மனஸ்தாபத்தின் பேரில்.

274. மனஸ்தாபம் ஆவதென்ன?

தான் செய்த பாவத்தால் சர்வேசுரனுக்குத் துரோகம் செய்வதைப் பற்றி மனம் நொந்து. துக்கித்து. இனி செய்வதில்லை என்று பாவத்தை வெறுத்து விடுவதே மனஸ்தாபம். 


275. பாவப்பொறுத்தலை அடைவதற்கு பாவத்தின் மேல் மனஸ்தாபப்படுவது அவசியமா? 

முழுவதும் அவசியம். மனஸ்தாபம் இல்லாமல் ஒரு போதும் பாவப்பொறுத்தல் அடைய முடியாது. 


276. நல்ல மனஸ்தாபத்திற்கு இருக்க வேண்டிய குணங்கள் யாவை? 

அது சுபாவத்திற்கு மேற்பட்டதுமாய். எல்லாப் பாவத்திற்கும் பொதுவுமாய், எல்லாத் துக்கத்திற்கும் மேலானதுமாயிருக்க வேண்டியது. 


277, எத்தனை வகை மனஸ்தாபம் உண்டு?

உத்தம மனஸ்தாபம், அடிமை மனஸ்தாபம் ஆகிய இரண்டு உண்டு . 


278. உத்தம மனஸ்தாபம் ஆவதென்ன?

தேவசினேகத்தின் முகாந்தரமாகப் பாவத்தையெல்லாம் வெறுக்கும் மனஸ்தாபமே உத்தம மனஸ்தாபம் எனப்படும் 


279. அடிமை மனஸ்தாபம் ஆவதென்ன?

தேவ ஆக்கினைகளின் பயத்தால் ஏவப்படும் மனஸ்தாபம். 


280. பாவத்தால் நேர்ந்த அவமானம், நஷ்டம், வியாதி முதலிய இலௌகீகத் தின்மைகளின் நிமித்தமாக வெறும் பயத்தால் உண்டாகிற மனஸ்தாபம் பாவமன்னிப்புக்குப்போதுமா? 

இல்லை. கொஞ்சமும் போதாது. அது மெய்யான மனஸ்தாபமல்ல.


281, உத்தம மனஸ்தாபத்தால் பாவிக்குக் கிடைக்கும் பலன் என்ன?

உத்தம மனஸ்தாபம் உண்டான மாத்திரத்தில் பாவ தோஷம் நீங்கி ஆத்துமம் தேவ இஷ்டப் பிரசாதத்தை அடையும். ஆயினும் சாவான பாவங்களைப் பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டிய கடமை இன்னமும் உண்டு.


282. அடிமை மனஸ்தாபம் மாத்திரம் பாவமன்னிப்பை அடையப் போதுமோ? 

அற்பப் பாவங்களின் மன்னிப்பை அடைவதற்கு போதும். அனால் சாவான பாவங்களின் மன்னிப்பை அடைவதற்கு அதோடு கூட பாவப்பொறுத்தல் ஆசீர்வாதம் பெற வேண்டும்.


283. நம்மிடத்தில் மனஸ்தாபம் உண்டாவதற்குச் செய்ய வேண்டியதென்ன? 

1-வது - ஆசையோடு சர்வேசுரனை மன்றாடி அதைக் கேட்க வேண்டும். 
2-வது - நீதி. தயவு, நன்மைத்தனம் முதலிய தேவ இலட்சணங்கள். தேவன் நமக்குச் செய்த உபகாரங்கள், யேசுநாதர் நமக்காகப் பட்டபாடுகள், சாவு, தீர்வை , நரகம், மோட்சம் ஆகிய மனுஷருடைய நான்கு கடைசி கதிகள் - இவை முதலியவைகளைக் குறித்து யோசனை செய்து தியானிக்க வேண்டும்.


284. இனி ஒரு பாவத்தையும் செய்வதில்லை என்கிற கெட்டியான பிரதிக்கினை என்பதென்ன? 

மெய்யான மனஸ்தாபம் உள்ளவன் இனி பாவத்தையும், பாவத்துக்கு ஏதுவான சமயங்களையும், விலக்கிபோடுவேன் என்று தெய்வ அருளால் செய்யும் உறுதியான தீர்மானமே பிரதிக்கினையாம்.