முதற்பாகம்: வேதசத்தியங்களின் பேரில்
முதற்பிரிவு - ஏகதிரித்துவ சர்வேசுரன் பேரில்
10. சர்வத்துக்கும் கர்த்தாவாயிருக்கிறவர் யார்?
சர்வேசுரன்.
11. சர்வேசுரன் என்பவர் யார்?
எல்லாவற்றையும் படைத்துக் காப்பாற்றும் சர்வ இலக்ஷண சம்பூரணராகிய சுத்த அரூபியே சர்வேசுரனாம்.
12. எத்தனை சர்வேசுரன்?
ஒரே சர்வேசுரன்.
13. ஒரே சர்வேசுரன் அல்லாமல் வேறே சர்வேசுரன் இருக்கக் கூடுமோ?
கூடாது: சர்வேசுரன் எல்லோருக்கும் மேலான கர்த்தாவாய் இருக்கிறபடியால் அவருக்கு சரியொத்த வேறொருவர் இருப்பது கூடாத காரியம்.
14. அவர் தேவசுபாவத்தில் ஒருவராகயிருந்தாலும் ஆள்வகையிலே எப்படியிருக்கிறார்?
திரித்துவமாயிருக்கிறார்.
15. திரித்துவமாயிருக்கிறார் என்பதற்கு அர்த்தமென்ன?
ஆள்வகையிலே மூவராயிருக்கிறாரென்று அர்த்தமாகும்,
16. இந்த மூன்று ஆட்களுக்கும் பெயரென்ன?
பிதா, சுதன். பரிசுத்த ஆவி.
17. பிதா என்பதற்கு அர்த்தமென்ன?
தகப்பன்.
18. சுதன் என்பதற்கு அர்த்தமென்ன?
குமாரன்.
19. பரிசுத்த ஆவி என்பதற்கு அர்த்தமென்ன?
பரிசுத்த அரூபி அல்லது பரிசுத்த ஞான ஆவியானவர்.
20. பிதா சர்வேசுரனோ?
சர்வேசுரன்
21. சுதன் சர்வேசுரனோ?
சர்வேசுரன்.
22. பரிசுத்த ஆவி சர்வேசுரனோ?
சர்வேசுரன்.
23. மூவரும் மூன்று சர்வேசுரனோ? ஒரே சர்வேசுரனோ?
ஒரே சர்வேசுரன்.
24. எப்படி ஒரே சர்வேசுரன்?
இந்த மூன்றாட்களுக்கும் ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே வல்லமை, ஒரே தேவசுபாவம் இருக்கிறபடியினாலே. மூவரும் ஒரே சர்வேசுரன்தான்.
25. இவர்களுக்குள்ளே வல்லபம் மகிமை முதலான இலட்சணங்களில் வித்தியாசமுண்டோ ?
இல்லை. மூவரும் எல்லாத்திலும் சரிசமானமாயிருக்கிறார்கள்.
26. அர்ச். திரித்துவத்தின் பரம இரகசியம் ஆவதென்ன?
பிதா, சுதன். பரிசுத்த ஆவி என்னும் மூன்று தேவ ஆட்கள் ஒரே சர்வேசுரனாயிருக்கிறார்கள் என்பதாம்.
27. இப்படி ஏகமுந் திரித்துவமுமாகிய சர்வேசுரனுக்குப் பிரதான இலட்சணங்கள் எத்தனை?
ஆறு,
28. ஆறுஞ் சொல்லு --
1. சர்வேசுரன் தாமாயிருக்கிறார்.
2. துவக்கமும் முடிவும் இல்லாமலிருக்கிறார்.
3. சரீரமில்லாமலிருக்கிறார்.
4. அளவில்லாத சகல நன்மை சுரூபியாயிருக்கிறார்.
5. எங்கும் வியாபித்திருக்கிறார்.
6. எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாயிருக்கிறார்.
ஆமென்.