் செய்யப்படாததினால். நாம் செபதப தான தருமம் செய்து நமக்கு நேரிடும் கஸ்தி நோய் முதலிய துன்பங்களைப் பொறுமையோடு சகித்து, விசேஷமாய் ஞானப்பலன்களைப் பெற்று பரிகாரம் செய்ய வேண்டும்.
294. திருச்சபையில் வழங்கும் ஞானப்பலன்கள் என்பது என்ன?
ஏற்கனவே மன்னிக்கப்பட்ட பாவங்களுக்குரிய அநித்திய தண்டனையின் விமோசனம்.
295. ஞானப்பலன்களுக்கு ஆதாரம் என்ன?
திருச்சபை பொக்கிஷமாகிய யேசு கிறிஸ்து நாதருடைய அளவற்ற பேறுபலன்களும், சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய பேறுபலன்களுமாம்.
296. ஞானப்பலன் எத்தனை வகை உண்டு?
பரிபூரணப்பலன், அபூரணப்பலன் ஆகிய இரண்டு பலன்கள் உண்டு .
297. பரிபூரணப்பலன் என்பதென்ன?
திருச்சபை குறித்த ஒரு பக்திக் கிருத்தியத்தை நிறைவேற்றுவதினால் அநித்திய தண்டனைக்கு முழுதும் விமோசனம் செய்யும் பலனானது பரிபூரணப்பலன் எனப்படும்.
298. அபூரணப்பலன் என்பதென்ன?
திருச்சபை குறித்த ஒரு பக்திக் கிருத்தியத்தை நிறைவேற்றுவதினால் அநித்திய தண்டனையின் ஒரு பாகத்திற்கு மாத்திரம் விமோசனம் செய்யும் பலனானது அபூரணப் பலன் எனப்படும்.