நோயில் பூசுதல், குருத்துவம் ஆகிய இவ்விரண்டு தேவதிரவிய அனுமானங்களின் பேரில்.

299. நோயில் பூசுதல் ஆவதென்ன?

வியாதிக்காரர்களிடத்தில் மீதியாகிய பாவங்களுக்குப் பரிகாரமாகவும் அவர்களுடைய ஆத்துமத்துக்கும் சரீரத்துக்கும் ஆறுதலாகவும் உண்டாக்கப்பட்ட தேவத்திரவிய அனுமானம். 


300. இதில் சொல்லப்பட்ட பாவத்தின் மீதியானது அல்லது மீதியாகிய பாவம் என்பதென்ன? 

அநித்திய தண்டனை, ஞான பலவீனம், பாவத்துக்கு சார்பு. மரண பயங்கரம். பாவ சங்கீர்த்தனம் செய்யக்கூடாத வியாதியஸ்தனிடத்தில் மிஞ்சியிருக்கும் பாவங்கள் இவை முதலியவைகளாம். 


301. நோயில் பூசுதல் பாவங்களை போக்குமோ?

ஆம். பாவ சங்கீர்த்தனம் செய்யக்கூடாதிருக்கும்போது அடிமை மனஸ்தாபப்படுகிற நோயாளியின் பாவங்களைப் போக்கிவிடும். 


302. நோயில் பூசுதல் சரீர சவுக்கியத்துக்கு உதவுமா? 

சரீர சவுக்கியம் திரும்பி அடைவது வியாதிக்காரனுடைய ஆத்தும நன்மைக்குப் பிரயோசனமாயிருந்தால் நோயில் பூசுதல் சரீரத்துக்கு உதவும். 


303. நோயில் பூசுதல் பெற வேண்டியது யார்? 

கடின வியாதிக்காரரே பெற வேண்டும். ஆனால் மரணத் தருவாய்மட்டும் காத்திருக்கலாகாது. 


304. குருத்துவம் ஆவதென்ன?

திவ்விய பூசை செய்யவும் தேவத்திரவிய அனுமானங்களை நிறைவேற்றவும் சுதந்திரம் கொடுக்கிற தேவத்திரவிய அனுமானம்,


305, திருச்சபையில் வழங்கும் குருத்துவத்துக்குரிய திருப்பட்டங்கள் எவை? 

1. ஆயர், 2. குரு, 3. தியாக்கோன் என்னும் மூன்று மேலான பட்டங்களும், இவைகளுக்கு கீழாக இரண்டு உப்பட்டங்களுமாம்.


306. குருத்துவத் தேவத்திரவிய அனுமானத்தைக் கொடுக்க யாருக்கு அதிகாரம் உண்டு?

ஆயருக்கு மாத்திரம் அதிகாரம் உண்டு. 


307, குருத்துவ அந்தஸ்திற்கு அழைக்கப்பட்டவர்கள் மட்டில் கிறிஸ்துவர்களுடைய கடமைகள் எவை? 

1-வது - குருக்களை சந்தித்து அவர்களுடைய புத்திமதிகளைக் கேட்கவும். தேவ ஊழியத்துக்காக அவர்களுக்குக் கூடிய உதவி செய்யவும், 

2-வது - சர்வேசுரன் தமது திருச்சபைக்கு பக்தி வைராக்கியமுள்ள குருக்களைத் தந்தருளும்படி மன்றாடவும். 

3-வது - தாய் தந்தையர் தங்கள் பிள்ளைகளை அநியாயமாய்த் தடுக்காமல் தேவ ஏவுதலுக்கு இணங்கும்படி சுயாதீனமாய் விட்டு விடவும் வேண்டும்.